Dec 28, 2011

வால் நட்சத்திரம் பூமிக்கு கிருமிகளைக் கொண்டு வருகிறதா?

Share Subscribe
வானில் அதிசயமாக ஒரு வால் நட்சத்திரம் தெரிந்தால் நாம் அனைவரும் ஆர்வத்துடன் அதைக் காண முற்படுவோம். ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரோ வால் நட்சத்திரம் கெட்ட சகுனமாகக் கருதப்பட்டது. மன்னர்களும் சரி, மக்களும் சரி, வால் நட்சத்திரத்தைக் கண்டு குலை நடுங்கினர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வால் நட்சத்திரங்கள் பெரும் பீதியைக் கிளப்பின.

வால் நட்சத்திரம் தலைகாட்டினால் தனது பதவிக்கு ஆபத்து அல்லது உயிருக்கே ஆபத்து என்று மன்னர்கள் அஞ்சினர். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆபத்து என்றும் கருதினர்.  ஐரோப்பாவில் ராஜ சபைகளில் ஆஸ்தான ஜோசியர் இருந்தார். வால் நட்சத்திரம் தென்படுகிறதா என்று வானை ஆராய்ந்து சொல்வது தான் அவரது வேலை. "மன்னா வால் நட்சத்திரம் தென்படுகிறது" என்ற ‘கெட்ட செய்தி’ சொன்னதற்காகவே சிறையில் தள்ளப்பட்ட ஜோசியர்கள் உண்டு.

வால் நட்சத்திரம் பூமியத் தாக்கி அழிப்பது போல
 வரையப்பட்ட படம் - ஆண்டு 1858.
சில ஜோசியர்கள் சாமர்த்தியமாக சமாளித்தனர். "மன்னா, கவலை வேண்டாம். வால் நட்சத்திரத்தின் வால் தான் ரொம்ப மோசம். வால் பக்கத்து நாட்டை நோக்கியதாக உள்ளது" என்று மன்னரிடம் ஜோசியர் கூற, பக்கத்து நாட்டு ஜோசியரோ, தனது மன்னரிடம், "மன்னா, வால் நட்சத்திரம் அடுத்த நாட்டை உற்று நோக்குகிறது. வால் நட்சத்திரத்தின் பார்வை பட்டால் தான் ஆபத்து. வால் நம் பக்கம் இருப்பதால் பாதிப்பு இராது" என்றாராம்.

வால் நட்சத்திரங்களைக் கண்டு மன்னர்கள் பயப்பட்டதற்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது என்ற கதையாக வால் நட்சத்திரம் தென்பட்ட போது ஒரு சில நாடுகளில் மன்னர்கள் பதவி இழக்க, அது வால் நட்சத்திரம் பற்றி ஒரு மூட நம்பிக்கையை உண்டாக்கியிருக்கலாம்.

சக்ரவர்த்தி வெஸ்பாசியன் (Vespasian) ரோம் நகரத்தை ஆண்ட போது கி.பி.79 ஆம் ஆண்டில் ஒரு பெரிய வால் நட்சத்திரம் தோன்றியது. சக்ரவர்த்தி சொன்னார் ”இதைக் கண்டு எனக்கு என்ன பயம். இந்த நீண்ட முடி (வால்) நட்சத்திரம் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பார்த்திய மன்னன் நீண்ட முடி கொண்டவன், அவனுக்குத் தான் ஆபத்து. என் தலையோ வழுக்கை”. ஆனால் சில நாட்களில் வெஸ்பாசியன் இறந்து போனார். பதினைந்தாம் நூற்றாண்டில் பிரெஞ்சு மன்னரின் தாய் ஜன்னல் வழியே பார்த்த போது ஒரு வால் நட்சத்திரம் தெரிந்தது. தமது உயிருக்கு ஆபத்து என்று பயந்து படுத்தார். மூன்று நாட்களில் உயிர் பிரிந்த்து. இப்படி எவ்வளவோ கதைகள் உண்டு.

1858 ஆம் ஆண்டில் தோன்றிய டொனட்டி
வால் நட்சத்திரத்தைக் காட்டும் ஓவியம் 
வால் நட்சத்திரம் தென்பட்டால் நோய்கள் ஏற்பட்டு ஏராளமான மக்கள் மடிவர் என்று மக்களிடையே ஒரு பயம் நிலவியது. பெரும் விபரீதம் ஏற்படும். உலகமே அழிந்து விடும் என மத நம்பிக்கை அடிப்படையில் அச்சம் நிலவியது. 1680 ஆம் ஆண்டில் ஒரு பெரிய வால் நட்சத்திரம் தோன்றிய போது ஐரோப்பாவில் பெரும் பீதி தோன்றியது. மக்கள் தேவாலயங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்ட்னர்.

