Jan 24, 2021

ஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி

Share Subscribe
திரு.ஐராவதம் மகாதேவனைப் பற்றிய புத்தகத்தை varalaaru.com 2008-ம் ஆண்டு வெளியிட்டது. அதில் ராமதுரை எழுதிய கட்டுரை இது.

கட்டுரையின் முதல் பகுதி முன்னர் வெளியானது. இது இரண்டாவது/இறுதிப் பகுதி. (ராமதுரை, ஐராவதம் மகாதேவன் - இருவரும் 2018-ல் காலமானார்கள்.)

***

நாளிதழ் வேறு அறிவியல் இதழ் வேறு


நாளிதழ்களில் எழுத்துப் பிழை அல்லது வேறு பிழைகள் இடம் பெறாதபடி கவனம் செலுத்தப்படுகிறது என்பது உண்மையே. ஆனாலும் ஒரு நாளிதழானது மிகுந்த வேகத்தில் மிகுந்த அவசரத்தில் தயாரிக்கப்படுவதாகும். நாளிதழ்களை "அவசர இலக்கியம்" என்றும் சொல்வதுண்டு. அந்த அளவில் எந்த மொழியிலான நாளிதழானாலும் அதில் ஓரிரு எழுத்துப் பிழைகள் இடம் பெற்றுவிடலாம். ஆனால் நாளிதழ் வேறு, அறிவியல் வார இதழ் வேறு.

நாளிதழ்களை மாதக் கடைசியில் பழைய பேப்பர் கடையில் விலைக்குப் போட்டு விடுவார்கள். "ஒரு நாளிதழின் ஆயுள் ஒரே நாள் தான்" என்று சொல்வதுண்டு. சில மணி நேரம் தான் என்றும் சொல்லலாம். யாரும் மாதக் கணக்கில், ஆண்டுக்கணக்கில் நாளிதழ்களை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக்கொள்வது கிடையாது.

ஆனால் அறிவியல் இதழ்கள் அவற்றில் இடம் பெறுகின்ற கட்டுரைகளுக்காகப் பத்திரமாகப் பாதுகாக்கப்படுபவை. பல வாசகர்கள் சுடர் இதழ்களை இவ்விதம் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர். ஒரு இதழ் விட்டுப் போனால் அந்த குறிப்பிட்ட இதழ் கிடைக்குமா என்று தினமணிக்கு எழுதிக் கேட்டு அவ்விதம் பெற்றுச் சென்றவர்கள் உண்டு.

இதை உணர்ந்து தான் சுடரில் எழுத்து பிழையோ கருத்துப் பிழையோ இடம் பெற்று விடக்கூடாது என்பதில் திரு ஐராவதம் அவர்கள் மிகக் குறிப்பாக இருந்தார். ஒவ்வொரு வாரமும் கட்டுரைகளை நான் படித்துப் பிழைகள் அகற்றப்பட்ட பிறகு திரு.ஐராவதம் கடைசியாக இதழில் இடம் பெறுகின்ற அனைத்துக் கட்டுரைகளையும் தவறாமல் உன்னிப்பாகப் படிப்பார். கட்டுரைகளைப் படிப்பது ஆசிரியரின் பணி அல்ல என்றாலும் கடைசி வரை அவர் இந்த ஏற்பாட்டைப் பின்பற்றி வந்தார். இது அவர் சுடர் தயாரிப்பில் கொண்டிருந்த மிகுந்த அக்கறையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

எங்களையும் மீறி எப்போதாவது சிறு தவறு இடம் பெற்றிருக்குமானால் அடுத்த இதழில் முக்கிய இடத்தில் அனைவரின் கண்களிலும் படும் வகையில் திருத்தம் வெளியிடும் வழக்கம் பின்பற்றப்பட்டது. இப்படியான திருத்தங்கள் மிக அபூர்வமாகவே இடம் பெற்றன.

வாசகர்கள் சுடர் இதழ்களை சேமித்து வைக்கின்றனர் என்பது தெரிந்ததும் அவர்கள் இந்த இதழ்களை தக்கபடி சேமித்து வைப்பதற்கு உதவியாக Folder கள் எனப்படும் அட்டைகளை வாசகர்களுக்குக் குறைந்த விலையில் தினமணி நிர்வாகமே அளிக்கச் செய்வது பற்றி ஆசிரியர் ஒரு திட்டம் தயாரித்து வைத்திருந்தார். ஏதோ காரணத்தால் அது ஈடேறாமல் போயிற்று.

வாசகர்கள் இதழ்களை "பைண்டு"
செய்து வைத்துக்கொண்டனர்.

வானவியலில் ஆர்வம்


பண்டைக் காலத்தில் கிராம மக்கள் இரவு நேரங்களில் வானத்துக் காட்சிகளைப் பார்த்தே - வானில் எந்த நட்சத்திரம் எங்கு தெரிகிறது என்பதை வைத்தே - நேரத்தைக் கூறும் அறிவைப் பெற்றிருந்தனர். ஆனால் இப்போது பெரும்பாலான மக்களுக்கு இரவு நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகள் முன்பாக அமர்ந்து சினிமா அல்லது சீரியல்களில் வருகின்ற "நட்சத்திரங்களை"க் காண்பதற்கே நேரம் போதவில்லை.

இப்பின்னணியில் மாதாமாதம் முதல் வார சுடரில் வான் காட்சிகளை விவரிக்கும் வரைபடங்களைப் போட்டு ஓரளவில் மக்களிடையே வானவியல் பற்றிய அறிவை வளர்க்கலாம் என்று முடிவு செய்து திரு.ஐராவதம் அவர்களே இப்பணியை மேற்கொண்டார். இதற்கென கொல்கத்தாவில் உள்ள அமைப்புடன் தொடர்பு கொண்டு வான் காட்சிப் படங்களை மாதமாதம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.



மேலே உள்ளது போன்ற வான் காட்சிப் படம் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் அந்த மாதத்தில் வானில் எங்கெங்கே தென்படும் என்பதைக் காட்டும். படத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படங்களை ஆங்கிலப் பெயர்களுடன் வெளியிடுவதில் அர்த்தமில்லை. அவற்றைத் தமிழில் தரவேண்டும்.

கிரகங்களின் பெயரைப் பொருத்த வரையில் பிரச்சினை இல்லை. நட்சத்திரங்களைப் பொருத்தவரையில் அவற்றின் பெயர்களுக்கு ஈடான தமிழ்ப் பெயர்கள் வேண்டுமே. வானவியல் பற்றி ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்பதால் நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்களை அவரே எழுதிக் கொடுப்பார். கம்போஸ் செய்யப்பட்ட பின் தமிழ்ப் பெயர்களைப் மூலப்படத்தில் உள்ள ஆங்கிலப் பெயர்கள் மீது ஒட்டும் வேலையையும் அவரே செய்தார். இப்படியாக சுடரில் மாதாமாதம் முதல் வாரம் வான் காட்சிப் படம் "மாத வானவியல்"என்ற தலைப்பில் வெளியாகலாயிற்று. கடைசி வரை இந்தப் பணியை அவரேதான் செய்து வந்தார்.

இத்துடன் நில்லாமல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் அப்போது வேதியியல் பேராசிரியராக இருந்த திரு.சுந்தரம் அவர்களுடன் தொடர்பு கொண்டு வானவியல் பற்றிய தொடர் கட்டுரை வெளியாக ஏற்பாடு செய்தார். திரு சுந்தரத்தின் தொடர் கட்டுரைகள் மிகச் சிறப்பாக அமைந்தன. நட்சத்திரங்களின் அமைப்பை விளக்கி அவரே போட்ட படங்கள் அக்கட்டுரைகளில் இடம் பெற்றன. திரு.சுந்தரத்தின் கட்டுரைகள் பின்னர் நூலாக வந்தனவா என்பது தெரியவில்லை. அப்படி வெளியாகியிருந்தால் அந்த நூலை நட்சத்திர வானவியல் பற்றிய ஒரு பொக்கிஷம் எனலாம்.

திரு.ஐராவதம் அவர்களுக்கு வானவியல் மீது இருந்த ஆர்வத்தை விளக்க ஓரு தகவலை இங்கு குறிப்பிடலாம். அவர் ஐ. ஏ. எஸ் அதிகாரியாக மத்திய அரசில் பணியாற்றிய போது, அரசுப் பணி தொடர்பாக ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்த நாட்டில் தங்கியிருந்த போது ஓட்டலின் மொட்டை மாடிக்குச் சென்று நீண்ட நேரம் ஆசை தீர வான்காட்சிகளைத் தாம் கண்டதாக என்னிடம் ஒரு சமயம் கூறினார். சென்னையில் இருந்தால் தெளிவாகப் பார்க்க முடியாத நட்சத்திரங்களை ஆஸ்திரேலியாவில் பார்க்க முடிந்ததில் ஐராவதம் மகிழ்ச்சி அடைந்தார். அவர் ஆனந்தப்பட்டதற்குக் காரணம் உண்டு.

ஆஸ்திரேலியாவில் வானில் தலைக்கு மேலே தென்படுகின்ற அத்தனை நட்சத்திரங்களையும் நீங்கள் சென்னையிலிருந்து - ஏன் இந்தியாவிலிருந்து கூட - பார்க்க இயலாது. மிஞ்சிப் போனால் அவை தென் திசையில் அடிவானத்தில், அதுவும் தெளிவில்லாமல், தென்படும். அதே போல சென்னையில் தலைக்கு மேலே தெரிகின்ற நட்சத்திரங்கள் ஆஸ்திரேலியாவில் வடக்குத் திசையில் அடிவானில் தெளிவில்லாமல் மங்கலாகத் தெரியும். சொல்லப் போனால் சப்தரிஷி மண்டலத்தை ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களால் ஒருபோதும் காண முடியாது. பூமியின் வளைவே இதற்குக் காரணம்.

வானவியலில் அவருக்கு உள்ள ஈடுபாட்டை தெரிந்து கொண்ட நான் 1989-ல் அமெரிக்கா சென்றபோது நட்சத்திரங்கள் பற்றிய ஒரு நல்ல நூலை வாங்கி வந்து பரிசாக அளித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

வண்ணத்தில் சுடர்


நான் அமெரிக்கா சென்று விட்டுத் திரும்பி ஓரிரு நாட்களாகியிருக்கும். திரு.ஐராவதம் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பி, "ஒரு சந்தோஷ சமாச்சாரம், சுடர் இனி முற்றிலும் வண்ணப் படங்களுடன் வெளிவரும்" என்றார்.

எனக்கு மகிழ்ச்சி ஒரு புறம், திகைப்பு ஒரு புறம். எட்டு பக்களிலும் போடுவதற்கான அளவுக்கு வண்ணப் படங்களுக்கு எங்கே போவது? பிறகு எப்படியோ சமாளித்து வாரா வாரம் வண்ணப் படங்களாகப் போட்டோம். இங்கு நான் குறிப்பிட விரும்புவது திரு.ஐராவதம் அவர்கள் புதிது புதிதாகச் செய்து சுடர் இதழை மேம்படுத்துவதில் கொண்டிருந்த ஆர்வத்தை.




சுடர் இதழை நடத்துவதில் ஒரு கட்டத்துக்குப் பிறகு முழுப் பொறுப்பையும் திரு.ஐராவதம் என்னிடமே விட்டுவிட்டார். கட்டுரையாளர்களிடமிருந்து சுடருக்கு வருகின்ற அனைத்துக் கட்டுரைகளும் முதலில் அவருக்குத்தான் போகும். அத்தனை கட்டுரைகளையும் அவர் பொறுமையாக வாசிப்பார். அவை சில சமயம் சிறு குறிப்புகளுடன் எனக்கு வந்து சேரும். ஆனாலும் பிரசுரத்துக்குக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர் ஒருபோதும் தலையிட்டது கிடையாது.

ஒரு சமயம் எழுத்தாளர் ஒருவர் திரு.ஐராவதத்திடம் ஒரு கட்டுரையை நேரில் கொடுத்து அதை தினமணி சுடரில் வெளியிடும்படி கோரினார். சுடரில் வெளியிடுகின்ற அளவுக்கு அது தகுதியானதா என்று தீர்மானிப்பதை அவர் என்னிடமே விட்டிருந்தார். அது சுடருக்கு ஏற்றது அல்ல என்று நான் கூறிய போது அவர் என் முடிவில் தலையிடவில்லை.

மருத்துவப் பகுதி




பயனுள்ள பல நல்ல மருத்துவ கட்டுரைகள் சுடரில் வெளிவந்தன. பல மருத்துவர்கள் சுடரில் எழுதினர். ஒரு இதழில் மருத்துவக் கட்டுரை அதிகபட்சம் ஒன்று இருந்தால் போதும், இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று என்னிடம் கூறுவார். அதே போல கேள்வி-பதில் பகுதியிலும் மருத்துவத்துக்கு குறைவான இடம் இருந்தால் போதும் என்பது அவரது கருத்து.

மருத்துவர்களிடம் செல்லாமல் குறுக்கு வழியில் தங்களது உடல் கோளாறுகளுக்கு நிவாரணம் காண முயல்வது என்பது இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிற போக்காகும். ஆகவே மருத்துவக் கட்டுரைகளை அதிகம் வெளியிட முற்பட்டால் அது இந்த குறுக்குவழி மனப்பான்மையை ஊக்குவிப்பதாக அமையும் என்பது அவரது கருத்து.

பெரிய மனப்பான்மை


நான் ஏற்கனவே இரு அறிவியல் நூல்களையும், அத்துடன் நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுதியிருந்த காரணத்தாலும், சுடர் இதழுக்கு பொறுப்பாசிரியராக இருந்த காரணத்தாலும், அறிவியல் பத்திரிகையாளர் என்று அறியப் பெற்றிருந்தேன். அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்கா கண்டுள்ள முன்னேற்றம் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க அரசு 1989 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்கு அறிவியல் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்காவுக்கு ஒரு மாதப் பயணமாக வருமாறு அழைப்பு விடுத்தது.

அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் நானும் ஒருவன். இது தனிப்பட்ட முறையில் விடுக்கப்பட்ட அழைப்பாகும். அமெரிக்கத் தூதரிடமிருந்து எனக்கு இதற்கான அழைப்பு வந்ததும் இச்செய்தியை முறைப்படி ஆசிரியர் திரு. ஐராவதம் அவர்களிடம் தெரிவித்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் என்னைப் பாராட்டினார். இந்த அழைப்பை அவர் சுடருக்குக்கும் கிடைத்த ஒரு பெருமையாகக் கருதினார். பல தடவை அமெரிக்கா சென்று வந்தவர் என்ற முறையில் எனக்கு குறிப்புகளை அளித்தார்.

அமெரிக்க அரசிடமிருந்து மட்டுமன்றி பிரிட்டிஷ் அரசிடமிருந்தும் எனக்கு இவ்விதம் அழைப்பு வந்தது. இரு நாடுகளுக்கும் சென்று வர எனக்கு தினமணி நிர்வாகத்தின் அனுமதியும் சுமார் ஒன்றரை மாத கால விடுப்பும் தேவைப்பட்டது. திரு ஐராவதம் இதற்கு ஏற்பாடு செய்து உதவினார். அவரது இச்செயல் என் மனதைத் தொட்டது. அவர் நினைத்திருந்தால் வேலை பாதிக்கப்படும் என்று கூறி எனக்கு அனுமதி மறுத்திருக்கலாம். நேர்மாறாக அவர் உற்சாகத்துடன் எனக்கு ஆசி அளித்து அனுப்பி வைத்தார். அதை என்னால் என்றும் மறக்கவே முடியாது.

