Dec 6, 2011

வங்கக் கடலில் புயல்களைக் காணோம்

Share Subscribe
இந்தத் தலைப்பைப் பார்த்ததும் தமிழக மக்களில் பலர், “இப்போது தான் மழை ஓய்ந்து நிம்மதியாக இருக்கோம். புயல் தோன்றாமல் போனதால் இப்போ என்ன கெட்டுப் போச்சு” என்று பாய்வார்கள்.போதுமான மழை பெய்து விட்டது. ஆகவே புயல் தோன்றாவிட்டால் நல்லது தான். ஆனால் புயல்கள் தோன்றவில்லை என்பது செய்தி.

இந்த ஆண்டில் அக்டோபர் மாதக் கடைசியில் வட கிழக்குப் பருவமழை தொடங்கியது. நவம்பர் 30 வரை தமிழகத்திலும் புதுவையிலுமாகப் பெய்த மழை அளவு வானிலைத் துறையினரின் தகவலின்படி மொத்தம் 47 சென்டிமீட்டர். இது வழக்கமாக இந்த சமயத்தில் பெய்யக்கூடிய மழையை விட 35 சதவிகிதம் அதிகம்.

இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் கரையோரமாக பல தடவை காற்றத் தாழ்வு மண்டலங்கள் தோன்றின. ஆனால் ஒரு புயல் கூடத் தோன்றவில்லை.

2010 ஆம் ஆண்டில் கரையை நெருங்கும் புயல்
பொதுவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை விட புயலின் விரிவெல்லை அதிகம். நிறைய மழை மேகங்களை ஈர்க்கும். பரந்த வட்டாரத்தில் மழையைப் பெய்விக்கும். தவிர, புயல் என்பது நிலையாக நிற்பது கிடையாது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல நாட்கள் நீடித்துக் கழுத்தறுக்கும். இக்காரணத்தால் பல சமயங்களில் புயல்களை விட காற்றழுத்த மண்டலங்கள் தான் குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் அதிக மழையைக் கொண்டு வரும்.

நவம்பர் கடைசி வரையிலான காலத்தில் தமிழகத்தில் கூடுதல் மழை பெய்துள்ள அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் பெய்துள்ள மழை அளவு வழக்கத்தை விட 45 சதவிகிதம் குறைவு. ஒடிஷா(ஒரிசா) மாநிலத்தில பெய்துள்ள மழை அளவு வழக்கத்தை விட 83 சதவிகிதம் குறைவு.

வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் சென்னைக்குத் தென் கிழக்கே வங்கக் கடலில் மூன்று நான்கு புயல்களாவது உருவாகும். இவை தமிழகம், ஆந்திரம் அல்லது ஒடிஷாவில் கரை கடக்கும். இதன் பலனாக அப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும். வங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள் அபூர்வமாக வங்கதேசத்துக்குச் செல்வதும் உண்டு.

இப்படி வங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள் நவம்பர் மாதத்தில் அதிகமாக இருக்கும். டிசம்பரில் புயல்கள் தோன்றுவது அபூர்வம். டிசம்பர் 15 தேதிக்கு மேல் வட கிழக்குப் பருவ மழை நீடிப்பது கிடையாது. இந்த ஆண்டில் டிசம்பர் மத்தி வரை ஒரு புயல் கூடத் தோன்றாமல் போனால் அது அசாதாரண நிலைமையாகவே கருதப்படும்.

வடகிழக்குப் பருவ மழை என்பது நம்மூர் சமாச்சாரம் என்றாலும் காற்று மண்டலம் என்பது உலகளாவியது. உலகின் கடல்களும் சரி, ஒன்றோடு ஒன்று பிணைந்தவை. அந்த அளவில் உலகின் பிற பகுதிகளில் காணப்படுகிற நிலைமைக்கும் - குறிப்பாக பசிபிக் கடலில் இருக்கின்ற நிலைமைக்கும் - வட கிழக்குப் பருவ மழைக்கும் (அத்துடன் தென்மேற்குப் பருவ மழைக்கும் தான்) தொடர்பு உண்டு என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

உலகின் கடல்களில் பசிபிக் கடல் தான் மிகப் பெரியது. அக்கடலின் மேற்பரப்பில் உள்ள வெப்ப நிலை முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது -  இன்னும் சரியாகச் சொன்னால் பூமியின் நடுக்கோட்டில் அமைந்த பசிபிக் கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளின் மேற்பரப்பு.

அங்கு மேற்பரப்பு நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக் இருந்தால் எல் நின்யோ (El Nino) என்றும், வழக்கத்தை விட குறைவு என்றால் லா நின்யா(La Nina) என்றும் குறிப்பிடப்படுகின்றன (இவை ஸ்பானிஷ் மொழிச் சொற்கள்).

 2007 ஆம் ஆண்டில் தோன்றிய லா நின்யா:
கடல் நீரின் வெப்பம் வழக்கத்தை விடக் குறைவாக
உள்ளதை நீல நிறம் காட்டுகிறது.
பசிபிக் கடலின் மேற்படி பகுதிகளில் இப்போது லா நின்யா நிலைமை உள்ளது இந்த நிலைமையில் இந்தியாவில் நிறைய மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.

எல் நின்யோ லா நின்யாவுக்கு நேர் மாறானது. 2009 ஆம் ஆண்டில் பசிபிக் கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கடலின் மேற்பரப்பு நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் எல் நின்யா நிலைமை தோன்றி, அதன் விளைவாக இந்தியாவில் தென்மேற்குப் பருவ மழை பொய்த்தது.

வங்கக் கடலில் வழக்கமாகக் காணப்படுகின்ற புயல்கள் தோன்றாமல் போனது ஏன் என்பதற்கு வருகிற வாரங்களில் வெளியாகக் கூடிய ஆய்வறிக்கைகளில் காரணம் தெரிவிக்கப்படலாம்.

இந்தியாவின் பெரும் பகுதிகளுக்கு மழையை அளிக்கின்ற தென்மேற்குப் பருவ மழை பற்றி கடந்த பல ஆண்டுகளில் விரிவாகவே ஆராயப்பட்டுள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் ஒரு நிபுணரின் கருத்துப்படி வடகிழக்குப் பருவ மழை அந்த அளவுக்கு விரிவாக ஆராயப்படவில்லை.

இந்திய வானிலைத் துறையின் டைரக்டர் ஜெனரல் அஜித் தியாகி அண்மையில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தென்மேற்குப் பருவ மழை பற்றியே இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆகவே வட கிழக்குப் பருவ மழை பற்றி சொல்லவே வேண்டாம்.

No comments:

Post a Comment