Dec 12, 2012

இந்த வாரம் இரவு வானில் ஒளி மழை

Share Subscribe
இந்த வாரம் 13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி  இரவில்  வானிலிருந்து ஒளி மழையாகப் பொழியும். வானிலிருந்து சர் சர் என்று ஒளிக் கீற்றுகள் கீழ் நோக்கி இறங்கும். ஆனால் இந்த ஒளிக்கீற்று எதுவுமே தரை வரை வராது.

சாதாரண நாட்களில் நீங்கள் இரவு வானில்  ‘ நட்சத்திரம் கீழே விழுவதை’ பார்த்திருப்பீர்கள். நுண்ணிய துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைந்த பின்னர் தீப்பற்றிக் கீழ் நோக்கி இறங்கும் போது ஏதோ ஒரு நட்சத்திரம் விழுவதைப் போலத் தோன்றும். மணல் துணுக்கு போன்ற வெறும் துணுக்கு தான் இப்படி ஆர்ப்பாட்டமான காட்சி காட்டுகிறது..சில சமயங்களில் இது கூழாங்கல் சைஸில் இருக்கலாம்.
வானிலிருந்து இறங்கும் ஒளிக்கீற்று. இது  வெறும் துணுக்கு தான்.Credit Via Cumbrian Sky 
ஆண்டில் குறிப்பிட்ட  சமயத்தில் இரவு வானில்  மணிக்குப் பல நூறு துணுக்குகள் வீதம் இப்படி  நெருப்புப் பொறிகளாகக் கீழே இறங்கினால் அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த மாதம் மேற்படி இரு தேதிகளில் வானில் இக்காட்சியைக் காணலாம். வானவியலார் இதற்கு ஜெமினைட் ஒளிமழை (Geminid Meteor Shower ) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தத் துணுக்குகள் எங்கிருந்து வந்தன?  சாலை வழியே வலை போட்டு மூடாமல் குப்பை லாரி போனால் அந்த லாரியிலிருந்து வழி நெடுக குப்பை கீழே விழுந்தபடி செல்லும். அல்லது மணல் லாரி போனால் வழி நெடுக மணல் சிந்திக் கிடக்கும்

இந்த மாதிரியில் ஒரு வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி விட்டுச் செல்வதறகாக வரும் போதும் சூரியனைச் சுற்றி விட்டுத் திரும்பிச் செல்லும் போதும் அந்த வால் நட்சத்திரத்திலிருந்து எண்ணற்ற நுண்ணிய துணுக்குகள் வெளிப்படும். ஆகவே வால் நட்சத்திரம் சென்று விட்ட பிறகும் அது சென்ற  பாதையில் இந்த துணுக்குகள் மிதந்தபடி இருக்கும். விண்வெளியில் காற்று கிடையாது என்பதால் இவை அடித்துச் செல்லப்படாமல் அதே இடத்தில் இருக்கும்.

பூமியானது சூரியனைச் சுற்றி  வருகையில் இவ்விதத் துணுக்குகள் இருக்கும் இடத்தைக் கடந்து செல்லும். அப்போது இந்த்த் துணுக்குகள் பூமியின் காற்று மணடலம் வழியே இறங்கும். அப்போது இந்த ஒளிமழை நிகழும்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வாக்கில் பெர்சைட் ஒளிமழை (Perseid Meteor Shower )  நிகழும். அதே போல  நவம்பரில் Leonid Meteor Shower  நிகழும். டிசம்பர் மத்தி வாக்கில் ஜெமினைட் ஒளிமழை.தோன்றும். இந்த மாத மத்தியில்  இது காணப்படும் என்றாலும் 13 ஆம் 14 ஆம் தேதிகளில் தான் உச்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெமினைட் ஒளிமழைக்குக் காரணமாகக் கருதப்படும் பேயிதான் அஸ்டிராய்டின் சுற்றுப்பாதை 
ஜெமினைட் ஒளிமழை உச்சம் இந்த ஆண்டு அமாவாசை தினத்தன்று நிகழ்வதால் வானவியல் ஆர்வலர்களுக்கு மிக வசதி. ஒளிமழைக் காட்சி இரவு வானில் நன்கு தெரியும். சில ஆண்டுகளில் இது  பௌர்ணமி வாக்கில் நிகழும். அப்படி ஏற்படும் போது ஒளிமழைக் காட்சி எடுப்பாக இராது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும்பாலானவர்கள் கார் வைத்திருப்பர் என்பதால் ஒளிமழைக் காட்சியைக் காண்பதற்கு ஊருக்கு வெளியே -- சுற்றுவட்டாரத்தில் விளக்கு வெளிச்சமே இல்லாத பொருத்தமான திறந்த வெளிக்குப் போய் முகாமிட அவர்களால் இயலும்.ஜெமினைட் ஒளிமழையைக் காண்பதற்கு  இரவு ஒரு மணி முதல் மூன்று வரையிலான நேரம் உகந்தது என்று சொல்லப்படுகிறது.

