Dec 15, 2011

கடல் கடந்து செல்லும் ரோபாட்டுகள்

Share Subscribe
அமெரிக்காவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து கிளம்பி பசிபிக் கடலைக் கடந்து ஜப்பானின் டோக்கியோ நகருக்குச் செல்வதானால் குறைந்தது 8000 கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும்.

விமானத்தில் செல்லாமல் கடல் மார்க்கமாகப் பயணம மேற்கொண்டு வழி நெடுக பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கடல் நீரின் உப்புத் தன்மை, கடல் நீரின் வெப்ப நிலை, வானிலை, கடல் நீரில் அடங்கிய ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை அளந்து செல்வதானால் பெரிய ஆராய்ச்சிக் கப்பல் தேவை. பல ஊழியர்கள் தேவை. இப்படியான பணிக்கு நிறைய செலவாகும்.

இடது புறம் இருப்பது ரோபாட் படகு
படம் நன்றி: Liquid  Robotics
இப்போது நான்கு ரோபாட் படகுகள் இந்த அத்தனை பணியையும் செய்து ஜப்பானுக்குப் போய்ச் சேருகின்ற பெரும் பயணத்தை மேற்கொண்டுள்ளன. இவை சான்பிரான்சிஸ்கோ துறைமுகத்திலிருந்து நவம்பர் 17 ஆம் தேதி கிளம்பின. முதலில் இந்த நான்கும் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்ட்ர் தொலைவில் உள்ள ஹவாய்(Hawaii) தீவுக்குப் போய்ச் சேரும். பின்னர் அங்கிருந்து இரண்டு ரோபாட் படகுகள் ஆஸ்திரேலியாவை நோக்கிக் கிளம்பும். மற்ற இரண்டும் ஜப்பானை நோக்கிப் புறப்படும்.

ஆளில்லாப் படகுகள் இவ்விதம் மிக நீண்ட தூரம் செல்வது இதுவே முதல் தடவையாகும். இவை ஜப்பானுக்குப் போய்ச் சேர 300 நாட்களாகும் என்று கருதப்படுகிறது.

ரோபாட் படகின் மேற்புறத் தோற்றம்
படம் நன்றி: Liquid Robotics
அமெரிக்காவைச் சேர்ந்த Liquid Robotics என்ற நிறுவனம் இந்த ரோபாட் படகுகளை உருவாக்கி கடலில் செலுத்தியுள்ளது. இப்படகின் நீளம் 7 அடி, அகலம் 2 அடி. படகில் தட்டையாக உள்ள மேற்புறப் பகுதியில் சூரிய ஒளி மின்பலகைகள் உள்ளன. அவற்றுக்கு அடியில பாட்டரி, மற்றும் பல கருவிகள் உள்ளன. அவை தான் மேலே குறிப்பிட்ட பல தகவல்களையும் சேகரிக்கும்.

வழியறிந்து செல்வதற்காக ஜி.பி.எஸ். யூனிட்டும் (GPS) இப்படகில் இருக்கும். இக்கருவிகள் செயல்படுவதற்கான மின்சாரத்தை சூரிய ஒளி மின்பலகைகள் அளிக்கும். படகுகள் சேகரிக்கும் தகவலை உடனுக்குடன் செயற்கைகோள் மூலம் மையக் கேந்திரத்துக்கு அனுப்பி விட முடியும்.

சரி, எந்தவித எஞ்சினும் இல்லாமல் கடலில் எப்படித் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் என்ற கேள்வி எழுகிறது. இந்த ரோபாட் படகுக்கு அடியில் 23 அடி நீளத்துக்கு கேபிள் தொங்கும். அதன் நுனியில் ஆறு துடுப்புகள் உண்டு.

கடலில் இயல்பாக அலைகள் உருவாகும் - அதாவது, கடல் நீர் மட்டம் மேலே ஏறும், பிறகு கீழே இறங்கும். கேபிளின் நுனியில் தொங்கும் துடுப்புகள் கடலின் இந்த இயக்கதை ரோபாட் தொடந்து முன்னேறுவதற்கான இயக்கமாக மாற்றித் தருகின்றன. ஆகவே ரோபாட் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கும். இதன் வேகம் மணிக்கு சுமார் நான்கு கிலோ மீட்டர்.

ரோபாட் படகுக்கு அடியில் துடுப்புகள்
படம் நன்றி: Liquid Robotics
ஹவாய் தீவுகளிலிருந்து வடக்கு நோக்கி ஜப்பானுக்குச் செல்கின்ற ரோபாட் படகுகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குக் கிழக்கே உள்ள மரியானா கடல் பள்ளம் (Mariana Trench) மீதாகச் செல்லும். இங்குள்ள சேலஞ்சர் டீப் (Challenger Deep)  எனப்படும் கடல் மடு கடல் மட்டத்திலிருந்து 11 கிலோ மீட்டர் ஆழம் கொண்டது. உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் இதுவே ஆகும். ரோபாட் இந்த மடு பற்றிச் சேகரிக்க இருக்கிற தகவல்கள் இங்கு நீர்மூழ்குக் கலம் மூலம் உள்ளே இறங்கத் திட்டமிட்டுள்ள குழுவினருக்கு அளிக்கப்படும்.

லிக்விட் ரோபாடிக்ஸ் நிறுவனம் தனது ரோபாட் படகுகளை கடல் சார்ந்த பல துறையினருக்கும் விற்பதில் முனைப்பு காட்டி வருகிறது. ரோபாட் படகுகள் உருவாக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகியுள்ளன என்ற போதிலும் பசிபிக் கடலைக் கடக்க இவை இப்போது தான் முதல் தடவையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

1 comment:

Siraju said...

நல்ல தகவல். நன்றி

Post a Comment