சுடரை ஆரம்பித்த போது தொடக்க காலத்தில் தமிழில் அவ்வளவாகக் கட்டுரைகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. விரைவிலேயே பலரும் கட்டுரைகளை எழுதி அனுப்ப ஆரம்பித்தனர். இவர்களில் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆகியோரும் அடங்குவர். நாங்கள் விதித்திருந்த நிபந்தனை காரணமாக அனைவரும் தமிழிலேயே எழுதி அனுப்பினர். தமிழில் எழுதுவது பெருமையாகக் கருதப்படாத காலம் அது.

சுடருக்கு எழுத ஆரம்பித்தவர்களில் பலரும் பின்னர் பெயர்பெற்ற அறிவியல் எழுத்தாளர்களாகி அறிவியல் நூல்களையும் வெளியிட்டனர். சுடர் இதழும், திரு.ஐராவதமும், பல அறிவியல் எழுத்தாளர்களை உருவாக்கியதாக, மக்களிடம் அறிமுகப்படுத்தியதாகக் கூறலாம். அறிவியல் இதழ் என்றால் அது எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதற்கு திரு ஐராவதம் அவர்கள் இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் என்று கூறினால் அது மிகையாகாது.



திரு.ஐராவதம் அவர்கள் தினமணி ஆசிரியர் பதவியிலிருந்து விலகிய பிறகு சில காலம் சுடர் எனது முழுப் பொறுப்பில் இருந்தது. ஆனால் அதே தரத்தில் நடத்த இயலாத அளவுக்கு சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டதால் பின்னர் நானும் விலகிக் கொண்டேன். பின்னர் சுடரும் நின்று போயிற்று. தினமணி சுடருக்கு முன்னர் தமிழ்ப் பத்திரிகை உலகில் அறிவியலுக்கென்று உயர்ந்த தரத்தில் இப்படி ஒரு வார இதழ் வெளிவந்தது கிடையாது.

தமிழகத்தில் நல்ல பொருளாதார அடிப்படை கொண்ட, வசதிகள் பலவற்றைக் கொண்ட, ஊடகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ் வளம் பெற வேண்டும் என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் தமிழுக்கு, தமிழ் பேசும் மக்களுக்கு, தாம் செய்கின்ற சேவையாகக் கருதி தமிழில் உயர்தர அறிவியல் இதழ்களை நடத்த முற்படவேண்டும்.

Jan 16, 2021

ஐராவதம் என்ற சிற்பி - முதல் பகுதி

Share Subscribe
திரு.ஐராவதம் மகாதேவனைப் பற்றிய புத்தகத்தை varalaaru.com 2008-ம் ஆண்டு வெளியிட்டது. அதில் ராமதுரை எழுதிய கட்டுரை இது. (ராமதுரை, ஐராவதம் மகாதேவன் - இருவரும் 2018-ல் காலமானார்கள்.)

***

தமிழ்க் கல்வெட்டு ஆராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற நிபுணரான திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களை ஒரு சிற்பி என்றும் சொல்லலாம். ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நுணுக்கமான ஒன்றைப் படைப்பவரை சிற்பி என்று வர்ணித்தல் தகும். திரு. ஐராவதம் அவர்களிடம் மறைந்துநின்ற சிற்பியை நான் தினமணியில் அவருடன் பணியாற்றியபோது கண்டேன்.

திரு.ஐராவதம் மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஐ. ஏ.எஸ் அதிகாரியாக 27 ஆண்டுக்காலம் உயர்ந்த பதவிகளை வகித்தவர். அந்த முறையில் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். சிந்து சமவெளி எழுத்துகள் பற்றி அவர் எழுதிய நூல் உலகப் புகழ் பெற்றது. இது போன்று பல ஆராய்ச்சி நூல்களை அவர் எழுதியுள்ளார். அவற்றைப் பற்றி எல்லாம் விமரிசிக்க எனக்குத் தகுதி இல்லை என்று கூறுவேன். அவர் தன் நூல்களை ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர். திரு.ஐராவதம் அவர்கள் 1987 முதல் 1991 வரை தினமணி நாளேட்டின் ஆசிரியராக இருந்தார். அப்போது தினமணியில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வந்த எனக்கு அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

தினமணி ஆசிரியராகப் பதவி ஏற்ற சில மாதங்களில் அவர் தமிழில் அறிவியலை வளர்க்க ஏதாவது செய்ய விரும்பினார். அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் தினமணி நாளிதழ் நீண்ட பாரம்பரியம் கொண்டது. தினமணி நாளேட்டில் வாரம் ஒரு நாள் அறிவியல் கட்டுரை  வெளியாகும். இந்த அளவில் நிறுத்திக் கொள்ளாமல், (இலவச இணைப்பாக) அறிவியலுக்கென்றே தனி வார இதழைத் தொடங்க விரும்பினார் திரு.ஐராவதம். நான் ஏற்கனவே அறிவியல் நூல்களை எழுதி பரிசு பெற்றவன் என்பதை அறிந்த அவர் என்னை அழைத்து அறிவியல் இதழ் தொடங்குவது பற்றிப் பேசினார்.

திரு.ஐராவதம் எதையும் நன்கு திட்டமிட்டு, விரிவாக விவாதித்து, மிக நுணுக்கமாக கவனித்து, பணியை மேற்கொள்பவர் என்பதை அப்போது நான் கவனித்தேன். சுடர் இதழின் பக்க அமைப்பு எப்படி இருக்க வேண்டும்; அச்சாகும் கட்டுரைகள் மற்றும் அவற்றின் தலைப்புகள் சுடர் இதழில் எந்தவிதமாக அமைய வேண்டும்; ஒவ்வொரு வரிக்கும் நடுவே எவ்வளவு இடைவெளி வேண்டும் என்பன போன்ற அடிப்படை விஷயங்களில் முதலில் தர அளவுகள் நிர்ணயிக்கப்பட்டன.

தினமணியில் அப்போது அச்சுக் கோர்க்க கம்ப்யூட்டர் முறை வந்து விட்டது என்றாலும் நாங்கள் எழுதிய எதுவும் அச்சுக் கோர்க்கப்பட்டு மெல்லிய ஃபோட்டோ ஃபிலிம் வடிவில் மீண்டும் எங்களிடம் வந்து சேரும். பிறகு ஃபிலிமைத் தனித் தனியே கத்தரித்து கெட்டியான தாளில் ஒட்டி அதை அச்சிடுவதற்கு அனுப்பி வைப்போம். பக்க அமைப்பை முடிவுசெய்து அச்சுக் கோர்க்கப்பட்ட ஃபிலிம்களை ஒட்டும் பணி மூத்த ஓவியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதல் மூன்று அல்லது நான்கு இதழ்களின் தயாரிப்புப் பணி திரு.ஐராவதம் அவர்களின் நேரடி மேற்பார்வையில், அவரது அறையில் நடைபெற்றது. மற்ற பல பணிகளுக்கிடையே இதற்கென அவர் நேரம் ஒதுக்கினார். எல்லாம் சரியான ஏற்பாட்டின் கீழ் வந்து விட்டது என்று அவர் திருப்தி அடைந்த பின்னரே சுடர் தயாரிப்புப் பணியை என்னிடம் ஒப்படைத்தார்.



நுனிப்புல் அறிவியல்


அக்காலத்தில் பல பத்திரிகைகளில் நுனிப்புல் அறிவியல் மட்டுமே காணப்பட்டது . உதாரணமாக "உலகில் 1100 வகையான வௌவால்கள் உள்ளன" என்று ஏதாவது ஒரு பக்கத்தில் மூலையில் ஒரு வரி காணப்படும். இரண்டாவது வரி இருக்குமானால் அது வௌவால்கள் இருளில் எவ்விதம் வழி அறிந்து பறக்கின்றன என்பதை விளக்குவதாக இராது. தினமணி சுடர் இப்படியான நுனிப்புல் அறிவியல் இதழாக இருக்கக்கூடாது என்பது ஆரம்பத்திலேயே திரு.ஐராவதம் எடுத்த முடிவுகளில் ஒன்றாகும். ஒரு செய்தியை எடுத்துக் கொண்டால் அது பற்றி மக்களுக்கு எளிய நடையில் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரை வடிவில் விரிவாக எடுத்துக் கூற வேண்டும் என்று முடிவானது.

சுடரின் முதல் சில இதழ்கள் தயாரிக்கப்பட்ட போது, திரு.ஐராவதம் அவர்கள் எவ்விதம் தமது உலகப் புகழ் பெற்ற நூல்களைப் பதிப்பித்தார் என்பது பற்றி நான் அறிந்து கொண்டேன். அவர் எழுதுகிற ஒரு நூல் இறுதி வடிவம் பெற்ற பிறகு அதன் மாதிரிப் பிரதியை (proof) அவரே படிப்பது வழக்கம். நூலின் 25வது பக்கத்தில் ஓர் எழுத்துப் பிழை தென்பட்டால், வேறு ஏதாவது பிழை கண்ணில் படாமல் போயிருக்கலாம் என்ற அடிப்படையில் மறுபடி முதல் பக்கத்திலிருந்து வாசிப்பார். 78வது பக்கத்தில் இன்னொரு பிழையா? மறுபடியும் முதலிலிருந்து வாசிப்பார். இப்படியாகத் தான் சிந்து சமவெளி எழுத்துகள் பற்றிப் பல நூறு பக்கங்கள் அடங்கிய தன் நூலை ஒரு பிழை கூட இல்லாமல் தயாரித்ததாக அவர் ஒரு சமயம் என்னிடம் தெரிவித்தார். எனக்கு இது மிகுந்த பிரமிப்பை உண்டாக்கியது. பிழையே இல்லாமல் ஒரு நூலைத் தயாரிக்க இது சிறந்த வழி என்றும் தோன்றியது.

விளம்பரங்கள்


அறிவியல் இதழ் என்பதால் தினமணி சுடரில் விளம்பரங்களைப் பிரசுரிப்பதில் சில நியதிகள் இருக்க வேண்டும் என்று திரு.ஐராவதம் அவர்கள் கருதினார். அதனால் மதுபான விளம்பரங்கள், சிகரெட் விளம்பரங்கள் ஆகியவை தினமணி சுடரில் இடம் பெறலாகாது என்று ஆரம்பத்திலேயே அவர் உறுதியான முடிவு எடுத்தார். விளம்பரப் பிரிவினரிடம் இது தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஆசிரியர் மீது வேறு ஒரு தரப்பிலிருந்து நிர்பந்தம் வந்தது. பலவித நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கப்படும் என்பதாகக் கூறிக்கொண்டு "சென்னை வருகிறார்", " திருச்சி வருகிறார்" என்று அறிவிக்கும் "வைத்தியசாலைகளின்" விளம்பரங்களைப் பல பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். தினமணி நாளிதழிலும், அதன் இதர வார இதழ்களிலும், இந்த விளம்பரங்கள் இடம்பெறுவதுண்டு. அதே விளம்பரங்கள் அறிவியல் ஏடான தினமணி சுடரில் வெளியாக வேண்டும் என்று "வைத்தியசாலைகள்" மிகவும் விரும்பின. அறிவியல் ஏடான சுடரில் வெளியானால் தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கும் என்று அவை நினைத்தன. அந்த வகையில் விளம்பரத் துறையினரை அவை நிர்ப்பந்தித்தன. விளம்பரத் துறையினர் ஆசிரியரிடம் இது குறித்துப் பேசிய போது அவர் இத்தகைய விளம்பரங்களுக்கு சுடரில் இடம் இல்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார். இந்த விஷயத்தில் ஆசிரியரின் முடிவில் நிர்வாகம் தலையிடவில்லை .

"சயன்டிஃபிக் அமெரிக்கன்" என்ற அமெரிக்க அறிவியல் இதழும், பிரிட்டனிலிருந்து வெளியாகும் " நியூ சயன்டிஸ்ட்" என்ற அறிவியல் வார இதழும் உலகப் பிரசித்தி பெற்றவை. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஒரு சமயம் அவ்விதழ்களின் ஆசிரியர்களை நான் நேரில் சந்தித்த போது அவர்களும் விளம்பரங்களைப் பிரசுரிப்பதில் அறிவியல் இதழ்கள் சில நியதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினர்.

கலைச் சொற்கள்


சுடருக்கு பலரும் கட்டுரைகளை எழுதி அனுப்பினர். இவ்விதம் அனுப்பப்படுகின்ற கட்டுரைகள் தமிழில் தான் இருக்க வேண்டும்  என சுடர் இதழில் எடுத்த எடுப்பிலேயே அறிவிக்கப்பட்டது. ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தெளிவாக்கப்பட்டது. தமிழில் சிந்தித்து தமிழில் எழுதப்படுகிற கட்டுரைகள் மூலம் அறிவியலைப் பரப்புவதுடன் அதன் மூலம் தமிழையும் செழுமையாக்க முடியும் என்பது ஆசிரியரின் கருத்து. 

மேற்படி அறிவிப்பின் பலனாகக் கட்டுரையாளர்கள் அனைவரும் தமிழிலேயே கட்டுரைகளை எழுதி அனுப்பினர். இவ்விதம் அனுப்பப்பட்ட கட்டுரைகளில் சிலவற்றை தான் திருத்த வேண்டியிருந்தது. கட்டுரையாளர்கள் சுடரைத் தொடர்ந்து வாசித்ததால் தமிழில் கட்டுரைகள் எவ்விதமாக அமைய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி எழுத ஆரம்பித்தனர்.

எனினும் சுடருக்கு வந்த கட்டுரைகளில் அறிவியல் தொடர்பான கலைச் சொற்கள் விஷயத்தில் ஒவ்வொரு கட்டுரையாளரும் குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லுக்குத் தனக்குச் சரி என்று தோன்றிய தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தும் போக்கு காணப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய கலைச் சொற்கள் அப்படியே இருக்க வேண்டுமே தவிர, இதுதான் சரியான தமிழ்ச் சொல் என்று சுடர் நிர்ணயித்து, அச்சொற்களை மாற்ற முற்படலாகாது என்பது திரு. ஐராவதம் அவர்கள் ஆரம்பத்திலேயே எடுத்த மற்றொரு முடிவாகும். ஆகவே கட்டுரைகளில் இடம் பெற்ற கலைச் சொற்கள் மாற்றப்படவில்லை.

