Jan 6, 2014

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றி மூலம் புதிய வாய்ப்புகள்

Share Subscribe

இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி(GSLV) ராக்கெட் ஜனவரி 5 ஆம் தேதி மாலை சுமார் 2 டன் எடை கொண்ட ஜிசாட்-14 எனப்படும் செயற்கைக்கோளை வானில் வெற்றிகரமாகச் செலுத்தியது. இது இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய மகத்தான சாதனை.
  
 இஸ்ரோவின் நிபுணர்கள் பல ஆண்டுக் காலம் பாடுபட்டு உருவாக்கிய கிரையோஜெனிக் வெற்றிகரமாகச் செயல்பட்டது என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

  இந்த வெற்றியானது விண்வெளித் துறையில் இந்தியாவுக்குப்  பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்தியாவின்  எடைமிக்க செயற்கைக்கோள்களை ஐரோப்பிய ஏரியான் ராக்கெட் மூலம் செலுத்த அவற்றை தென் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்வது விரைவிலேயே நின்று விடலாம்.

ஏரியான் மூலம் செலுத்துவதற்காக ஒவ்வொரு தடவையும் ரூ 500 கோடி கட்டணம் செலுத்துகின்ற நிலைமை அகலக்கூடும். வீண் செலவும் சிரமமும் மிச்சமாகும்.

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றியில் இவற்றை விட முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது. அதாவது இனி நாம் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் அல்லது இருவரை பூமியைச் சுற்றி வருவதற்கான வகையில் உயரே அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விதம் இந்திய விண்வெளி வீரரை அனுப்புவதற்கு இப்போதைய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைய ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாகச் செயல்பட்டதன் பலனாக நாம் இனி இந்த வகையில் சிந்திக்க முடியும்.

எந்த ஒரு ராக்கெட்டாக இருந்தாலும் அதற்கு இரண்டு வகைத் திறன் உண்டு.  ஒரு ராக்கெட் சுமார் 300 அல்லது 400 கிலோ மீட்டர் உயரத்துக்கு ஒரு செயற்கைக்கோளை சுமந்து செல்வதானால் அதற்கு ஒரு திறன் உண்டு. மாறாக. சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு ஒரு செயற்கைக்கோளை கொண்டு செல்வதானால் வேறு திறன் என்று அளவு கணக்கு உண்டு.

இதுவரை தொடர்ந்து 24 தடவை வெற்றி கண்டுள்ள பி.எஸ்.எல்.வி. (PSLV)  ராக்கெட்டுக்கும் இது மாதிரியில் இரண்டு விதத் திறன் உண்டு. அந்த ராக்கெட் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்துக்கு இரண்டு டன் சுமையை —ஒரு செயறகைக்கோளை – சுமந்து செல்ல முடியும். ஆனால் அந்த ராக்கெட்டினால்  36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு  அவ்வளவு எடையைச் சுமந்து செல்ல முடியாது. குறைந்த எடையைத் தான் அவ்வளவு உயரத்துக்குத் தூக்கிச் செல்ல முடியும்.

இத்த்டன் ஒப்பிட்டால் இப்போது வெற்றி கண்டுள்ள ஜி.எஸ்.எ;ல்.வி ராக்கெட்டினால் இரண்டு டன் எடையை 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கிச் செல்ல முடியும். அந்த ராக்கெட்டை  300 கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்தினால் போதும் என்றால் இந்த ராக்கெட்டினால் 5 டன் எடையை சுமந்து செல்ல முடியும். அதாவது இந்த ராக்கெட்டும் சரி,, இரண்டு வகைத் திறன் கொண்டது

  ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளே இதுவரை விண்வெளி வீரர்களை உயரே அனுப்பியுள்ளன. இப்படிச் சென்றவர்கள் ஏறிச் சென்ற விண்கலங்கள் அனைத்தும் பூமியிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் தான் பறந்துள்ளன. இந்தியா ஒரு விண்கலத்தை அனுப்புவதானால் அந்த விண்கலமும் இந்த உயரத்தில் தான் பூமியைச் சுற்றுவதாக இருக்கும்.