எங்குமே வெளிச்சமில்லாத இடத்துக்கு சென்ற பின் அந்த இருட்டுக்கு உங்கள் கண்கள் பழகிக் கொள்ள சுமார் 20 நிமிஷம் ஆகும. அதன் பின்னரே உங்களால் வானிலிருந்து கீழ் நோக்கி இறங்குகின்ற ஒளிக்கீற்றுகளை நன்கு காண இயலும் என்று  இது தொடர்பான நிபுணர்கள் கூறியுள்ளனர். நகரில் வசிப்பவர்கள் நள்ளிரவில் எழுந்து மொட்டை மாடியில் நின்று பார்த்தால் சில ஒளிக்கீற்றுகளைத் தான் காண இயலும் என்று கூறப்படுகிறது.

இந்த ஒளிமழைக்கு ஜெமினைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் உண்டு. வானில் மிதுன ராசிக்கு ஆங்கிலத்தில் Gemini  என்று பெயர்.  அந்த ராசி உள்ள வான் பகுதியிலிருந்து இந்த ஒளிமழை வருவது போலத் தோன்றும். ஆகவே தான் இது Geminid  என அழைக்கப்படுகிறது

பெர்சைட் ஒளிமழை, லியோனிட் ஒளிமழை ஆகியவை  வால் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்பட்ட துணுக்குகளால் ஆனவை என்று அறியப்பட்டுள்ளது.
வானில் மிதுன Gemini ராசி உள்ள பகுதியிலிருந்து தான் ஒளிகீற்றுகள் கீழ் நோக்கிப் பாயும். 
ஆனால் ஜெமினைட் ஒளிமழைக்கான காரணம் அதாவது அந்த ஒளிமழையைத் தோற்றுவிக்கும் துணுக்குகள் எப்படித் தோன்றின என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.

பொதுவில் ஒளிமழைக்கு வால் நட்சத்திரங்களின் துணுக்குகள் காரணமாக இருந்தாலும் ஜெமினிட் ஒளிமழைக்கு 3200 பேயிதான் என்னும் பெயர் கொண்ட அஸ்டிராய்ட் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதாவது இந்த அஸ்டிராய்ட் சூரியனை நெருங்கும் போது அதிலிருந்து வெளிப்பட்ட துணுக்குகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த் அஸ்டிராய்ட் அவவப்போது சூரியனை சுற்றிவிட்டுச் செல்கின்றது.

16 comments:

Unknown said...

சார்,
நம்ம ஊரில் இதை பார்க்க முடியுமா?

Anonymous said...

Good information.....
Thanks

என்.ராமதுரை / N.Ramadurai said...

Nagarajan Thamilselvan
நம் ஊரிலும் பார்க்க முடியும். உலகில் எல்லாப் பகுதிகளிலும் தெரியும்.
ஊருக்கு வெளியே நல்ல இருட்டாக இருக்கிற இடமாகத் தேர்ந்தெடுத்து அங்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்தால் இந்த அதிசயத்தைக் காணலாம். காரில் செல்வதாக இருந்தால் வசதி. உடன் ஓரிரு மடக்கு சேர்களை எடுத்துச் செல்லவும்.சாய்வாக அமர்ந்து பார்ப்பது வசதியாக இருக்கும். இல்லாவிட்டால் கழுத்து வலிக்கும்.ஒரு வேளை நீங்கள் பார்க்க நேர்ந்தால் தங்களது அனுபவம் பற்றித் தெரிவிக்கவும்

ABUBAKKAR K M said...

sir , vaNakkam.
mika sariyaanan naeraththil theriviththa thakaval..
mikka nandri. 14 matrum 15 thaethikaLil paarthuvittu engaLin anupavangkaL / karuththukkaLai solluvom.
>> k m abubakkar
kallidaikurichi

Sudhakar Shanmugam said...

தகவலுக்கு நன்றி ஐயா


சுதாகர்

Unknown said...

Thanks sir... ungal thagavalukku nandri sir...

மனசாலி said...

நேற்று இரவு எத்தோச்சையாக வானை பார்த்த போது மேகம் இல்லாமல் நட்சத்திரங்களாக காட்சி அளித்தது. அதில் ஈர்க்கப்பட்டு மாடிக்கு சென்று படுக்க சென்றேன். போனவுடன் ஒரு துணுக்கு விழுவதை பார்த்தேன். பத்து நிமிட இடைவெளியில் மற்றொன்று.

Unknown said...

Good information. Thank you very much sir.

ABUBAKKAR K M said...

sir,
i have noted the dates as " 14th & 15 december " instead of " 13th & 14th " please correct it.
regretted for this.

>> abubakkar k m
kallidaikurichi

Anonymous said...

Am from ulundurpet. As you said me and my family watched it now. Awesome experience. We have seen one by one falling from sky patiently in all directions. Thanks for the info. As you said our neck started to pain.

என்.ராமதுரை / N.Ramadurai said...

Anonymous
வானில் தோன்றிய அந்தக் காட்சியைக் கண்டு வியந்து போனீர்கள் என்று அறிய மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.அமெரிக்காவில் உள்ளது போல இங்கும் எதிர்காலத்தில் ஆங்காங்கு வானவியல் ஆர்வலர் சங்கம் தோன்றும் என உறுதியாக நம்புகிறேன்.

Sathish Kumar from Chennai said...

i was in Terraace of chennai city, not able to see much at a time but after closely observered i was seen only 3 falling down. After that i selpt

என்.ராமதுரை / N.Ramadurai said...

Sathish Kumar
சென்னை நகரில் அவ்வளவு தெரிந்ததே பெரிய விஷயம்.எனினும் ஆர்வத்துடன் பார்த்ததைப் பாராட்ட வேண்டும்

ABUBAKKAR K M said...

அய்யா வணக்கம்.
மேகமூட்டம் காரணமாக இந்த அரிய நிகழ்வை எஙகள் பகுதியில் காண இயலவில்லை.பார்த்து மகிழ்ந்த நண்பர்கள் போட்டோ எடுத்திருந்தால் தயவு செய்து இப்பகுதியில் கான்பிக்கவும்.
நன்றியுடன்,
கோ.மீ.அபுபக்கர்,
கல்லிடைக்குறிச்சி.

Kumarikandam said...

இரவு வானில் செயற்கைக்கோளின் ஒளி விண்மீன்கள் போன்று தோன்றுமா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

renesh s.m
செயற்கைக்கோள்கள் மீது சூரிய ஒளி படும் போது -- இரவு வானில் கோள்கள் தெரிவது போல --அவையும் தெரிய வேண்டும். ஆனால் அவை வடிவில் சிறியவை எனவே தென்படாது. எனினும் சூரியன் அஸ்தமித்த பின்னர் அல்லது சூரிய உதயத்துக்கு முன்னர் --பைனாகுலர்ஸ் மூலம் பார்த்தால் --ஒரு சில செயற்கைக்கோள்கள் சிறிய ஒளிப்புள்ளி வடிவில் நகர்ந்து செல்வது தெரியலாம்.சில நாடுகளில் ஆர்வலர்கள் இதே வேலையாக செயற்கைக்கோள்களைக் கவனிக்கின்றனர்.

Post a Comment