தமிழைப் பொருத்தவரையில் அறிவியல் தொடர்பான கலைச் சொற்களில் தர வரைமுறை என்பது இன்னும் முடிவாக உருவாகாத ஒன்றாகும். காலப்போக்கில் இது தானாக உருவாகும். ஆகவே சுடர் இதில் வலியப் போய் தர வரைமுறையை நிர்ணயிக்க முற்பட வேண்டியதில்லை என்று அவர் கூறினார். இப்படிப்பட்ட நிலையை எடுப்பதால் ஒன்றும் கெட்டு விடாது. வெவ்வேறு கட்டுரையாளர்கள் எந்தப் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று திரு ஐராவதம் கூறினார். தவிர, பெரும்பாலான கலைச் சொற்களுக்கு சுடரில் நாங்கள் அடைப்புக்குள்ளாக ஆங்கிலச் சொல்லையும் பயன்படுத்தி வந்தோம். ஆகவே வாசகர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

வெவ்வேறு கட்டுரையாளர்கள் பயன்படுத்தும் கலைச் சொற்களையும் அவற்றுக்கு ஈடான ஆங்கிலச் சொற்களையும் தொகுத்து வாரா வாரம் சுடர் இதழில் வெளியிடலாமே என்று திரு. ஐராவதம் அவர்கள் யோசனை தெரிவித்தார். இவை "அறிவியல் அகராதி "என்ற தலைப்பில் தனிப் பகுதியாக வெளிவரலாயிற்று. இது வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.



அறிவியல் அகராதியில் இயற்பியல், வேதியியல், உயிரியல், வானவியல் தொழில்நுட்பம் என அறிவியலின் பல துறைகளையும் சேர்ந்த தமிழ்க் கலைச் சொற்கள் இடம் பெற்று வந்தன. அந்தந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் இதைப் படிக்க ஆரம்பித்து அறிவியல் அகராதியில் இடம் பெற்ற சொற்களுக்கு மாற்றாக வேறு பல சொற்களைப் பயன்படுத்தலாமே என்று கூறிக் கடிதங்களை எழுதலாயினர். சுடர் எடுத்த நிலைப்பாட்டினால் தமிழில் கலைச் சொல்லாக்கத்துக்கு வழி பிறந்தது என்றும் சொல்லலாம். இப்பகுதியானது நாளா வட்டத்தில் ஏராளமான வாசகர்களை ஈர்க்க ஆரம்பித்தது. குறிப்பிட்ட கலைச் சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தலாமே என்று கூறிய வாசகர்கள் அதற்கான காரணத்தையும் விவரித்தனர். இப்படியான கடிதங்களை வெளியிட "சொல்லாக்க மேடை" என்ற தலைப்பில் தனிப் பகுதி தொடங்கப்பட்டது. தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என பலரும் சொல்லாக்க மேடைப் பகுதியில் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர்.

தவிர, சுடரில் வெளியான கட்டுரைகளைப் பற்றி அல்லது அக் கட்டுரைகளில் இடம் பெற்ற விஷயங்கள் பற்றி வாசகர்கள் எழுதிய கடிதங்கள் "அறிவியல் மன்றம்" என்ற தலைப்பில் தனிப் பகுதியாக வெளியிடப்பட்டன. இப்பகுதிக்கும் நிறையக் கடிதங்கள் வரலாயின.

சுடர் எந்த அளவுக்கு ஆழ்ந்த விஷய ஞானம் கொண்ட வாசகர்களை ஈர்த்தது என்பதை அறிய எங்களுக்கு இப்பகுதிகள் உதவியாக இருந்தன.




அறிவியல் அகராதியில் வாரா வாரம் பல புதிய சொற்கள் இடம் பெற்றன. காலப் போக்கில் ஏராளமான சொற்கள் சேர்ந்தன. இவற்றைத் தனி அகராதி போன்றே வெளியிடலாம் என்ற அளவுக்குச் சொற்கள் சேர்ந்தன. வாரா வாரம் வெளிவந்த அறிவியல் அகராதி தனியே கத்தரித்து எடுத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் இந்த சொற்சேகரத்தின் பிரதி தங்களுக்குக் கிடைக்குமா என்று ஆராய்ச்சி மாணவர்கள் உட்படப் பலரும் சுடரை அணுகினார்கள். சுடரைப் பிரசுரிப்பது நிறுத்தப்பட்டு நானும் தினமணியை விட்டு விலகிய பின்னர் இந்த அறிவியல் அகராதி சேகரம் எங்கு போயிற்று என்பது தெரியவில்லை. அதற்கு ஒரு பிரதி எடுத்துக்கொள்ளாமல் போய்விட்டோமே என்பது எனக்கு வருத்தம்.

சுடரில் அறிவியல் தொடர்பாக கேள்வி-பதில் பகுதியும் இடம் பெற்றிருந்தது. இப்பகுதி குறிப்பாக மாணவர்களை மிகவும் ஈர்த்தது. வாசகர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு சுடர் பதிலளிக்காமல் அந்தந்த துறையைச் சார்ந்த நிபுணர்களே பதில்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கேள்விகள் வகை பிரிக்கப்பட்டு அந்தந்த துறையைச் சேர்ந்த நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களது பதில்கள் பெறப்பட்டன. நிபுணர்கள் தங்களது பல்வேறு அலுவல்களுக்கு இடையே சுடர் அனுப்பிய கேள்விகளுக்கு பதில்களை எழுதி அனுப்பினர். இப்பணியை அவர்கள் தமிழில் அறிவியலை வளர்ப்பதில் தங்களது பங்காகக் கருதி ஒத்துழைத்தனர். முடிந்த வரை இப்பகுதியில் படங்களும் சேர்க்கப்பட்டன.




ஆசிரியரின் கட்டுரை


திரு ஐராவதம் அவர்கள் சுடருக்கு கட்டுரைகளை அளித்தது கிடையாது. தினமணி செய்திப் பத்திரிகையைக் கவனிப்பதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. தவிரவும், பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தமது பத்திரிகையில் தாமே கட்டுரையைப் பிரசுரிப்பது என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்று அவர் கருதினார். எனினும், இதற்கு விதிவிலக்காக அறிவியல் கட்டுரை ஒன்றை எழுத வைத்த பெருமை கீழ்க்கண்ட செய்திக்கு உண்டு.

அச்சமயம் சென்னை அருங்காட்சி வளாகத்தில் டைனசார் விலங்கின் ஒரு பெரிய உருவம் வைக்கப்பட்டது. இந்த விலங்கின் உருவம் வைக்கப்பட்டதன் முக்கியத்துவம் பற்றி விவரித்த அதிகாரி ஒருவர் டைனசார் விலங்குகள் பற்றியும் அவற்றின் கற்படிவங்கள் பற்றியும் ஒரு பேட்டியில் தவறான தகவல்களைக் கூறியிருந்தார். இதைப் படித்த திரு ஐராவதம் அவர்கள் வெகுண்டார். அறிவியல் தொடர்பான ஒரு விஷயத்தை மக்களுக்குத் யார் தவறாக எடுத்துக் கூறினாலும் அவருக்குப் பிடிக்காது. ஆகவே மேற்படி செய்தியைப் படித்ததும் அவர் என்னைக் கூப்பிட்டு சுடருக்கு இந்த வாரம் கட்டுரை ஒன்றை எழுத விரும்புகிறேன், இடம் இருக்குமா என்று கேட்டார்.

டைனசார் பற்றி அவர் எழுதிய கட்டுரையில் அந்த வகை விலங்குகளின் தோற்றம், மறைவு பற்றி மட்டுமல்லாது உயிரினங்களின் எலும்புகள் எவ்விதம் கற்படிவமாக மாறுகின்றன என்பதும் தெளிவாக விவரிக்கப்பட்டது.




மூட நம்பிக்கைகளைக் களைவது அறிவியல் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று திரு. ஐராவதம் மகாதேவன் கருதினார். அந்த வகையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவ்வப்போது சுடரில் கட்டுரைகள் இடம் பெற்றன. சில கட்டுரைகள் தீவிர சர்ச்சைகளைக் கிளப்பின. நிறைய கடிதங்கள் வந்தன. கண்டனக் கடிதங்களும் சுடரில் "அறிவியல் மன்றம்" பகுதியில் வெளியிடப்பட்டன. அக்கடிதங்களுக்கு திரு ஐராவதமே பதிலளித்தார். அவர் என்றும் சர்ச்சைகளைக் கண்டு அஞ்சியவர் அல்லர். 

Oct 20, 2018

ராமதுரை காலமானார்

Share Subscribe
அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார்.

இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது. அவருடைய கட்டுரை முன்தினம் தினத்தந்தியில் வெளியானதாக மருமகள் அவரிடம் சொல்ல, கண்களைத் திறக்க முடியாமல், நினைவு சற்றே இருந்த நிலையில், மருமகளின் கையை அழுத்தி மனநிறைவைத் தெரிவித்தார்.

அவர் சமீப காலமாக வெவ்வேறு நிலையில் முற்றுப்பெறாமல் இருந்த புத்தகங்களை எழுதி முடித்து பதிப்பாளரிடம் ஒப்படைப்பதில் கவனம் செலுத்தினார். விரைவில் அவை வெளியாகும் என்று நம்பலாம்.

ராமதுரையின் நீண்ட பயணத்தில் உடன் இருந்தவர்கள் பலர். அவருக்கு வாய்ப்பளித்த பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் (தினத்தந்தி, நவமணி, தினமணி, தினமணி சுடர்), தொலைக்காட்சி மற்றும் வானொலியில் அவருடன் பணியாற்றியவர்கள், புத்தகங்களைச் சிறப்பாக வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் மற்றும் க்ரியா, அவரின் எழுத்துக்கு காரணமாக இருந்த உலகளாவிய வாசகர்கள், இறுதிவரை தொடர்பிலிருந்து புத்துணர்ச்சியூட்டிய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

- ராமதுரையின் குடும்பத்தினர்

Mar 30, 2018

சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை

Share Subscribe
இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனுக்கு சந்திரயான் 2 என்னும் விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தை முதலில் ஏப்ரலில் செலுத்துவதாக இருந்தது. பின்னர் அக்டோபரில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விண்கலமானது இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய எந்த நாடும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தப் போகிறது.

இதற்கு முன்னர் சந்திரனில் இறங்கிய பிற நாடுகளின் ஆய்வுக் கலங்கள் அனைத்தும் சந்திரனின் நடுக்கோட்டுப் பகுதியில் தான் போய் இறங்கின. ஆனால் இப்போது இந்தியா அனுப்ப இருக்கும் ஆய்வுக் கலமானது சந்திரனின் தென் துருவத்துக்கு அருகில் போய் இறங்க இருக்கிறது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் ஓர் ஆய்வுக் கலம் இறங்குவது இதுவே முதல் தடவையாகும்.

சந்திரன் பூமியிலிருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது தொடர்ந்து பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. சந்திரனுக்கு இதுவரை பல விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் ஆறு தடவை சந்திரனுக்குச் சென்று கல்லையும் மண்ணையும் சேகரித்து வந்துள்ளனர். அவை விஞ்ஞானிகளால் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆனாலும் சந்திரனின் தோற்றம் உட்பட சந்திரன் பற்றிய பல விஷயங்கள் இன்னும் புதிராகவே உள்ளன.

சந்திரனை ஆராய்வதற்காக இந்தியா 2008 ஆம் ஆண்டில் சந்திரயான் 1 என்னும் பெயர் கொண்ட விண்கலத்தை அனுப்பியது நினைவிருக்கலாம். அந்த விண்கலம் சந்திரனின் நிலப்பரப்பை முப்பரிமாணப் படங்களாக எடுத்த்து. தவிர, சந்திரயானில் இடம் பெற்றிருந்த அமெரிக்க ஆராய்ச்சிக் கருவியானது சந்திரனில் தண்ணீர்த் திவலைகள் தோன்றி மறைகின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தது என்றாலும் இது சந்திரயானின் சாதனையாகவே கருதப்படுகிறது.

சந்திரயான் 1 விண்கலத்தைத் தொடர்ந்து இப்போது சந்திரயான் 2 செலுத்தப்படுகிறது. இதில் தாய்க் கலம், இறங்குகலம், ஆய்வுக் கலம் என மூன்று பகுதிகள் இருக்கும்.

முந்தைய சந்திரயான் 1 விண்கலம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட்து. இப்போது ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 எனப்படும் ராட்சத ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் உயரே செலுத்தப்படும்.

உயரே சென்றதும் அது நேரடியாக சந்திரனுக்கு கிளம்பி விடாது. அது பல தடவை பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றும். ஒவ்வொரு தடவையிலும் அதன் மறு முனை அதிக தொலைவுக்குச் செல்லும். கடைசியில் ஒரு கட்டத்தில் அது சந்திரனின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும். இவ்விதம் சந்திரனை அடைவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதம் ஆகிவிடலாம். குறைந்த எரிபொருள் செலவில் சந்திரனை அடைவதற்காக இந்த உத்தி கையாளப்படுகிறது.

சந்திரனை எட்டிய பிறகு அது சந்திரனிலிருந்து எப்போதும் 100 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் வகையில் சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும்.

அதன் பின்னர் சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து இறங்கு கலம் தனியே பிரிந்து கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும். சந்திரனில் இறங்குவது என்பது மிக சிக்கல் பிடித்த விஷயம். சந்திரனில் மட்டும் காற்று மண்டலம் இருந்தால் பாராசூட் மூலம் சுலபத்தில் இறங்கி விடலாம்.

ஆனால் காற்று மண்டலம் கிடையாது என்பதால் இறங்கு கலத்தின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய ராக்கெட்டுகள் கீழ் நோக்கி நெருப்பைப் பீச்சும். இதன் பலனாக இறங்கு கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு அது மெல்லக் கீழே இறங்கும். இறங்கு கலத்தின் அடிப்புறத்தில் ராடார் கருவியும் இருக்கும். அது சந்திரனின் தரை நெருங்கி விட்டதா என்பதைத் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கும்.
சந்திரனில் நடமாடப் போகும்  ஆய்வுக் கலம்
சந்திரனில் வட்ட வடிப் பள்ளங்கள் நிறையவே உண்டு. எனவே இறங்கு கலம் அப்படியான பள்ளத்தில் இறங்கி விடலாகாது. மிகவும் சரிவான இட்த்திலும் இறங்கி விடக்கூடாது. இப்படியான பிரச்சினைகள் ஏற்படாமலும் ராடார் பார்த்துக் கொள்ளும். கர்நாடகத்தில் சித்ரதுர்கா என்னுமிடத்தில் சந்திரனில் உள்ளது போன்ற வட்ட வடிவப் பள்ளங்கள் உண்டாக்கப்பட்டு இறங்கு கலத்தின் மாடலைப் பயன்ப்டுத்தி பல தடவை ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன.

சந்திரனில் தரையானது தனித் தன்மை கொண்டது. சந்திரனின் ம்ண்ணானது கண்ணாடியைப் பொடி செய்து போட்டது போல நற நற என்று இருக்கும்.

சந்திரனின் தென் துருவத்துக்கு அருகே இறங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. சந்திரயான் 1 முன்னர் எடுத்து அனுப்பிய படங்களை வைத்து இந்த இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டில் ஏதேனும் ஓர் இடத்தில் இறங்கு கலம் இறங்கும். இரண்டு இடங்களுமே அருகருகே உள்ளன.

இறங்கு கலம் தரையில் இறங்கிய பிறகு அதற்குள்ளிருந்து ஆய்வுக் கலம் வெளிப்படும். இது ஆறு கால்களைக் கொண்டதாகும். இது தானாகவே அங்குமிங்குமாகச் செல்லக்கூடியதாகும். அத்துடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கும் கட்டளைக்கு ஏற்பவும் இது செயல் படும்.