  இந்திய வீரர் ஒருவர் அல்லது இருவர் உயரே செல்வதற்கான விண்கலத்தைத் தயாரிப்பதானால் அது குறைந்தது 3 டன் எடை கொண்டதாக இருக்கும்.   ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டினால் இப்படியான ஒரு விண்கலத்தை ( செல்ல வேண்டிய உயரம் 300 கிலோ மீட்டர் தான் என்பதால்)  எளிதில் சுமந்து செல்ல இயலும்.

இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவிடம் ஏற்கெனவே இந்த வகையிலான ஒரு திட்டம் உண்டு. விண்வெளி வீரரகளை உயரே அனுப்ப ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டைப் பயன்படுத்துவது என்பது அந்தத் திட்டத்தில் அடங்கும்.

விண்வெளி வீரர்கள் ஒருவர் அல்லது இருவரை உயரே அனுப்புவதற்கான விண்கலம் இனிமேல் தான் உருவாக்கப்பட வேண்டும். இதற்கென ஒரு விண்கலத்தை வடிவமைப்பதற்கு ஏற்கெனவே திட்டம் உள்ளது.
  
மனிதன் ஏறிச் செல்வதற்கான விண்கலத்தைத் தயாரிப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அது சொந்தமாக கிரையோஜெனிக் எஞ்சினை உருவாக்குவதைப் போல அவ்வளவு கடினமானதல்ல

இதில் வேடிக்கை என்னவென்றால் விண்வெளி வீரர் ஒருவரை உயரே அனுப்பினால் அவர் பத்திரமாகப் பூமிக்குத் திரும்புவதில் அடங்கிய அடிப்படைப் பிரச்சினைகளை இந்தியா ஏற்கெனவே சமாளித்து அதில் வெற்றி கண்டுள்ளது. அதாவது ஒருவரை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்னரே அவர் பத்திரமாகப் பூமிக்குத்  திரும்பச் செய்வது எப்படி என்பதை நாம் கற்றுக் கொண்டு விட்டோம்.

இந்தியா 2007 ஆம் ஆண்டில் SRE (Space Capsule Recovery Experiment) என்னும் திட்டம் ஒன்றை மேற்கொண்டது. இதன்படி பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 550 கிலோ எடை கொண்ட ஒரு செயற்கைக்கோள் உயரே செலுத்தப்பட்டது. பூமியைச் சுற்றி வந்த  அந்த செயற்கைக்கோள் 12 நாட்களுக்குப் பிறகு  வெற்றிகரமாக கீழே இறக்கப்பட்டது. 635 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த செயற்கைக்கோள் சென்னைக்கு வடகிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மெல்ல இறங்கியது.

 பின்னர் கடலோரக் காவல் படையினர் அதைக் கடலிலிருந்து மீட்டனர். நிபுணர்கள் பின்னர் அதை ஆராய்ந்த போது அது எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் இருந்தது.

ஒரு விண்கலம் மூலம் விண்வெளி வீரர் ஒருவரை உயரே அனுப்புவதை விட அவர் பத்திரமாக பூமிக்குத் திரும்பச் செய்வதில் தான் பிரச்சினைகள் அதிகம்.
ஜிசாட் 14 செயற்கைக்கோளை சும்ந்தபடி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உயரே பாய்கிறது
படம்: இஸ்ரோ
உதாரணமாக SRE செயற்கைக்கோள் உயரே இருந்து பூமிக்கு இறங்குகையில் ஒரு கட்டத்தில் அதன் வேகம் மணிக்கு 29,000 கிலோ மீட்டராக இருந்தது. காற்று மண்டலம் வழியே அது இறங்க ஆரம்பித்த போது அதன் முகப்பு 2000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பயங்கரமாகச் சூடேறியது. அதன் பின்பகுதியில் வெப்பம் 1400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருந்தது. இந்த வெப்பம் உள்ளே இருக்கின்ற பகுதிகளைத் தாக்காமல் தடுக்க வெளிப்புறத்தில் தகுந்த பூச்சு இருந்தது. வெப்பத்தடுப்பு ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன.

 சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் முதல் பாராசூட் விரிந்தது. இதன் மூலம் அது கீழே இறங்கும் வேகம் மணிக்கு 363 கிலோ மீட்டராகக் குறைந்தது. அடுத்த பாராசூட் விரிந்த பின்னர் வேகம் மேலும் குறைந்தது. இறுதியில் அது மெல்லக் கடலில் வந்து இறங்கி மிதக்க ஆரம்பித்தது.
இந்திய விண்வெளி வீரர் இருவர்  உயரே அனுப்பப்பட்டால் அவர்கள் இவ்விதமாகத் தான் கடலில் வந்து இறங்குவர்.

 SRE செயற்கைக்கோளை வங்கக் கடலில் மெல்ல இறங்கச் செய்வதில் வெற்றி கண்டுள்ளதன் மூலம் நாம் இந்திய விண்வெளி வீரர்கள் ஏறிச் செல்லும் விண்கலத்தை பத்திரமாக பூமிக்குத் திரும்பச் செய்வதில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விடை கண்டு விட்டதாகக் கூறலாம்.  
இங்கு ஒன்றைக் கூறியாக வேண்டும். ஜி எஸ்.எல்.வி ராக்கெட் அடுத்தடுத்து இன்னும் சில தடவை வெற்றி கண்டாக வேண்டும்.
அப்போது தான் அது நம்பகமான ராக்கெட் என்பது நிரூபணமாகும்.

 அது அவ்விதமே செயல்படும் என்று வைத்துக் கொண்டு இப்போது பணிகளைத
 தொடங்கினாலும் தகுந்த விண்கலத்தை உருவாக்குவது, அதை ஆளில்லாமல் செலுத்தி சோதிப்பது, விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுப்பது,, பயிற்சி அளிப்பது, விண்வெளி வீரர்களை அனுப்புதற்கான புதிய ராக்கெட் தளத்தை நிறுவுவது போன்ற வேலைகளை செய்து முடிக்க குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகிவிடலாம்

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தியாவுக்குப் பிரகாசமான வாய்ப்பு மேலும் கிடைக்கும்... விளக்கமான தகவல்களுக்கு நன்றி ஐயா...

Unknown said...

அருமையான தகவல்கள் அய்யா.

Rajesh kumar said...

This is the news from Dinamalar website

'ஜி.எஸ்.எல்.வி., டி - 5' ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட, 17 நிமிடம், எட்டு வினாடிகளில், இலக்கை அடைந்தது, 'ஜிசாட் - 14' செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. தற்போது, 'ஜிசாட் - 14' செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 179 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், ஐந்து டன் எடை கொண்ட, செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. தற்போது, 'கிரையோஜெனிக்' தொழில்நுட்பம் வெற்றி அடைந்துள்ளதால், 'இஸ்ரோ'விற்கு வணிகரீதியான வாய்ப்புகள் இனி அதிகரிக்கும்.மேலும், 'கிரையோஜெனிக்' தொழில்நுட்பம் கொண்டுள்ள, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்ெவளி நிறுவனம், ஜப்பான் மற்றும் சீனாவுடன், ஆறாவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.இது 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் மேற்கொண்ட பெரும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

If the satellite is going to be launched at a height of 179 kms why would we need a GSLV ? our polar satellites aren't enough for this?
I read GSLV is supposed to have a speed of 10.2 km/s escape velocity to be in space out of earths atmosphere. please correct me if I am wrong. sorry for typing this in English. Doing this in office time.

Anonymous said...

வீரர்களை அனுப்புகிற விஷப்பரீட்சையெல்லாம் வேண்டாம். ஆனானப்பட்ட நாசாவாலேயே கல்பனா சாவ்லாவைக் காப்பாற்ற முடியவில்லை. மேலும் நம் ஆட்கள் போய் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை. வெட்டி வீம்புக்காக அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

சரவணன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

ராஜேஷ் குமார்
gslv ராக்கெட் பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே 35786 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியை வட்ட வடிவ சுற்றுப் பாதையில் சுற்ற வேண்டியதாகும். ஜனவரி 5 ஆம் தேதி ஜிசாட் 14 உயரே செலுத்தப்பட்ட உடனேயே அந்த செயற்கைகோள் அந்த சுற்றுப்பாதையை எட்டி விடுவிடுவதில்லை
முதலில் அது நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றும். அன்று அது உயரே சென்றதும் அப்படி நீள் வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பித்தது.அப்போது அது பூமியிலிருந்து அருகாமையில் இருந்த உயரம் 180 கிலோ மீட்டர். நீள் வட்டப்பாதை என்பதால் அது பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருந்த உயரம் சுமார் 35,700 கிலோ மீட்டர். அடுத்து வருகிற நாட்களில் இது வட்ட வடிவப்பாதைக்கு மாறும்படி நடவடிக்கை மேற்கொள்வர். இதற்கென செயற்கைக்கோளில் எரிபொருள் மற்றும் பீச்சுகருவிகள் உண்டு.கீழிருந்தபடி ஆணை பிறப்பித்து அதை இயக்கும் போது செயற்கைக்கோள் பூமியிலிருந்து இருக்கிற குறைந்த பட்ச உயரம் அதிகரிக்கும்
இவ்விதம் மறு நாளே அதாவது 6 ஆம் தேதி நடவடிக்கை எடுத்த போது குறைந்தபட்ச உயரம் 8966 கிலோ மீட்டராக அதிகரித்தது.அதிகபட்ச உயரம் மாற்றப்படவில்லை
அடுத்த சில நாட்களில் அது வட்ட வடிவப் பாதையை எட்டி விடும்.
ஊடங்களில் இந்த அத்தனை விஷயங்களையும் விவரிப்பது இல்லை தவிர ஊடகங்கள் “செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது “ என்று வருணிக்கும். சூரிய மண்டலத்தில் எந்த ஒன்றும் --செயற்கைக்கோள்களும் தான் -- ஓர் இடத்தில் நிலையாக இருக்க முடியாது.
பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்க 23 மணி 56 நிமிஷம் 4 வினாடி எடுத்துக் கொள்கிறது. ஜிசட் 14 செயற்கைக்கோள் இறுதியில் 35786 கிலோ மீட்டர் உய்ரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றும் போது மிகச் சரியாக அதே நேரத்தை எடுத்துக் கொள்ளும். அப்போது வானில் நிலையாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும்.இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்

Sudhakar Shanmugam said...

பதிவுக்கு நன்றி,

இஸ்ரோ தயாரித்திருப்பது முழுமையான கிரையோஜெனிக் எஞ்சின் அல்ல என்ற ரீதியில் ஒரு இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது. நாம் தயாரித்திருக்கும் கிரையோஜெனிக் எஞ்சின் இன்னும் முழுமையடைய வில்லையா என்ன?

நன்றி

S.சுதாகர்

என்.ராமதுரை / N.Ramadurai said...

Sudhakar Shanmugam
இஸ்ரோ தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் அரைகுறையானாது என்றால் அது வெற்றிகரமாக மேலே போய் ஜிசாட் 14 செயற்கைக்கோளை செலுத்தியிராது.

கிரி said...

சார் தகவல்களுக்கு நன்றி.

ஒரு ஆங்கில தளத்தில் இந்த க்ரையோஜெனிக் 1995 வாக்கிலேயே தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று ஒரு விஞ்ஞானி கூறி இருந்தார். இது பல்வேறு அரசியல் காரணங்களால் மற்றும் தொழில்நுட்ப தாமதத்தால், இவ்வளவு தாமதமாகி விட்டதாக கூறி இருந்தார். நீங்கள் கூட படித்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் முடிந்தால் இது பற்றி கட்டுரை எழுதினால் எங்களைப் போன்றவர்களுக்கு புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

கிரி
அதெல்லாம் பழைய கதை. எப்படியோ இன்று நாம் இதில் வெற்றி கண்டுள்ளோம். அது தான் முக்கியம்.
சர்வதேச அரசியல், அரசியல் சூழ்ச்சி,ஆகியவை பற்றி இன்று எழுதி என்ன பலன்?

வந்மீகனாதன் said...

மிகவும் எளிமையான தமிழில் அழகாக விளக்கியுள்ளீர்கள்! நன்றி!

கிரி said...

சார் நீங்கள் கூறுவது தான் சரி. குறிப்பாக நீங்கள் இது பற்றி கூறினால் அது உங்களுக்கு சங்கடத்தையே தரும். நியாயமாக இதை நானே யோசித்து இருக்க வேண்டும். நன்றி

Post a Comment