பெரும் பணம படைத்தவர்களில் பலரும் உலகம் அழியப் போகிறது என்ற எண்ணத்தில் தங்கள் சொத்துக்களை மடாலயங்களுக்கு எழுதி வைத்தனர். கல்வி அறிவு வளர, வளர இந்த மூட நம்பிக்கைகள் பெரும்பாலும் குறைந்தன

இது ஒரு புறம் இருக்க, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த் சர் பிரெட் ஹாயில் (Sir Fred Hoyle), இலங்கையைச் சேர்ந்த சந்திரா விக்ரமசிங்கே (Chandra Wickramasinghe) ஆகிய இரு நிபுணர்களும் விண்வெளித் தூசு பற்றி ஆராய முற்பட்டனர். இருவருமே வானவியல் நிபுணர்கள்.  நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு 1979 ஆம் ஆண்டில்அவர்கள் ஒரு கொள்கையை வெளியிட்ட்னர்

பூமியில் ஏற்படும் புளூ ஜுரம் போன்ற சில வகை நோய்களுக்கு வால் நட்சத்திரங்களே காரணம் என்பது அக்கொள்கையாகும். வால் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் நுண்ணிய தூசில் நோய்க் கிருமிகள் அடங்கியுள்ளன என்று அவர்கள் கூறினர். அக்கிருமிகள் பூமியில் இறங்கி நோயை உண்டாக்குகின்றன என்று அவர்கள் கூறினர்.

சர் பிரெட் ஹாயில்
ஒவ்வொரு தடவையும் வால் நட்சத்திரம் வரும் போது சூரிய கிரணங்களின் தாக்குதலாலும் சூரியனிலிருந்து வெளிப்படுகின்ற துகள்களாலும் வால் நட்சத்திரம் தாக்கப்படுகிறது. அப்போது வால் நட்சத்திரத்திலிருந்து நுண்ணிய துணுக்குகள் வெளியேறி பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இதுவே வால் நட்சத்திரத்தின் வால் போன்று தோற்றமளிக்கிறது. ஒரு வால் நட்சத்திரத்தின் வால் பல லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கலாம்.

வால் நட்சத்திரம் வந்த வழியே சென்று விட்ட பிறகு வால் நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட எண்ணற்ற துணுக்குகள் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கின்றன. பல சமயங்களிலும் பூமியானது தனது சுற்றுப்பாதையில் இத்துணுக்குககுகள் வழியே செல்கிறது. இத்துணுக்குகளில் நுண்ணுயிர்கள் உள்ளன என்று ஹாயிலும் விக்ரமசிங்கேயும் கூறினர்.

சந்திரா விக்ரமசிங்கே
ஆண்டு தோறும் சுமார் 1000 டன் துணுக்குகள் காற்று மண்டலம் வழியே பூமியில் இறங்குகின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர்.இத்துணுக்குகளில் மனிதனுக்கு கேடு விளைவிக்கின்ற துணுக்குகளும் அடங்கியுள்ளன என்பது அவர்கள் இருவரின் வாதமாகும். இப்படியாகத் தான் அவ்வப்போது விளக்கம் கூற முடியாத வகையில் பூமியில் திடீரென புளூ போன்ற ஜுரம் பயங்கரமாகப் பரவி மக்களை வாட்டுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஹாயிலும் விக்ரமசிங்கேயும் கூறுவது போல 1918 ஆம் ஆண்டில் உலகம் பூராவும் சுமார் 3 கோடி மக்களின் உயிரை மாய்த்த புளூ ஜுரம் எப்படிப் பரவியது என்பதற்குத் தகுந்த காரணம் கூற முடியவில்லை. அப்போது நாடுகளிடையே விமானப் போக்குவரத்தும் கிடையாது. ஆனாலும் அது பல நாடுகளில் விரைவாகப் பரவியது.

 ஹாயிலும் விக்ரமசிங்கேயும் பின்னர் வெளியிட்ட ஒரு கொள்கையில் ஒரு படி மேலே போய் உயிரின ‘விதைகள்’ விண்வெளியிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறினர்.அதாவது பூமியில் உயிரினம் தானாகத் தோன்றவில்லை. உயிரினம் விண்வெளியிலிருந்து தான் பூமிக்கு வந்தது என்பது அவர்களது வாதமாகும்.

ஆனால் இந்த இருவரின் கருத்தை பிற விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. எனினும் பின்னர் மேலும் நடந்த ஆய்வுகள் இந்த இருவரின் கருத்துக்கு ஆதரவு சேர்ப்பவையாக உள்ளன. இவர்களது கொள்கை பற்றிய சர்ச்சை ஓய்ந்ததாகக் கூற முடியாது.

வால் நட்சத்திரங்களிலிருந்து தூசை சேகரித்து அதை ஆராய்ந்தால் இது பற்றிய சர்ச்சைக்கு விடை கிடைக்கலாம்.  நாஸா உட்பட விண்வெளி அமைப்புகள் இப்போது இதில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment