Sep 10, 2014

எரிமலை வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்தவர்

Share Subscribe
அவர் பெயர் ஜார்ஜ் கூரூனிஸ் (George Kourounis). யாரும் செல்லத் துணியாத இடங்களுக்குச் சென்று சாதனை புரிவது தான் அவருடைய தொழில். சில நாட்களுக்கு முன்பு அவர்  எரிமலை வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்துள்ளார்.

குனிந்து பார்த்தால் சுமார் 370 மீட்டர் ஆழமான கிடுகிடு பள்ளம். அதன் அடியில் தள தள என்று கொதிக்கும் நெருப்புக் குழம்பு. அந்த எரிமலைக் குழம்பின் வெப்பம் 1200 டிகிரி செண்டிகிரேட். எனவே கடும் அனல். நடு நடுவே எரிமலைக் குழம்பு சீறுகிறது. நெருப்பு உருண்டைகள் தூக்கியடிக்கப்படுகின்றன.

எரிமலை வாய்க்குள் இருந்து சாம்பல் புகை
வெளிப்படுவதைக் காண்க
நெருப்புக் குழம்பிலிருந்து ஆபத்தான குளோரின் வாயு, கந்தக வாயு ஆகியன வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளேயிருந்து எரிமலைச் சாம்பலும் மெல்லிய புகை போல மேல் நோக்கி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொதிக்கும் நெருப்புக் குழம்பின் விளிம்பில்
சிறிய உருவமாக ஜார்ஜ் தெரிவதைக் கவனிக்கவும்.
கரணம் தப்பினால் மரணம் என்ற அளவில் எரிமலை வாய்க்குள் இறங்குவது என்பது மிக ஆபத்தான செயல்.

பசிபிக் கடலின் தென் பகுதியில் வனூவாடு (Vanuatu) என்ற தீவு நாடு உள்ளது. சின்னச் சின்னதாக மொத்தம் 80 தீவுகள். அவற்றில் 20 தீவுகளில் ஆளே கிடையாது. வனூவாடு நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் இரண்டரை லட்சம்.

இந்தத் தீவுகளில் ஒன்றான அம்ரிம் தீவில் தான் பெரிய எரிமலை உள்ளது. 12 மீட்டர் அகலம் கொண்ட அந்த எரிமலை வாய்க்கு மாரும் என்று தனிப் பெயர் உண்டு.

கிடு கிடு பள்ளத்தின் அடியில் நெருப்புக் குழம்பு
ஜார்ஜ் கூரூனிஸ் இந்த எரிமலை  வாய்க்குள் தான் இறங்கினார். முதலில் கரடு முரடான் எரிமலைச் சரிவு வழியே மேலே ஏற வேண்டும். அதன் பிறகு தான் உள்ளே இறங்க வேண்டும்.

விசேஷ பாதுகாப்பு உடையில் ஜார்ஜ்
ஜார்ஜ் கூரூனிஸ் எரிமலைக் குழம்பின் வெப்பம் தாக்காதபடி இருக்க விசேஷ காப்பு உடை அணிந்திருந்தார். சுவாசிப்பதற்கு காற்றை அளிப்பதற்கான சுவாசக் கருவியையும் அணிந்திருந்தார். கால் தவறினால் ஆபத்து என்பதற்காக இடுப்பில் கம்பி இணைப்பு இருந்தது.

எரிமலைக் குழம்பைக் கண்டு பயம் இல்லையா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. எனக்கு மழையைக் கண்டுதான் பயம் என்றார் அவர்.

அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணம் உண்டு. எரிமலை வட்டாரத்தில் மழை பெய்யுமானால் எரிமலையிலிருந்து கிளம்பும் ஆபத்தான வாயுக்கள் மழை நீருடன் கலந்து அதன் விளைவாகக் கடும் அமில மழை பெய்ய ஆரம்பிக்கும். அமில மழையானது அவர் அணிந்த காப்பு உடைகளை அரித்து விடும். அமில மழையானது உலோகங்களையும் அரித்து விடக்கூடியவை. வெறும் தூறல் இருந்தாலும் ஆபத்து தான்.

ஜார்ஜ் புரிந்த சாதனை மெச்சத்தக்கது என்பது ஒரு புறம் இருக்க, அவர் உள்ளே இறங்கிய போது எடுக்கப்பட்ட படங்கள் எரிமலையின் உட்புறத்தை நாம் காண்பதற்கு அரிய வாய்ப்பை அளித்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஜார்ஜ் கூரூனிஸுடன்  சென்ற காஸ்மான் என்ற போட்டாகிராபர் தான் அப்படங்களை எடுத்தவர்.

கனடாவைச் சேர்ந்த 44 வயதான ஜார்ஜ் ஏற்கெனவே மூன்று ஆபத்தான எரிமலைகளின் வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்துள்ளார். புயல்களும் அவருக்குப் பிடிக்கும். பல கடும் புயல்களின் நடுவே இருந்து படம் எடுத்துள்ளார்

அவரது இப்படியான சாகசங்கள் ஒரு பிரபல மேற்கத்திய டிவி சேனலில் சீரியலாகக் காட்டப்படுகின்றன. கீழே விடியோ காண்க.


7 comments:

Anonymous said...

ஐயா வணக்கம்

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்கிற பாரதியின் பாடலுக்கு இவர் பொருத்தமானவர் தான் போல.

ஐயா இவ்வளவு வெப்பத்தை வீணாக்காமல் மனிதர்களுக்கு உபயோகமாக (மின்சாரம்) எதுவும் செய்யமுடியாதா ?

வெங்கடேஷ்

Pandian R said...

இந்த ஆளைப் பார்த்து இன்னும் எத்தணை பேர் செய்யப்போகிறார்களோ

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
மிகவும் நியாயமான கேள்வி. எரிமலையின் வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்த இயலாது. அது திடீரென்று பொங்க ஆரம்பித்தால் அத்தனை யந்திரங்களும் பாழ். எரிமலையை நம்ப முடியாது.
எனினும் பூமியில் பல் இடங்களில் நல்ல ஆழத்தில் உள்ள நெருப்புக் குழம்பு காரணமாக அங்கு வென்னீர் ஊற்றுகள் இருக்கும். நியூசீலந்தில் இப்படியான வென்னீர் ஊற்றுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள். அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் இவ்விதமான geothermal power plants உள்ளன. இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் இதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Anonymous said...

அன்பின் அய்யா,
தங்களுக்கு versatile blogger என்கிற பதிவுலக விருதை என் வலைப்பதிவு மூலமாக அளிப்பதில் உவகை கொள்கிறேன். பார்க்கவும் - http://wp.me/p2IK8Q-Bh

அன்புடன் ஏற்றுக்கொள்ளவும்.
நன்றி

என்.ராமதுரை / N.Ramadurai said...

kadaisibench
விருது குறித்து மிக்க மகிழ்ச்சி
ராமதுரை

காந்தி பனங்கூர் said...

மழை எவ்வாறு உருவாகிறது என்பதை பற்றி விரிவான பதிவு எழுத முடியுமா ஐயா? எனக்கு தெரிந்தவரை, நீராவி ஒன்று சேரும் போது மேகமாகிறது, அது குளிர்ச்சியடையும் போது மழையாக பொழிகிறது. ஆனால், மழைக்காலங்களில் அந்த பகுதி முழுவதும் குளிர்ச்சியாக தானே இருக்கும், பிறகு எப்படி நீராவி உருவாகிறது என்ற சந்தேகம் உள்ளது. நன்றி

என்.ராமதுரை / N.Ramadurai said...

காந்தி பனங்கூர்
சரியான கேள்வி. மழை எவ்வாறு உருவாகிறது என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் செயற்கை மழை முயற்சிகள் வெற்றி பெறவில்லை.தலைக்கு மேலே செல்லும் மழை மேகங்களை வழிமறித்து மழை பெய்யச் செய்ய முடியும் என்றால் தொழில் நுட்ப முன்னேற்றம் அடைந்த அத்துடன் பண வசதி படைத்த நாடுகளில் -- அத்துடன் மானிலங்களில் வறட்சி என்பதே இராது. அமெரிக்காவிலும் வறட்சியை எதிர்ப்படும் மானிலங்கள் உள்ளன. மழை பற்றி முற்றிலும் அறிந்து கொள்ள முடியவில்லை என்பதே அதற்குக் காரணம்.
இரண்டாவது விஷயம். கோடையில் காயப்போடும் துணிகள் சீக்கிரம் காயந்து விடுகின்றன. மழைக் காலத்தில் இரண்டு நாட்கள் ஆகலாம். அதாவது மழைக் காலத்திலும் ஈரமான துணிகளிலிருந்து நீர் ஆவியாகிக் கொண்டு தான் இருக்கிறது. என்ன, மெதுவாக ஆவியாகிறது.
ஒரு கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டு பத்து நாட்கள் கழித்துப் பார்த்தால் கணிசமான தண்ணீர் ஆவியாகி விட்டிருக்கும். அதே கிண்ணத்தை அடுப்பில் வைத்துக் காய்ச்சினால் வெகு விரைவில் நீர் ஆவியாகி விடும். நீர் ஆவியாவது எப்போதும் --வேகமாக அல்லது நிதானமாக ----நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

Post a Comment