சந்திரனின் நிலப்பரப்பை ஆராய இறங்கு கலத்திலும் சரி, நடமாடக்கூடிய ஆய்வுக் கலத்திலும் சரி தகுந்த ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றிருக்கும். ஆய்வுக் கலத்தில் உள்ள கருவிகள் செயல்பட மின்சாரம் தேவை. அந்த வகையில் ஆய்வுக் கலத்தில் சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான சோலார் பலகை இடம் பெற்றிருக்கும்.அத்துடன் சுற்றுப்புறங்களைப் படம் எடுத்து அனுப்ப காமிராக்கள் இருக்கும்.

சந்திரன் தனது அச்சில் மிக மெதுவாகச் சுழல்வதால் பூமியைப் போல அன்றி சந்திரனில் பகல் என்பது (பூமிக் கணக்குப்படி) 14 நாட்கள் ஆகும்.. இதே போல 14 நாட்கள் இரவாக இருக்கும். எனவே நடமாடும் ஆய்வுக்கலமானது பகல் 14 நாட்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

இரவு நாட்கள் வந்த பின்னர் மின்சார உற்பத்தி சாத்தியமில்லை என்பதால் ஆய்வுக் கலம் செயலற்று இருக்கும்.

ஆய்வுக் கலம் சந்திரனின் தரையில் மிக மெதுவாகவே பயணம் செய்வதாக இருக்கும். பகல் 14 நாட்களில் ஆய்வுக் கலம் சுமார் 200 மீட்டர் தூரத்தைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இத்துடன் ஒப்பிட்டால் இறங்கு கலம் அது இறங்கிய இட்த்தில் நிலையாக இருந்தபடி சந்திரன் தொடரபான தகவல்களை சேகரிக்கும்.

இறங்கு கலம் நடமாடும் ஆய்வுக் கலம் ஆகிய இரண்டும் உயரே சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான் 2 தாய்க் கலத்துக்கு தகவல்களை அனுப்பும். தாய்க் கலம் இஸ்ரோ கட்டுப்பாட்டுக் கேந்திரத்துக்கு அத்தகவல்களை அனுப்பும்.

பூமியில் மேகங்கள், மழை, கடல், காற்று, தாவரங்கள் முதலியவை வெப்பத்தையும் குளிரையும் ஓரளவு சமன்ப்படுத்துகின்றன. சந்திரனில் இவை எதுவுமே கிடையாது.

எனவே சந்திரனில் பகலில் வெப்பம் 130 செல்சியஸ் வரை இருக்கும். இரவில் குளிர் என்பது மைனஸ் 170 டிகிரி அளவுக்கு இருக்கும். சந்திரயானின் இறங்கு கலமும் நடமாடும் ஆய்வுக் கலமும் இவ்வித கடுமையான நிலைமைகளை சமாளித்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

(எனது இக்கட்டுரை தினத்தந்தி இதழில் வெளியானதாகும்)

Mar 15, 2018

மூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்

Share Subscribe
இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வாழ்ந்தால் அதிகம்” என்று டாக்டர்கள் 22 வயதில் சொல்லக்கேட்ட விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) தமது மன உறுதியால் 76 வயது வரை வாழ்ந்து இங்கிலாந்தில் மார்ச் 14 ஆம் தேதி காலனாமானார்.

ஸ்டீபன் ஹாக்கிங்
By NASA - Original. Source (StarChild Learning Center)

பேச முடியாது. நடமாட முடியாது, என்ற நிலையிலும் அவர் செயற்கைக் குரல் மூலம் பேசினார். முக அசைவுகள் மூலம் தனது மின் சக்கர நாற்காலியை இயக்கினார். சக்கர நாற்காலியிலும் நேராக உட்கார முடியாது. ஒரு புறமாக சாய்ந்து தான் அமர்ந்திருப்பார். பெரிய தலை. அகன்ற காதுகள்.

உறுப்புகள் வேலை செய்யவில்லையே தவிர, அவருடைய மூளை மிக நன்றாகவே செயல்பட்டது. நடமாட முடியாத நிலையில் மின்சார நாற்காலியில் அமர்ந்தபடி இருந்தார் என்றாலும் அவரது சிந்தனை பிரபஞ்ச வெளியில் உலாவியது. பிரபஞ்சவியல் பற்றி முக்கிய கொள்கைகளை உருவாக்கினார்.

மூளைத் திறனில் அவர் சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton), ஐன்ஸ்டைன் (Einstein), ஆகியோருக்கு நிகராகக் கருதப்பட்டவர். இளம் வயதில் பள்ளியில் ஹாக்கிங்குக்கு "ஐன்ஸ்டைன்" என்ற பட்டப் பெயர் உண்டு.

ஹாக்கிங்குக்கு இருந்த நோய் லட்சத்தில் ஒருவரைத்தான் தாக்குகிறது. உடலில் உள்ள தசைகள் படிப்படியாக செயலிழந்து விடும். இந்த தசை செயலிழப்பு நோய் ஒவ்வொரு உறுப்பாகப் பரவும். மருந்தே கிடையாது.

நல்ல வேளையாக ஹாக்கிங் விஷயத்தில் இந்த நோய் மெதுவாகப் பரவியது. அதற்குள்ளாக அவர் முடிந்த அனைத்தையும் சாதித்துக் காட்டினார்.

பட்ட மேற்படிப்பின் போது தான் அவருக்குள்ள நோய் கண்டுபிடிக்கப்பட்ட்து. ஆரம்பத்தில் மனம் தளர்ந்தது என்றாலும் அவர் சமாளித்துக் கொண்டு முன்னேறினார். அப்போது இங்கிலாந்தில் பிரெட் ஹாயில் (Fred Hoyle) பிரபல விஞ்ஞானி. அவரது மேற்பார்வையில் ஹாக்கிங் பட்ட மேற்படிப்பை முடிக்க விரும்பினார். ஆனால் அது சாத்தியப்படவில்லை. வேறு ஒரு விஞ்ஞானியின் கீழ் ஹாக்கிங் செயல்பட்டார்.



ஸ்டீபன் ஹாக்கிங்
By woodleywonderworks
https://www.flickr.com/photos/wwworks/3728608454/

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பது குறித்து அக்கால கட்டத்தில் இருவிதக் கொள்கைகள் நிலவின. பிரெட் ஹாயிலும் இந்தியாவைச் சேர்ந்த ஜெயந்த் நார்லிகர் (Jayant Narlikar) என்ற விஞ்ஞானியும் பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்ற கொள்கையைக் கூறிவந்தனர். இதற்கு நேர் மாறான கொள்கை பிரபஞ்சம் ஒரு புள்ளியில் ஜனித்தது என்று கூறியது. ஹாக்கிங் பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் உண்டு என்ற கொள்கையை ஆதரித்து நின்றார்.

ஸ்டீபன் ஹாக்கிங் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல பல்கலைக் கழகங்களில் பணி புரிந்தார். பேராசிரியராகப் பணி புரிந்தார் அவரது வழிகாட்டுதலில் பலர் டாக்டர் பட்டம் பெற்றனர்.

பிரபஞ்சவியல், நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சி, அண்டைப்புற நட்சத்திரங்களை விழுங்கும் பிளாக் ஹோல் (Black Hole) எனப்படும் பகாசுர நட்சத்திரம் ஆகியவை பற்றி எழுதியும் பேசியும் வந்த ஹாக்கிங் உயர் இயற்பியலிலிருந்து கீழே இறங்கி வந்து பொது மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதவும் பேசவும் திறன் படைத்தவராகவும் திகழ்ந்தார்.

ஹாக்கிங் உரையாற்றுகிறார் - 2015
By Alexandar Vujadinovic - Own work
https://commons.wikimedia.org/w/index.php?curid=44259942

 அந்த வகையில் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். அவர் எழுதிய நூல்களில் “காலத்தின் சுருக்க வரலாறு: (A Brief History of Time) என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த நூலின் விற்பனை ஒரு கோடி பிரதிகளை எட்டியது. வாசகர்கள் "முழுவதுமாக படித்து முடிக்காத பிரபல நூல்" என்ற பெயரும் அந்த நூலுக்கு உண்டு.

பிளாக் ஹோல் எனப்படும் நட்சத்திரங்கள் பற்றிய கொள்கையை உருவாக்கியதற்காக ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும், ஆனால் கிடைக்கவில்லை.

பிளாக் ஹோல் நட்சத்திரம் நிரந்தரமானது அல்ல. காலப் போக்கில் அது கதிர் வீச்சாக வெளிப்பட்டு அழிந்து விடும் என்று ஹாக்கிங் கூறினார். ஆனால் அக்கொள்கையை ஏதேனும் ஒரு வகையில் உறுதிப்படுத்த வழியே கிடையாது. உறுதிப்படுத்தப்படாத, உறுதிப்படுத்த முடியாத கொள்கைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. அப்படியும் அவர் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.

ஏதாவது ஒரு வகையில் பூமியில் மனித குலத்துக்குப் பேரழிவு ஏற்படலாம் என்பது ஹாக்கிங்கின் கொள்கை. ஆகவே மனிதன் பூமியை விட்டு வேறு கிரகங்களுக்கு குடிபெயர ஆயத்தமாக வேண்டும் என்று அவர் கூறி வந்தார். அந்த வகையில் அவர் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஆதரவு அளித்து வந்தார்

ஒரு சமயம் அவர் ஜெட் விமான மூலம் உயரே சென்று அந்தரத்தில் பறக்கும் அனுபவத்தைப் பெற்றார். விண்கலம் மூலம் உயரே செல்வதற்காக டிக்கெட்டும் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு அவ்வளவு ஆர்வம்.

அந்தரத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்
By Jim Campbell/Aero-News Network
https://www.flickr.com/photos/39735679@N00/475109138

பிரபஞ்ச வெளியில் பூமி மாதிரியில் வேறு கிரகம் இருக்கலாம் அப்படியான கிரகத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்கலாம் என்ற கருத்தை ஹாக்கிங் ஆதரித்தார். அப்படியான வேற்றுலக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள நாம் ரேடியோ அலைகள் மூலம் செய்தி அனுப்ப முற்படலாகாது என்றும் அவர் கூறினார். வேற்றுலக மனிதர்களை நம்ப முடியாது என்றார்.

பூமி இருக்கின்ற இடத்தை வெளி உலகினருக்குத் தெரியப்படுத்தலாகாது. இதனால் ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என்றும் ஹாக்கிங் கருதினார்.

ஹாக்கிங்குக்கு உடல் பிரச்சினை இருந்த போதிலும் அவர் தமது 22 வது வயதில் ஜேன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஹாக்கிங்குக்கு ஜேன் பேருதவியாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஹாக்கிங்கின் உடல் நிலை மேலும் மோசமான நிலையை எட்டிய போது அவரை 24 மணி நேரமும் கூடவே இருந்து கவனித்துக் கொள்ள மூன்று வேளைகளுக்கு மூன்று நர்சுகளை நியமிக்க வேண்டி நேர்ந்தது. இந்த நேரத்தில் ஹாக்கிங்குக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில் ஹாக்கிங்குக்கு அந்த மூன்று நர்சுகளில் ஒருவரான எலைன் மேசன் மீது ஈர்ப்பு ஏற்பட்ட்து. ஹாக்கிங் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 1995 ஆம் ஆண்டில் அந்த நர்ஸைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்தில் முடிந்தது. ஹாக்கிங்குக்கு முதல் மனைவி மூலம் மூன்று குழந்தைகள். இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இல்லை.

Mar 11, 2018

சீன விண்கலம் பூமியில் விழப் போகிறது

Share Subscribe
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உயரே செலுத்தப்பட்ட சீன விண்வெளி நிலையம் இப்போது பூமியில் வந்து விழப் போகிறது. இதன் எடை எட்டு டன்.

டியான்கோங் என்னும் பெயர் கொண்ட இந்த சீன விண்வெளி நிலையம் மார்ச் 29 ந் தேதியிலிருந்து ஏப்ரல் 9 ந் தேதிக்குள்ளாக உலகில் கனடா, ஐரோப்பா, ரஷியா நீங்கலாக எந்த நாட்டின் மீதும் வந்து விழலாம். டியான்கோங் என்றால் சீன மொழியில் வான்மாளிகை என்று பொருள்.

பொதுவில் இப்படியான ஒரு விண்கலம் வானிலிருந்து காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி விழும் போது கடுமையாக சூடேறி தீப்பற்றும். அதன் விளைவாக விண்கலத்தின் பெரும் பகுதி தீப்பிடித்து முற்றிலும் அழிந்து விடும். எனினும். சில பகுதிகள் மட்டும் அழியாமல் கீழே வந்து விழலாம். கடந்த காலத்தில் அப்படி வந்து விழுந்தது உண்டு.

டியான்கோங் விண்வெளி நிலையம் 
அமெரிக்க நாஸாவின் ஸ்கைலாப் என்னும் பெயர் கொண்ட விண்வெளி நிலையம் 1979 ஆம் ஆண்டில் இவ்விதம் கீழே வந்து விழுந்த போது உலகெங்கிலும் பெரும் பீதி கிளம்பியது. இந்தியாவில் வந்து விழலாம் என்றும் அப்போது கவலை நிலவியது. கடைசியில் அதன் பகுதிகள் ஆஸ்திரேலியாவில் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வந்து விழுந்தன.

ஒரு விண்கலத்தை யாருக்கும் தீங்கின்றி பசிபிக் கடலில் வந்து விழும்படி செய்ய முடியும். கடைசி வரை அந்த விண்கலம் அதை உயரே செலுத்திய நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமானல் அது சாத்தியம். சீனாவின் டியான்கோங் விண்வெளி நிலையம் 2011 ஆம் ஆண்டில் உயரே செலுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீன விண்வெளி கேந்திரம் அந்த விண்கலம் மீதான கட்டுப்பாட்டை இழந்தது.

அதன் பிறகு அந்த விண்கலம் தொடர்ந்து பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தாலும் மெல்ல மெல்ல பூமியை நோக்கி இறங்கத் தொடங்கியது .ஆரம்பத்தில் இந்த விண்கலம் பூமியிலிருந்து 362 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது சீன விண்வெளி வீரர்கள் வேறு விண்கலம் மூலம் உயரே சென்று டியான்கோங் விண்வெளி நிலையத்தில் தங்கிப் பணியாற்றினர்.

அண்மைக்காலமாக டியான்கோங் மெல்ல மெல்ல பூமியை நோக்கி இறங்கலாயிற்று. இப்போது அது 258 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுகிறது. அடுத்த சில வாரங்களில் அது வேகமாக கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்து காற்று மண்டலத்தில் நுழையும் என்று கருதப்படுகிறது.

சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்திலும் மிக மெல்லிய அளவுக்குக் காற்று உண்டு.இக்காற்றானது விண்கலத்தின் - (செயற்கைக்கோள்களின்) வேகத்தைக் குறைக்க முற்படுகிறது. வேகம் குறையும் போது பூமியின் ஈர்ப்பு சக்தியின் விளைவு அதிகரிக்கிறது. எனவே அவை கீழே விழ முற்படுகிறது.

இப்படி ஏற்படாமல் தடுக்க, குறிப்பாக தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் எரிபொருள் இருக்கும். சிறு பீச்சு கருவிகளும் இருக்கும். இவை எரிபொருளைப் பயன்படுத்தி செயல்படும் போது செயற்கைக்கோள் தகுந்த அளவுக்கு வேகம் பெறும். செயற்கைக்கோள் தொடர்ந்து உரிய பாதையில் இருக்கும்.கட்டுப்பாட்டு கேந்திரத்திலிருந்து தக்க ஆணைகளைப் பிறப்பித்து இவ்விதம் செய்ய முடியும்.

சீன விண்கலத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அது வேகத்தை இழந்து பூமியை நோக்கி இறங்கலாயிற்று.

சுமார் 130 டன் எடை கொண்ட ரஷியாவின் மிர் எனப்படும் விண்வெளி நிலையம் 1986 முதல் 2001 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. இனி அது தேவையில்லை என்று ரஷியர்கள் முடிவு செய்த போது திட்டமிட்டு அதை பசிபிக் கடலில் வந்து விழும்படி செய்தனர். எனவே மிர் விண்கலம் யாரையும் பயமுறுத்தாமல் பசிபிக் கடலில் வந்து விழுந்தது.

விண்வெளி நிலையம் என்பது விண்வெளி வீரர்கள் பல மாத காலம் தங்கி ஆராய்ச்சி நடத்தும் பொருட்டு உயரே பறக்கவிடப்படுகின்ற விண்கலமாகும். இது பல கட்டங்களில் படிப்படியாக உருவாக்கப்படுவதாகும். அமெரிக்கா. ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ரஷியா, கனடா, ஜப்பான் ஆகியவை சேர்ந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம் 1998 முதல் உயரே இருந்தபடி பூமியைச் சுற்றி வருகிறது. சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற இந்த விண்வெளி நிலையத்தின் எடை சுமார் 420 டன்.

Feb 14, 2018

சூரியனை சுற்றி வரும் கார்

Share Subscribe
காரில் ஏறிக்கொண்டு சூரியனை சுற்றி வர முடியாது தான். ஆனால் காரை உயரே செலுத்தி அது சூரியனை சுற்றி வரும்படி செய்ய முடியும்.

அமெரிக்க கோடீசுவரர் ஒருவர் தாம் உருவாக்கியுள்ள மிக நவீன ராக்கெட்டில் ஒரு காரை வைத்து உயரே செலுத்தியுள்ளார். அது பூமியைப் போல சூரியனைச் சுற்றி வர ஆரம்பித்துள்ளது. அந்தக் காரும் அவர் உருவாக்கியதே.


பால்கன் ஹெவி ராக்கெட்
அந்த கோடீசுவரரின் பெயர் எலான் மஸ்க். தென்னாப்பிரிக்காவில் பிறந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் படித்த அவருக்கு விண்வெளியில் சாதனை புரிய வேண்டும் என்று இளம் வயதிலேயே ஆசை. அவர் ஆரம்பத்தில் பல கம்பெனிகளை நிறுவினார். அவற்றில் ஒன்று பேபால் (PayPal) என்பது.

கையில் ஓரளவு பணம் சேர்ந்ததும் அவர் 2002 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்னும் விண்வெளி நிறுவனத்தைத் தொடங்கினார். பல ராக்கெட்டுகளையும் விண்கலங்களையும் உருவாக்கி உயரே செலுத்துவது அவரது நோக்கம். ஏராளமான எஞ்சினியர்க்ளையும் மற்றும் நிபுணர்களையும் அவர் அமர்த்திக் கொண்டார். தங்கள் நிறுவனத்துக்கென ராக்கெட் தளத்தையும் அமைத்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் அவர் சிறிய ராக்கெட்டுகளை உருவாக்கி அவற்றைப் பரிசோதித்தார். அந்த ராக்கெட்டுகளுக்கு பால்கன் (Falcon) என்று பெயர். அந்த வரிசையில் 2013 ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய பால்கன் 9 என்ற ராக்கெட் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ராக்கெட் துறையில் அது புதிய சாதனையை ஏற்படுத்தியது.

பொதுவில் செயற்கைக்கோள்களை செலுத்துகின்ற ராக்கெட்டுகள் அனைத்துமே ஒன்றன் மீது ஒன்றாகப் பொருத்தப்பட்ட பல அடுக்கு ராக்கெட்டுகளே. உயரே செல்லச் செல்ல ஒவ்வொரு அடுக்கு ராக்கெட்டும் பணி முடிந்த பின்னர் தனியே கழன்று நடுவானிலேயே தீப்பிடித்து அழிந்து விடும்..

உலகில் ராக்கெட் யுகம் தோன்றியதிலிருந்து கடந்த சுமார் 70 ஆண்டுகளாக உயரே செல்கின்ற ராக்கெட்டுகளின் கதி இது தான். எலான் மஸ்க். கதையைப் புரட்டிப் போட்டு தனது இரண்டு அடுக்கு பால்கன் 9 ராக்கெட்டின் அடிப்புற ராக்கெட் தனியே கழன்று தரையில் குறிப்பிட்ட இலக்கில் மெல்ல வந்து உட்காரும்படி சாதித்துக் காட்டினார். பால்கன் 9 ராக்கெட் 20 க்கும் மேற்பட்ட தடவை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படி வந்து இறங்கிய ராக்கெட்டை எலான் மஸ்க் மீண்டும் பயன்படுத்தலானார்.

உயரே சென்ற ராக்கெட்டுகளில் இரண்டு கீழே வந்து இறங்குகின்றன
செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டில் எரிபொருளுக்கு ஆகும் செலவு அதிகமில்லை. உருளை வடிவ ராக்கெட்டை உருவாக்குவதற்கு ஆகும் செல்வு தான் அதிகம். எனவே அந்த வகையில் ராக்கெட்டைச் செலுத்த எலான் மஸ்கிற்கு குறைந்த செலவே ஆகிறது. .

மேலும் மேலும் சாதனைகளை நிகழ்த்துவதையே நோக்கமாகக் கொண்ட எலான் மஸ்க் அடுத்து மூன்று பால்கன் 9 ராக்கெட்டுகளை பக்கவாட்டில் ஒன்றோடு ஒன்றாக இணைத்தார்’. இதன் பெயர் பால்கன் ஹெவி என்பதாகும்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பால்கன் ஹெவி ராக்கெட் கேப் கெனவரல் ராக்கெட் தளத்திலிருந்து பிப்ரவரி 6 ந் தேதி உயரே செலுத்தப்பட்டது. உலகில் இப்படியான ராக்கெட்டே கிடையாது என்று கூறும் அளவுக்கு இது சக்திமிக்க பிரும்மாண்டமான ராக்கெட் ஆகும். இது சுமார் 64 டன் எடையை சுமந்து செல்லக்கூடியது.

1969 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு விண்வெளி வீர்ர்களை அனுப்பிய சாடர்ன் 5 ராக்கெட் தான் பால்கன் ஹெவி ராக்கெட்டை விட அதிக சக்தி கொண்டதாகும்.

பால்கன் ஹெவி உயரே செலுத்தப்படுவது இதுவே முதல் தடவை.

எனவே இதற்கென இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதன் முகப்பில் செயற்கைகோள் அல்லது விண்கலம் எதுவும் வைக்கப்படவில்லை. காரணம் இது தான். அந்த ராக்கெட் அழிந்தால் செயற்கைக்கோளும் அழிந்து தேவையற்ற வீண் செலவு ஏற்படும். ஒரு ராக்கெட்டை முதல் தடவையாக சோதிக்கும் போது அதன் முகப்பில் எடை மிக்க கான்கிரீட் பாளங்க்ள் அல்லது இரும்புத் தண்டுகளை வைத்து அனுப்புவது வழக்கம்.

ஆனால் எலான் மஸ்க் தனது பால்கன் ஹெவி ராக்கெட்டின் முகப்பில் சிவப்பு நிறக் காரை வைத்து அனுப்பினார். ராக்கெட் தயாரிக்கும் எலான் மஸ்க் மின்சார பாட்டரி மூலம் இயங்கும் கார்களையும் தயாரித்து வருகிறார். அந்தக் கம்பெனிக்கும் அவர் தான் தலைவர்.

மஸ்க் தனது ராக்கெட்டின் முகப்பில் தனது தயாரிப்பான ரோட்ஸ்டர் காரை வைத்ததோடு நிற்கவில்லை. அந்த காரில் ஸ்டியரிங்கைப் பிடித்த மாதிரியில் விண்வெளி வீர்ருக்கு உரிய உடை அணிந்த முழு உருவ மனிதப் பொம்மையையும் வைத்து அனுப்பினார். பின்னணியில் ஒரு பாடலும் இசைத்துக் கொண்டிருந்த்து. இதெல்லாம் எலான் மஸ்கின் ஐடியா.

உயரே சீறிப்பாய்ந்த பால்கன் ஹெவி ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதை வரை (5 கோடி கிலோ மீட்டர் தூரம்) செல்லும் என்று கருதப்பட்டது. ஆனால் அது சிறப்பாக செயல்பட்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதையையும் தாண்டி சுமார் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று ரோட்ஸ்டர் காரை விண்ணில் செலுத்தியது.

அந்தக் கார் பின்னர் சூரியனைச் சுற்ற ஆரம்பித்த்து. அது அப்படிச் சுற்றும் போது ஒரு சமயம் பூமிக்கு அருகில் வந்து பூமியைக் கடந்து செல்லும். .பிறகு மறுபடியும் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் செல்லும்.

எலான் மஸ்க்
அந்தக் கார் என்ன ஆகும் என்று கேட்கலாம். அது பல ஆயிரம் ஆண்டுகள் இவ்விதம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும். இப்படிச் சுற்றி வர அதில் எஞ்சினோ எரிபொருளோ கிடையாது. இயற்கை விதிகளுக்கு உட்பட்டு பூமி எவ்விதம் சூரியனை சுற்றுகிறதோ அதே மாதிரியில் அந்த காரும் சுற்றிக் கொண்டிருக்கும்.

எலான் மஸ்கின் அடுத்த திட்டம் சந்திரனுக்கு பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இரு விண்வெளி வீர்ர்களை (பணம் பெற்றுக்கொண்டு) அனுப்புவதாகும். இரு விண்வெளி வீர்ர்கள் அமர்ந்து செல்ல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்கெனவே குரூ டிராகன் என்ற விண்கல்த்தை உருவாக்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப பி.எப்.ஆர் என்னும் ராட்சத ராக்கெட்டை உருவாக்குவதில் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். செவ்வாயில் மனிதர்கள் வசிக்கும் காலனியை ஏற்படுத்துவது அவரது நீண்ட காலத் திட்டமாகும்.

ஓரளவு வசதி உள்ளவர்களும் விண்வெளிக்குச் சென்று வருவதற்கான நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ராக்கெட் தயாரிப்பு, விண்கலத் தயாரிப்பு, மின்சாரக் கார் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள எலான் மஸ்க் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளார். இவை போதாதென நகரங்களுக்கு இடையே சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் பயணம் செய்வதற்கான திட்டத்திலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். 46 வயதான எலான் மஸ்க் அசகாய சூர்ர்.

(எனது இக்கட்டுரை பிப்ரவரி 13 ந் தேதி தினத்தந்தி இதழில் வெளிவந்ததாகும்)

Feb 1, 2018

சந்திர கிரகணம்: 150 ஆண்டுகளாக இல்லாத பெரிய அதிசயமா?

Share Subscribe
இந்த மாதம் 31 ஆம் தேதி இரவு முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. சந்திரன் உதிக்கும் முன்னரே கிரகணம் தொடங்கி விடும்

இந்த கிரகணம் 152 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அதிசய கிரகணம் என மேலை நாடுகளின் ஊடகங்களில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைக் காப்பியடித்து இந்தியாவிலும் பல பத்திரிகைகள், குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகள், இதைப் பற்றி பிரமாதமாக எழுதிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்திய மக்களைப் பொருத்த வரையில் குறிப்பாகத் தமிழக மக்களைப் பொருத்தவரையில் இது வழக்கமாக வருகின்ற சந்திர கிரகணம் தான். இது அதிசய கிரகணம் அல்ல. இதில் எந்த விசேஷமும் இல்லை

சரி, மேலை நாட்டவர் இந்த சந்திர கிரகணத்தை அதிசய கிரகணம் என்று வருணிப்பானேன்?

பொதுவில் 29 நாட்களுக்கு ஒரு முறை பௌர்ணமி வருகிறது.அந்த வகையில் மாத்துக்கு ஒரு பௌர்ணமி வருவதாகக் கொள்ளலாம். ஆனால் சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரலாம். இப்படி ஒரு மாதத்தில் வருகின்ற இரண்டாவது பௌர்ணமிக்கு மேலை நாட்டவர் புளூ மூன் (Blue Moon) என்று பெயர் வைத்துள்ளனர். பெயர் தான் புளூ மூனே தவிர, அந்த பௌர்ணமியன்று சந்திரன் நீல நிறத்தில் இராது, வழக்கமான வெண்மை நிற்த்தில் தான் இருக்கும்.

பௌர்ணமி நிலவு ஒரு போதும்
 நீல நிறத்தில் காட்சி அளிப்பது கிடையாது
தமிழ் மாதத்திலும் இப்படி இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாசை வருவது உண்டு. அதற்கெல்லாம் நாம் தனிப் பெயர் வைக்கவில்லை.

ஜனவர் 31 ந் தேதி நிகழும் பௌர்ணமியானது இந்த மாதத்தில் வருகின்ற இரண்டாவது பௌர்ணமியாகும். அந்த அளவில் மேலை நாட்டவரைப் பொருத்த வரையில் அது புளூ மூன்.

சந்திரன் பூமியை சுற்றிச் சுற்றி வருவதை நாம் அறிவோம். சந்திரனின் இந்த சுற்றுப்பாதை சற்று நீள் வட்டமாக அமைந்துள்ளது. ஆகவே பூமியிலிருந்து சந்திரனுக்கு உள்ள தூரம் சில சமயம் வழக்கத்தை விட அதிகமாக அல்லது குறைவாக உள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதியன்று சந்திரன் வழக்கத்தை விடக் குறைவாக அதாவது மூன்று லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும். எனவே அன்றைய தினம் சந்திரன் வழக்கத்தை விட 15 சதவிகித அளவுக்குப் பெரிதாகவும் வழக்கத்தை விட 30 சதவிகிதம் கூடுதல் பிரகாசம் கொண்டதாகவும் இருக்கும். சந்திரன் இப்படி பெரிதாகத் தெரிகின்ற பௌர்ணமியை மேலை நாட்டவர் சூப்பர் மூன் என்று குறிப்பிடுகின்றனர்.

சந்திரன் புளூ மூனாகவும் சூப்பர் மூனாகவும் இருக்கின்ற நாளில் நிகழும் கிரகணம் என்பதால் இந்த கிரகணத்தை மேலை நாட்டவர் ஓர் அதிசயம் என்கிறார்கள் .இதற்கு முன்னர் 1866 ஆம் ஆண்டில் தான் இப்படியான நாளில் சந்திர கிரகணம் ஏற்பட்டதாம். அடுத்து 2028 ஆண்டில் தான் இப்படி நிகழுமாம்.

ஆனால் நமக்கு எல்லா பௌர்ணமிகளும் ஒன்று தான். சித்ரா பௌர்ணமியை வேண்டுமானால் விசேஷ பௌர்ணமி எனலாம். தவிர, நமக்கு சூப்பர் மூன் என்பதெல்லாம் இல்லை. புளூ மூனும் கிடையாது. மேலை நாட்டவர் அதிசயம் என்று கூறி குதிக்கிறார்கள் என்பதால் நாமும் சேர்ந்து குதிக்க வேண்டுமா? எனவே நம்மைப் பொருத்தவரையில் இது சாதாரண சந்திர கிரகணமே.

சூப்பர்மூன், என்ற வகைப்பாட்டுக்கு அறிவியல்பூர்வ ஆதாரமே இல்லை என்றும் இது ஒரு ஜோசியர் உருவாக்கியது என்றும் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் – மாடிசன் பல்கலைக்கழக வானவியல் நிபுணர் ஜேம்ஸ் லாட்டிஸ் கூறுகிறார். புளூ மூன் என்பதும் அப்படிப்பட்டதே..

இவை ஒரு புறம் இருக்க, பௌர்ணமியன்று தான் சந்திர கிரகணம் நிகழும். அன்றைய தினம் சூரியன் பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே வரிசையில்.அமைந்திருக்கும். ஆனால் இவை ஒரே நேர்கோட்டில் இருப்பதாகச் சொல்ல முடியாது. அபூர்வமாக நேர் கோட்டில் இருக்க நேர்ந்தால் சூரியன் காரணமாக ஏற்படும் பூமியின் நிழலானது சந்திரன் மீது விழும். அப்போது பௌர்ணமி நிலவு பொலிவிழந்து கிரகணம் பிடிக்கப்பட்டதாக நமக்குக் காட்சி அளிக்கிற்து. எல்லா பௌர்ணமிகளிலும் கிரகணம நிகழ்வதில்லை என்பதற்குக் காரணம் உள்ளது.

நீங்கள் அடுக்கு மாடிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் கிழக்கு திசையை நோக்கி நிற்கிறீர்கள். உங்களால் சூரியனைக் காண முடிகிறது. நீங்கள் சில படி இறங்கி வந்து முதல் மாடியின் பால்கனியில் நிற்கிறீர்கள். சாலை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகை மறைக்கிறது என்பதால் சூரியனைப் பார்க்க முடிவதில்லை. மேலும் பல படிகள் இறங்கி தரையில் வந்து நிற்கிறீர்கள். இப்போது சூரியனைக் காண முடிகிறது.

சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வாக உள்ளதால் அது பெரும்பாலான பௌர்ணமி நாட்களில் இவ்விதம் பூமியின் நிழலுக்கு மேலாக அல்லது கீழாக அமைந்து விடும்.. சந்திரன் மீது நிழல் படுவதில்லை என்பதால் கிரகணம் ஏற்படுவதில்லை.

முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். சிவப்பு நிறம் எங்கிருந்து வந்தது? சூரிய ஒளி என்பது உண்மையில் ஏழு நிறங்களின் சேர்க்கை ஆகும். சூரியனின் ஒளிக் கற்றைகள் பூமியின் காற்று மண்டலத்தின் ஊடே செல்லும் போது தூசு காரணமாக சிதறடிக்கப்படுகிறது. அப்போது நீலம், வயலட், பச்சை முதலிய நிறங்கள் காற்று மண்டலத்தில் ஈர்க்கப்பட்டு ஆரஞ்சு, சிவப்பு நிற ஒளிகள் மட்டும் வளைந்து சென்று சந்திரன் மீது விழுகின்றன. ஆகவே தான் கிரகணத்தால் பீடிக்கப்பட்ட சந்திரன் சிவப்பாகத் தெரிகிறது.

சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் எப்போதெல்லாம் நிகழும் என்று முன் கூட்டியே கண்டறிய முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிலும் கிரேக்கம் போன்ற நாடுகளிலும் பண்டைக்கால கணித நிபுணர்கள் இந்த கணக்கு முறையை அறிந்து வைத்திருந்தனர்.

ஆனால் அதே நேரத்தில் கிரகணங்கள் குறித்து ஆதி நாட்களில் குறிப்பாக சூரிய கிரகணம் பற்றி பாமர மக்களிடையே பீதி நிலவி வந்துள்ளது. அவ்வளவு போவானேன்? சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் ( 1980 பிப்ரவரி என்று ஞாபகம்) சென்னை நகரில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்ட போது சென்னை நகர தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. சைக்கிள்களைக் கூட காண முடியவில்லை. யாரும் வெளியே தலைகாட்டவில்லை.

அவ்வளவு பயம். சில ஊடகங்கள் கிளப்பிவிட்ட பீதியே அதற்குக் காரணம். கிரகணங்கள் குறித்து இன்றும் கூட பல மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன

(என்னுடைய இக்கட்டுரையானது சந்திர கிரகணம் நிகழ்ந்ததற்கு முன்பாக அதாவது 31 ந் தேதி காலை தினத்தந்தி இதழில் வெளியானது.)

Jan 15, 2018

முதல் முறையாக சந்திரனின் மறுபுறத்துக்கு ஒரு விணகலம்

Share Subscribe
1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ந் தேதி ரஷியாவின் லூனா – 2 விண்கலம் சந்திரனில் இறங்கியதில் தொடங்கி சந்திரனில் பல விண்கலங்கள் இறங்கியுள்ளன.

ஆனால் இவை எல்லாமே சந்திரனின் முன்புறத்தில் தான் இறங்கியுள்ளன. சந்திரனின் மறு புறத்தில் ஒரு விண்கலம் கூட இறங்கியதில்லை. இப்போது முதல் முறையாக சந்திரனின் மறுபுறத்தில் ஒரு விண்கலம் போய் இறங்கப் போகிறது.

சீன விண்கலம்தான் இந்த சாதனையை நிகழ்த்தப் போகிறது. சீனாவின் அந்த இறங்குகலத்தின் பெயர் சாங்கி-4

சந்திரனின் மறுபுறத்தில் போய் இறங்குவது என்பது அப்படியென்ன எளிதில் சாதிக்க முடியாத சமாச்சாரமா? இல்லை. ரஷியாவும் அமெரிக்காவும் நினைத்திருந்தால் எளிதில் சந்திரனின் மறு புறத்தில் தங்களது விண்கலங்களை இறக்கியிருக்க முடியும். ஆனால் அதில் ஒரு பெரிய பிர்ச்சினை இருந்தது. அது தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட்து.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். சந்திரன் எப்போதும் தனது ஒரு புறத்தை மட்டுமே நமக்குக் காட்டி வருகிறது. சந்திரன் தனது அச்சில் சுழல்வதற்கு ஆகும் நேரமும் அது பூமியை ஒரு தடவை சுற்றி முடிப்பதற்கு ஆகும் காலமும் (27 நாட்கள்) சம்மாக இருப்பதால் சந்திரனின் ஒரு புறத்தைத் தான் நாம் எப்போதும் பார்த்து வருகிறோம். சந்திரனின் மறுபுறத்தை யாரும் கண்டது கிடையாது.

எனவே சந்திரனின் மறுபுறத்தில் ஒரு விண்கலம் போய் இறங்குமானால் அது பத்திரமாகத் தரை இறங்கியதா என்ற தகவல் கூட பூமிக்கு வந்து சேராது.

சந்திரனின் முன்புறம் (இடது) சந்திரனின் மறுபுறம் (வலது)
காரணம் இது தான். ஒளியும் சரி, தகவல் தொடர்பு சிக்னல்களும் சரி, எப்போதும் நேர்கோட்டில் செல்பவை. எனவே சந்திரனின் மறுபுறத்திலிருந்து ஒரு விண்கலம் சிக்னல்களை அனுப்பினால் அந்த சிக்னல்கள் பூமிக்கு வந்து சேராது.. ஆகவே தான் அமெரிக்கா, ரஷியா ஜப்பான் முதலான நாடுகள் தங்களது விண்கலங்கள் சந்திரனில் பூமியைப் பார்த்தபடி உள்ள முன்புறத்தில் போய் இறங்கும்படி செய்தன. ஆறு தடவை சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீர்ர்களும் சந்திரனின் முன்புறத்தில் தான் போய் இறங்கினர். சீனா முன்னர் அனுப்பிய ஒரு விண்கலமும் சந்திரனின் முன்புறத்தில் தான் போய் இறங்கியது.

இப்போது சீனா அனுப்பும் சாங்கி-4 இறங்குகலம் சந்திரனின் மறுபுறத்தில் போய் இறங்கினால் அது அனுப்புகின்ற சிக்னல்கள் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை என்பதால் சீனா இதற்கு ஒரு தக்க ஏற்பாட்டைச் செய்ய இருக்கிறது.

சாங்கி 4 விண்கலம் சந்திரனின் பின்புறத்திலிருந்து அனுப்புகிற சிக்னல்களைப் பெற்று பூமிக்கு அனுப்ப இன்னொரு விண்கலத்தை சீனா அனுப்ப இருக்கிறது. அதை ரிலே விண்கலம் என வருணிக்கலாம்.

அந்த அளவில் சாங்கி-4 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புவதற்கு முன்னால் அதாவது இந்த ஆண்டின் முற்பகுதியில் சீனா ரிலே விண்கலத்தை சந்திரனை நோக்கி அனுப்பும்.

ரிலே விண்கலம் சந்திரனையும் தாண்டிச் சென்று சந்திரனிலிருந்து 67 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தபடி ஜெயண்ட் வீல் மாதிரியில் மேலிருந்து கீழாகச் சுற்றும். சந்திரனிலிருந்து அவ்வளவு தொலைவில் இருந்தால் அது தொடர்ந்து சந்திரனுக்குப் பின்புறமாகவே இருந்து கொண்டிருக்கும்.. சந்திரனை விட்டு விலகிச் செல்லாது.

அதன் பலனாக சந்திரனின் மறுபுறத்திலிருந்து சாங்கி -4 விண்கலம் அனுப்பும் சிக்னல்களை அது தொடர்ந்து பெற்று அந்த சிக்னல்களை சீனாவின் விண்வெளித் தலைமையகத்துக்கு அனுப்பி வரும். ரிலே விண்கலம் மேலிருந்து கீழாக சுற்றுவதால் சந்திரன் அந்த விண்கலத்தை மறைக்காது.எனவே அதிலிருந்து பூமிக்கு சிக்னல்கள் பிரச்சினையின்றிக் கிடைக்கும்.

ரிலே விண்கலம் சந்திரனுக்கு அப்பால் லாக்ராஞ்சியன் புள்ளியில் அமைந்திருக்கும்


சாங்கி 4 விண்கலம் சந்திரனில் தரை இறங்கிய பின்னர் அதிலிருந்து ஒர் குட்டி வாகனம் வெளிப்பட்டு அங்குமிங்கும் நடமாடும். அது அனுப்பும் சிக்னல்களை சாங்கி 4 பெற்று ரிலே விண்கலத்துக்கு அனுப்பும்.

ரிலே விண்கலம் அமைந்த புள்ளியானது லாக்ராஞ்சியன் புள்ளி எனப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கணித நிபுணரான ஜோசப் லூயி லாக்ராஞ்ச் கணக்குப் போட்டு அவ்விதப் புள்ளி பற்றி எடுத்துக் கூறினார். அவர் இத்தாலியைச் சேர்ந்தவர். அவரது கருத்துப்படியான அந்தப் புள்ளியில் ஒரு விண்கலம் இருக்குமானால் அது சந்திரனை எப்போதும் நோக்கியபடி இருக்கும்

இந்த உத்தியை அமெரிக்காவோ ரஷியாவோ கையாண்டிருக்க முடியும். என்ன காரணத்தாலோ அவை அதற்கு முற்படவில்லை. எனினும் சந்திரனின் பின்புறம் எப்படி உள்ளது என்பதை நாம் 1959 ஆம் ஆண்டிலேயே தெரிந்து கொண்டோம்.

ரஷியா அனுப்பிய லூனா-3 விண்கலம் சந்திரனை சுற்றி வந்த போது சந்திரனின் முதுகைப் படம் பிடித்து அனுப்பியது. பின்னர் அமெரிக்காவின் அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீர்ர்கள் சந்திரனின் பின்புறத்தைப் படம் பிடித்து அனுப்பினர்.

நாம் எப்போதும் காணும் சந்திரனின் முன் பகுதியில் நிலப் பகுதியானது பெரிதும் சமவெளி போல உள்ளது. சந்திரனின் பின் புறத்தில் வட்ட வடிவப் பள்ளங்கள் அதிகம் உள்ளன.

Jan 13, 2018

அண்டவெளியில் மிதக்கும் தங்கம்

Share Subscribe
கோடானு கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அண்டவெளியில் இரு நியூட்ரான் நட்சத்திரங்கள் பயங்கரமாக மோதிக் கொண்டால் என்ன ஆகும்? டன் கணக்கில் தங்கம் உண்டாகும். அத்துடன் பிளாடினம் போன்ற உலோகங்களும் உண்டாகும்.

இவ்விதம் தங்கம் உண்டான இடத்தை அண்மையில் விஞ்ஞானிகள் தொலைநோக்கிகள் மூலம் கண்டனர்.

நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதிக் கொண்ட போது உண்டான தங்கம் கொஞ்சநஞ்சமல்ல. பூமியின் எடையை (நிறை) போன்று 200 மடங்கு அளவுக்குத் தங்கமும் பூமியின் எடையைப் போன்று 500 மடங்குக்கு பிளாட்டினமும் உண்டானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வளவு தங்கமும் பிளாட்டினமும் கட்டி வடிவில் உண்டாகவில்லை. நுண் துணுக்குகள் வடிவில் தோன்றின. நாளடைவில் இவை அண்டவெளியில் உள்ள ஹைட்ரஜன் வாயுவுடன் கலந்து விடும்.

அண்டவெளியில் நிகழும் நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதல் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். அமெரிக்காவில் உள்ள லிகோ (LIGO) எனப்படும் இரட்டை ஆராய்ச்சிக்கூடங்கள் தான் முதலில் இதைக் கண்டுபிடித்தன.

Ligo ஆராய்ச்சிக்கூடம்


குளத்தில் சிறிய கூழாங்கல்லை வீசினால் சிறு அலைகள் தோன்றுவதைப் போல் அண்டவெளியில் நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதினால் ஈர்ப்பு அலைகள் தோன்றும். இந்த நுட்பமான அலைகளைப் பதிவு செய்வதற்காகவே இந்த லிகோ ஆராய்ச்சிகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் இந்த ஆராய்ச்சிக்கூடங்களில் ஈர்ப்பு அலைகள் பதிவானபோது விஞ்ஞானிகள் பரபரப்பு அடைந்தனர உலகெங்கிலும் விஞ்ஞானிகள் பலர் உஷார்படுத்த்தப்பட்டனர். இத்தாலியில் உள்ள லிகோ ஆராய்ச்சிக்கூடத்திலும் இந்த அலைகள் பதிவாகின.

வானில் எந்த இடத்திலிருந்து ஈர்ப்பு அலைகள் வருகின்றன என்ற தகவல் வான் ஆய்வுக்கூடங்களுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் சுமார் 70 தொலைநோக்கிகள் மூலம் வானில் அந்த இடத்தை ஆராய்ந்த போது ஒளி மொத்தை தெரிந்தது. விரைவில் அது கலைய ஆரம்பித்தது. அந்த ஒளியைத் தக்க கருவிகள் மூலம் ஆராய்ந்த போது அவ்விடத்தில் தங்கம் பிளாடினம் போன்ற தனிமங்கள் (Elemens) உண்டாகியிருந்தது தெரிய வந்தது
இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பள்ளியில் வேதியியல் பாடத்தில் தனிமங்களின் அட்டவணை பற்றிப் படித்திருக்கலாம். இதைத் தனிமங்களின் பட்டியல் என்றும் கூறலாம். ஆராய்ச்சிகூட்த்தில் செயற்கையாக சில தனிமங்கள் உண்டாக்கப்பட்டுள்ளன. மற்றபடி தனிமங்கள் பூமியில் உண்டாவதில்லை.

நமது சூரியனில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்து ஹீலியம் என்னும் தனிமம் உண்டாகிறது. இதுவே அணுச்சேர்க்கை ஆகும். சூரியனில் மேலும் சில தனிமங்கள் உண்டாகின்றன. சூரியனை விடப் பல மடங்கு பெரிதாக உள்ள நட்சத்திரங்களில் அணுச்சேர்க்கை மூலம் இரும்பு வரையிலான தனிமங்கள் உண்டாகின்றன். அணுப்பட்டியலில் இரும்புக்கு அப்பால் உள்ள தனிமங்கள் பலவும் அண்டவெளியில் பிற அணுக்களுடன் நியூட்ரான்கள் மோதும் போது உண்டாகின்றன.

இந்த மோதல்கள் இரு விதங்களில் நிகழ்கின்றன.

ஒப்புநோக்குகையில் மெதுவான மோதல்கள். அதி பயங்கர மோதல்கள். அண்டவெளியில் இவ்விதம் நிகழும் மோதல்களின் போது பல வகையான தனிமங்கள் உண்டாகின்றன.

சூப்பர்நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்புகளின் போது சில வகை தனிமங்கள் தோன்றுகின்றன என்று அறியப்பட்டிருந்த போதிலும் தங்கம், பிளாடினம் போன்ற அதிக எடை கொண்ட தனிமங்கள் எவ்விதமான சூழ்நிலைகளில் தோன்றுகின்றன என்பது குறித்து உத்தேசமான கொள்கைகள்தான் இருந்து வந்தன.

நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல்களின் போது தான் தங்கம், பிளாட்டினம் போன்றவை உண்டாகின்றன என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதென்ன நியூட்ரான் நட்சத்திரம்?

பொதுவில் அணுக்களில் புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் அணுவின் மையக் கருப் பகுதியில் ஒன்று சேர்ந்து உள்ளன. இவற்றின் எண்ணிக்கை ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அணுவின் மையத்தைச் சுற்றி எலக்ட்ரான்கள் அமைந்துள்ளன. இவற்றின் எண்ணிக்கை தனிமத்தில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும்

இந்த எலக்ட்ரான்கள் காவல்காரன் போன்றவை. ஓர் அணுவில் உள்ள எலக்ட்ரான்களை விரட்டியடிக்க முடியாது. ஆனால் தீப்பந்தத்தைக் கொண்டு தேன் கூட்டில் உள்ள தேனீக்களை விரட்டியடிக்க முடியும். அது போல பயங்கரமான வெப்பம் இருக்குமானால் எலக்ட்ரான்கள் பிய்த்துக் கொண்டு ஓடி விடும்.

சூரியனின் மையத்தில் வெப்பம் 15 மிலியன் டிகிரி (செல்சியஸ்) அளவுக்கு உள்ளது. இவ்வித நிலையில் எலக்ட்ரான்கள் பிய்த்துக் கொண்டு ஓடிவிடுவதால் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்து அணுச்சேர்க்கை நிகழ்கிறது.

நியூட்ரான் நட்சத்திரத்தில் தனித்தனி அணுக்கள் என்பதே கிடையாது. எல்லாமே நியூட்ரான்களாக இருக்கும். புரோட்டான் ஒன்றுடன் எலக்ட்ரான் சேர்ந்தால் அது நியூட்ரான் என்று வைத்துக் கொள்வோம். அந்த அளவில் நியூட்ரான் நட்சத்திரத்தில் புரோட்டான்கள் அனைத்துக்குள்ளும் எலக்ட்ரான் நுழைந்து கொண்டால் என்ன ஆகும் அவை நியூட்ரான்களாகி விடும்

சூரியன் ஒரு பஞ்சு மிட்டாய் என்றால் நியூட்ரான் நட்சத்திரம் ஒரு கமார்கட்டு மாதிரி. சூரியன் திடீரென நியூட்ரான் நட்சத்திரமாக மாறுவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் அதன் குறுக்களவு சுமார் 30 கிலோ மீட்டர் அளவில் தான் இருக்கும். காரணம் என்ன?

எந்த அணுவிலும் காலியிடம் நிறைய இருக்கிறது. ஒரு பெரிய மைதானத்தின் நடுவில் வைக்கப்பட்ட கால்பந்து தான் ஓர் அணுவின் மையக் கரு என்றால் எலக்ட்ரான்கள் அந்த மைதானத்தின் விளிம்பில் தான் இருக்கும். அந்த அளவில் எந்த ஓர் அணுவிலும் காலியிடம் உண்டு.

ஆனால் அணுவில் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்கள் என தனித்தனியே இல்லாமல் எல்லாமே நியூட்ரான்கள் என்றால் காலியிடம் அனைத்தும் நீங்கி விடும். எனவே தான் நியூட்ரான் நட்சத்திரம் பயங்கர அடர்த்தி கொண்டதாக இருக்கும். எனவே சூரியன் ஒரு நியூட்ரான் நட்சத்திரமாக மாறுவதானால் அதன் எடை( நிறை) குறைவதில்லை. அதன் சைஸ் மட்டும் தான் குறைகிறது.

எனவே நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதும் போது ஏராளமான அளவுக்கு நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவை அண்டவெளியில் ஏற்கெனவே உள்ள அணுக்களுடன் மோதும் போது தங்கம், பிளாட்டினம் போன்ற அணுக்கள் உருவாகின்றன.

இந்த தங்கம் பிளாட்டினம் வகை அணுக்கள் மிக நுண்ணிய துணுக்குகளாக அண்டவெளியில் மிதந்து கொண்டிருக்கும். எனினும் அண்டவெளியில் வாயு வடிவிலான ஹைட்ரஜன் தான் அதிகம். ஒரு கட்டத்தில் இந்த ஹைட்ரஜன் ஒரு பெரிய முகிலாக ஒன்று திரண்டு நட்சத்திரமாக உருவெடுக்கும்.

அந்த நட்சத்திரத்தில் மேற்படி தங்கம் பிளாட்டினம் அணுக்களும் ஒரு வகை வாயு வடிவில் அடங்கியிருக்கும்.. எனவே நட்சத்திரம் முழு உருப்பெறும் போது கிரகங்களும் தோன்றும். அந்த கிரகங்களிலும் தங்கம் அடங்கியிருக்கும்.

ஆரம்பத்தில் நெருப்புக் குழம்பாக இருந்த கிரகங்கள் ஆறி கெட்டிப்படும் போது தோன்றும் பாறைகளில் தங்கம் இடம் பெற்றிருக்கும். அந்தப் பாறைகளைப் பொடியாக்கி அதிலிருந்து நாம் தங்கத்தைப் பிரித்து எடுத்து நகைகளாக மாற்றி அணிந்து கொள்கிறோம். நாம் அணியும் அந்தத் தங்கம் என்றோ அண்டவெளியில் உற்பத்தியானதே.

Dec 9, 2017

37 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர் பெற்ற விண்கலம்

Share Subscribe
பல ஆண்டுக்காலம் ஓட்டாமல் வைத்திருந்த ஒரு காரை திடீரென ஒரு நாள் ஓட்ட முயன்றால் அது ஓடுமா என்பது சந்தேகமே. ஆனால் எங்கோ அண்டவெளியில் உள்ள ஒரு விண்கலம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது செயல்பட்டு விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த விண்கலத்தின் பெயர் வாயேஜர் - 1 என்பதாகும்.

அமெரிக்கா 1977 ஆம் ஆண்டில் செலுத்திய வாயேஜர் – 1 விண்கலம் இப்போது சுமார் 1880 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்தபடி அது தகவல்களை அனுப்பி வருகிறது. பூமியுடன் தொடர்பு கொள்வதற்கென அந்த விண்கலத்தில் ஆண்டெனா உள்ளது. அந்த ஆண்டெனா மிகத் துல்லியமாக பூமியைப் பார்த்தபடி இருந்தாக வேண்டும்..

பூமிக்குத் தகவல்கள் நன்கு கிடைக்கும் பொருட்டு அமெரிக்காவில் நிபுணர்கள் அந்த ஆண்டென்னாவை சற்று லேசாகத் திருப்ப விரும்பினர். இதற்கென பூமியிலிருந்து நவம்பர் மாதம் 28 ஆம் தேதி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் சென்றாலும் இந்த ஆணைகள் வாயேஜர் விண்கலத்துக்குப் போய்ச் சேர சுமார் 19 மணி நேரம் பிடித்த்து.

வாயேஜர் விண்கலம்
இந்த ஆணைகள் கிடைத்ததும் வாயேஜரில் உள்ள நான்கு பீச்சு கருவிகள் செயல்பட்டன. இந்த பீச்சு கருவிகள் 37 வருட காலம் (தேவை ஏற்படாத காரணத்தால்) செயல்படாமல் இருந்தவை. இவை `10 மில்லி செகண்ட் செயல்பட்ட பின்னர் ஆண்டெனா தகுந்தபடி திருப்பப்பட்டது.

அநேகமாக எல்லா விண்கலங்களிலும் இவ்விதம் சிறிய பீச்சு கருவிகள் இருக்கும். இவற்றின் வழியே ஹைட்ரசீன் என்னும் திரவம் பீச்சிடும். விண்கலத்தின் பல மூலைகளிலும் இவை இடம் பெற்றிருக்கும். வலது புறம் உள்ள பீச்சு கருவி செயல்பட்டால் விண்கலம் இடது புறம் திரும்பும். மேல் பகுதியில் உள்ள பீச்சு கருவி செயல்பட்டால் விண்கலம் கீழ்ப்புறமாகத் திரும்பும். பீச்சு கருவிகளை தக்கபடி செயல்படுத்துவதன் மூலம் விண்கலம் எந்தத் திசையை நோக்கி எந்தக் கோணத்தில் இருக்க வேண்டுமோ அந்தக் கோணத்தில் திருப்பலாம்.

வாயேஜர் விண்கலத்தின் ஆண்டெனாவை இவ்விதம் தக்கபடி திருப்பியதானது பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. நீண்ட காலம் இயக்கப்படாமல் இருந்த பீச்சுகருவிகள் உயிர் பெற்றுக் கோளாறு இன்றி செயல்பட்டன. பீச்சுக் கருவிகள் செயல்படுவதற்கு உதவிய ஹைட்ரசீன் எரிபொருள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்கலம் தயாரிக்கப்பட்ட போது நிரப்பப்பட்ட்தாகும். அந்த எரிபொருள் இத்தனை காலமும் கெட்டுப் போகாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பீச்சுக் கருவிகள் நன்கு செயல்பட்டதும் அமெரிக்காவில் தலைமைக் கேந்திரத்தில் விஞ்ஞானிகளும் எஞ்சினியர்களும் மிக்க மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இப்போது இயக்கப்பட்டவை வாயேஜர் விண்கலத்தில் இடம் பெற்றுள்ள துணைப் பீச்சுக் கருவிகளே. பிரதான பீச்சுக்கருவிகள் ஜனவரியில் இயக்கப்பட்டு சோதிக்கப்படும். விண்கலத்தில் பிரதான பீச்சுக் கருவிகள் ஒரு வேளை செயல்படாமல் போனால் இருக்கட்டும் என்பதற்காக துணைப் பீச்சுக் கருவிகள் வைக்கப்படுவது வழக்கம்.

சூரிய மண்டலத்தில் மிகத் தொலைவில் உள்ள வியாழன், சனி கிரகங்களை ஆராய்வதற்காக வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் அமெரிக்காவின் நாஸா அமைப்பினால் 1977 ஆம் ஆண்டில் உயரே செலுத்தப்பட்டன.

இதன்படி இந்த இரு விண்கலங்களும் வியாழன் சனி கிரகங்களை நெருங்கி அவற்றைப் படம் பிடித்தன. பல தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பின.

கடந்த 1980 ஆம் ஆண்டு வாக்கில் இப்பணியை முடித்துக் கொண்ட பின்னர் வாயேஜர் 1 தொடர்ந்து பயணித்தது. அது 2012 ஆகஸ்ட் வாக்கில் சூரிய மண்டலத்தை விட்டே வெளியேறியது.

சூரிய மண்டலத்தில் வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 சென்ற பாதைகள்
அண்டவெளியில் தொடர்ந்து மணிக்கு 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் வாயேஜர் 1 விண்கலம் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட நட்சத்திரத்தை நெருங்கும். ஆனால் அந்த நட்சத்திரம் பற்றிய தகவல்களை வாயேஜர் அனுப்பும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் 2025 ஆம் ஆண்டு வாக்கில் வாயேஜரில் உள்ள கருவிகள் செயல்படுவது அடியோடு நின்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாயேஜர் 2 விண்கலம் வியாழன், சனி ஆகிய கிரகங்களை ஆராய்ந்த பிறகு அதன் பாதை திருப்பபட்டது. இதன் பலனாக அது சூரிய மண்டல் எல்லையில் அமைந்த யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை நோக்கிச் சென்று அவற்றைப் படம் பிடித்ததுடன், அக்கிரகங்கள் பற்றிய பல தகவல்களையும் சேகரித்து அளித்தது. இப்போது மணிக்கு 55 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அது பிராக்சிமா செண்டாரி என்னும் நட்சத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தற்சமயம் அது 1746 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

(என்னுடைய இக்கட்டுரை தமிழ் ஹிந்து இதழின் மாயா பஜார் பகுதியில் வெளியானதாகும்)

Dec 5, 2017

சந்திரனில் பெரிய குகை கண்டுபிடிப்பு

Share Subscribe
சந்திரனில் பெரிய குகை இருப்பதாக சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம் கண்டுபிடித்துள்ளது. எதிர்காலத்தில் சந்திரனுக்குச் செல்கின்ற விண்வெளி வீர்ர்கள் இந்த குகையில் தங்க முடியலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்கா 1969 ஆம் ஆண்டில் தொடங்கி ஆறு தடவை சந்திரனுக்கு விண்வெளி வீர்ர்களை அனுப்பிய போது அவர்கள் தங்களது விண்கலத்தில் தான் தங்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தடவையிலும் இரண்டு பேர் மட்டுமே சென்றதால் இப்படி விண்கலத்தில் தங்குவது சாத்தியமாக இருந்தது.

தவிர, அவர்கள் சந்திரனில் அதிக காலம் தங்கவில்லை. 1972 ஆம் ஆண்டில் அப்போலோ 17 விண்கலத்தில் சென்றவர்கள் தான் சந்திரனில் அதிகபட்சமாக 75 மணி நேரம் தங்கினர்.

எதிர்காலத்தில் அடுத்தடுத்து பல விண்வெளி வீர்ர்கள் அனுப்பப்படும் போது சந்திரனில் நிறைய நாட்கள் தங்க வேண்டியிருக்கும். அவர்கள் நிலத்துக்கு அடியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதில் தான் தங்க வேண்டியிருக்கும். அப்படியான குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வரை இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகையில் தங்கலாம்.

சந்திரனின் நிலப்பரப்பில் அதாவது திறந்த வெளியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொள்வது என்பது அநேகமாக இயலாது. சந்திரனில் உள்ள நிலைமைகளே இதற்குக் காரணம்.

சந்திரனில் பகல் என்பது பூமிக் கணக்குப்படி 14 நாட்கள். இரவு என்பது இதே போல 14 நாட்கள். சந்திரனில் பகல் நேரத்தில் உச்சி வேளையில் வெயில் சுமார் 106 டிகிரி (செல்சியஸ்) ஆகும். இரவில் குளிர் மைனஸ் 173 டிகிரி (செல்சியஸ்) அளவுக்கு இருக்கும். சந்திரனில் காற்று மண்டலம் இல்லை என்பதே இந்த நிலைமைக்குக் காரணமாகும்.

சந்திரனில் பல நாட்கள் தங்குவதானால் நிலத்துக்கு அடியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டாக வேண்டும். அல்லது சந்திரனின் துருவப் பகுதிகளில் போய் இறங்க வேண்டும் என்பது தான் ஏற்கெனவே உள்ள நிலைமையாகும்.

இப்படியான பின்னணியில் தான் ஜப்பானிய விண்கலம் சந்திரனில் குகையைக் கண்டுபிடித்துள்ளது.

சந்திரனில் கருப்பாகத் தெரியும் பகுதிகளைக் கவனிக்கவும் 
சந்திரனில் குகை இயற்கையாக ஏற்பட்டுள்ளதாகும். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனில் எரிமலைகள் செயல்பட்டன. பூமியில் இப்போதும் எரிமலைகள் நெருப்பைக் குழம்பைக் க்க்குகின்றன. ஆனால் சந்திரனில் எப்போதோ எரிமலைகள் அவிந்து போய்விட்டன.

பூமியில் எரிமலைக் குழம்பு கெட்டியானது.

பூமியில் வாய் வழியே வெளிப்படும் நெருப்புக் குழம்பு மேலும் மேலும் கெட்டிப்பட்டு எரிமலை கொஞ்சம் கொஞ்சமாக கூம்பு வடிவில் உயர்ந்து கொண்டே போகும். சந்திரனில் அப்படியில்லை. சந்திரனில் நெருப்புக் குழம்பு பெரிதும் நீர்த்து இருக்கும். எனவே அதிக பரப்பளவில் பரவி நிற்கும்.

இரவில் முழு நிலவைப் பார்த்தால் பல பகுதிகள் கருப்பாகத் தெரியும். ஆரம்ப காலத்தில் தொலைநோக்கி மூலம் சந்திரனை ஆராய்ந்த விஞ்ஞானிகள் சந்திரனில் கருப்பாகத் தெரிகின்ற பகுதிகளைக் கடல்கள் என்றே கருதினர்.

பின்னர் தான் அவை எரிமலைக் குழம்பு பாய்ந்து ஓடிய பகுதிகள் என்பது தெரிய வந்த்து. நீங்கள் பௌர்ணமி தினத்தன்று முழு நிலவை உற்றுக் கவனித்தால் நிலவின் மேற்குப் பகுதி, வட பகுதி ஆகியவை கருமையாக இருப்பது தெரிய வரும்

சந்திரனின் எரிமலைக் குழம்பில் இரும்புச் சத்து அதிகம் என்பதால் எரிமலைக் குழம்பு பரவிய பகுதிகள் இவ்விதம் கருப்பாகத் தெரிவதாகக் கருதப்படுகிறது

தொடர்ந்து பல பௌர்ணமி நிலவைக் கவனித்து வந்தால் சந்திரன் ஒரே மாதிரியாகத் தான் தென்படும். சந்திரன் எப்போதும் நமக்கு தனது ஒரு பாதியை மட்டுமே காட்டி வருவதால் இப்படியான நிலை உள்ளது.

சந்திரனில் பெருக்கெடுத்து ஓடிய நெருப்புக் குழம்பு என்பது உருகிய பாறைக் குழம்பே ஆகும். பாறைக் குழம்பு ஆறிய பிறகு அதன் மேற்புறம் கெட்டிப்பட்டு விட்டது. உள்ளே நெருப்புக் குழம்பு ஓடிய இடம் காலியாகிய பிறகு அது சுரங்கப் பாதை போலாகியது. இதை Lava Tube என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். சந்திரனில் இப்படி எரிமலைக் குழம்பு ஓடிய சுரங்கப் பாதைகள் பல உள்ளன என்பது முன்னரே தெரியும்.

இந்தியாவின் சந்திரயான் உட்பட சந்திரனை ஆராய்ந்த பல விண்கலங்கள் சந்திரனில் உள்ள எரிமலை சுரங்கப்பாதைகளை ஆராய்ந்து தகவல் தெரிவித்துள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் சில இடங்களில் 300 மீட்டர் அகலத்துக்கு உள்ளன. சுரங்கப்பாதைக்குள் மைனஸ் 20 டிகிரி அளவுக்கு குளிர் உண்டு. சந்திரனில் திறந்த வெளியில் இருக்கக்கூடிய கடும் வெப்பம் அல்லது கடும் குளிருடன் ஒப்பிட்டால் இது எவ்வளவோ பரவாயில்லை.

இந்த சுரங்கத்துக்க்குள் தங்கிக் கொண்டால் காஸ்மிக் கதிர்வீச்சு, சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள், சிறியதும் பெரியதுமான விண்கற்கள் ஆகியவற்றின் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

சந்திரனில் உள்ள எரிமலை சுரங்கப்பாதைகளின் நுழைவு வாயில் போல ஆங்காங்கு வட்டவடிவப் குழிகள் உள்ளன. இந்தக் குழிகளுக்குள் இறங்கினால் சுரங்கப்பாதையில் போய்க்கொண்டே இருக்கலாம்.

சந்திரனைச் சுற்றிச் சுற்றி வந்து சந்திரனை ஆராய்ந்த ஜப்பானின் காகுயா விண்கலம் கண்டுபிடித்துள்ள புது விஷயம் இந்த சுரங்கப்பாதை ஒன்றில் ஒரு பெரிய குகை உள்ளது என்பதாகும்.

அந்த குகை 100 மீட்டர் அகலமும் 50 கிலோ மீட்டர் நீளமும் கொண்டதாக உள்ளது. அந்தக் குகையில் பனிக்கட்டி அல்லது தண்ணீர் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சந்திரனில் உள்ள சுரங்கப்பாதைகள் குறித்து ஜப்பானிய விண்கலம் நிறையத் தகவல்களை அளித்துள்ளது.

ஜப்பானிய விண்கலம் 2007 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அது இரண்டு ஆண்டுக்காலம் சந்திரனை விரிவாக ஆராய்ந்தது. காகுயா அனுப்பிய தகவல்கள் ஆராயப்பட்டு இப்போது தான் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

இவை ஒரு புறம் இருக்க சந்திரனில் மட்டுமன்றி பூமியிலும் இவ்வித எரிமலை சுரங்கப்பாதைகள் உள்ளன. அமெரிக்காவில் இடாஹோ மாகாணத்திலும் ஆரிகன் மாகாணத்திலும் இவை உள்ளன. தென் கொரியா, ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள், போர்ச்சுகல், கென்யா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளிலும் எரிமலை சுரங்கப் பாதைகள் காணப்படுகின்றன. ஹவாய் தீவில் உள்ள எரிமலை சுரங்கப்பாதை 65 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

செவ்வாய் கிரகத்திலும் எரிமலை சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

(தமிழ் ஹிந்து பத்திரிகையில் வெளியான எனது இக்கட்டுரை சற்று சுருக்கப்பட்டு இங்கே அளிக்கப்பட்டுள்ளது)

(ஓராண்டுக்கும் மேலாக இப்பகுதியில் கட்டுரைகளை வழங்க முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்)

Apr 10, 2016

மிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்

Share Subscribe
வானத்து நட்சத்திரங்களைக் காண நீங்கள் மெனக்கெடத் தேவையில்லை.
அவை நம்மை வரவேற்க எப்போதும் காத்திருக்கின்றன. இரவு வானில் நிலவு அல்லது மேகம் இல்லாத நாட்களாக இருந்தால் போதும்.
அமாவாசை இரவாக இருந்தால் கருமையான வெல்வெட் துணியில் வாரி இரைக்கப்பட்ட வைரங்களைப் போல நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன

எல்லா நட்சத்திரங்களும் ஒரே அளவிலான பிரகாசம் கொண்டவை என்று  சொல்ல முடியாது. சில நட்சத்திரங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பிரகாசம் கொண்டவையாக உள்ளன.

வானத்து நட்சத்திரங்களிலேயே எது அதிகப் பிரகாசம் கொண்டது என்று கேட்கலாம். நீங்கள்  இருட்டியதிலிருந்து இரவு விடிய விடியக் கண் விழித்து வானத்து நட்சத்திரங்கள் அனைத்தையும் கவனித்து வந்தால் எது மிகப் பிரகாசமான நட்சத்திரம் என்று கண்டுபிடித்து விடலாம்

என்றாலும் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளில் வானத்தை ஆராய்வதையே தொழிலாகக் கொண்ட நிபுணர்கள் ஏற்கெனவே இதைக் கண்டுபிடித்து வைத்துள்ளனர். ஆகவே நீங்கள் சிரமப்படத் தேவையில்லை.

நட்சத்திரங்களிலேயே மிகப் பிரகாசமான அந்த நட்சத்திரத்தின் பெயர் சிரியஸ் (Sirius). இது இப்போது உலக அளவில் பயன்படுத்துகின்ற பெயர். இந்த நட்சத்திரத்துக்கு ஆல்பா கானிஸ் மேஜொரிஸ் (Alpha Canis Majoris) என்ற அறிவியல் பெயரும் உண்டு. பெரு நாய் நட்சத்திர மண்டலத்தின் முதன்மை நட்சத்திரம் என்பது இதன் பொருள்.

சிரியஸ் நட்சத்திரம் ஒரு நாட்டில் தான் தெரியும் என்பதில்லை. உலகில் பெரும்பாலான பகுதிகளிலிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய நட்சத்திரம். அறிவியல் யுகம் தோன்றியதற்கு முன்னர் உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் இந்த நட்சத்திரத்துக்குத் தங்கள் கருத்துப்படி வெவ்வேறு பெயர்களை வைத்தனர்.

  ஆதியில் இந்தியாவில் வானவியலார் இந்த நட்சத்திரத்துக்கு மிருகவத்யா என்று பெயரிட்டனர். லுப்தகம் என்ற பெயரும் உண்டு. எகிப்து, கிரேக்கம், சீனா ஆகியவற்றில் இந்த நட்சத்திரம் வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. பசிபிக் கடல் தீவுவாசிகள் இதனை வானத்து ராணி என்று அழைத்தனர். அது மிகவும் பொருத்தமானதே.

சிரியஸ் நட்சத்திரம் அலாதியான நீல நிறத்துடன் ஜொலிப்பதாகும். ஒரு முறை அந்த நட்சத்திரத்தைப் பார்த்தால் அதை மறுபடி பார்க்க வேண்டும் என்று தோன்றும். அது அவ்வளவு அழகு கொண்டது. நீங்கள் அந்த நட்சத்திரத்தைக் காண வேண்டுமென்றால் ஏப்ரல் மாத மத்தியில் இரவு சுமார் எட்டு மணிக்கு மேற்கு வானை நோக்கினால் போதும். மிக எடுப்பாகத் தெரிகின்ற நட்சத்திரம் தான் சிரியஸ் நட்சத்திரம்.

இது கோடைக் காலத் தொடக்கம். அனேகமாக வானில் மேகங்கள் இராது. கிராமப்புறமாக அதுவும் விளம்பர விளக்குகள், தெரு விளக்குகள், கடை விளக்குகள் இல்லாமல் நல்ல இருட்டாக இருக்கின்ற இடத்திலிருந்து பார்த்தால் சிரியஸ் அற்புதமாகக் காட்சி அளிக்கும். இது தான் சிரியஸ் நட்சத்திரம் என்று  அடையாளம் காட்டுவதற்கு உங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை

ஏனெனில் நான் தான் வானத்து ராஜா என்று கூறிக் கொள்வது போல இது மற்ற நட்சத்திரங்ளைக் காட்டிலும் பிரகாசமாக ஜொலிக்கும். உண்மையில் வானத்து நட்சத்திரங்களில் சிரியஸ் தான் சூப்பர் ஸ்டார்.
ஏப்ரல் மாதக் கடைசி வரை மேற்கு வானில் இரவு சுமார் எட்டரை மணி அளவில்
சிரியஸ் (Sirius) நட்சத்திரம் மேலே படத்தில் உள்ளது போலத் தெரியும்.கீழே இடது புறம்
அகஸ்திய (Canopus) நட்சத்திரத்தையும் வலது புறம் மேலே திருவாதிரை
(Betelguese) நட்சத்திரத்தையும் காணலாம்.படம் Stellarium
 சிரியஸ் நட்சத்திரத்தின் உண்மையான பொலிவைக் காண நகர்ப்புறங்கள் பொருத்தமானவை அல்ல. . நகர்ப்புறப் பகுதிகளில் விளம்பரப் பலகைகளின் வெளிச்சம், தெரு விளக்குகளின் வெளிச்சம் என வெளிச்சம் அதிகம். தவிர, நகரத்துக்கு மேல் உள்ள வான் பகுதியில் நுண்ணிய தூசும் அதிகம். கீழே இருந்து வருகின்ற வெளிச்சத்தை வானில் உள்ள தூசு சிதறடிக்கும் போது நட்சத்திரங்களும் கிரகங்களும் தெளிவாகத் தெரியாது. சில நட்சத்திரங்களே தெரியும்.
  
வானில் சிரியஸ் நட்சத்திரம் மிகப் பிரகாசமாகத் தெரிவதை வைத்து அதுதான் மிகப் பெரிய நட்சத்திரமா என்று கேட்டால்  நிச்சயமாக இல்லை. இது சற்று குழப்பமூட்டுவதாக இருக்கலாம்.

வானத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன. எல்லாமே ஒரே சைஸில் இல்லை என்று ஏற்கெனவே கூறினோம். பெரிய நட்சத்திரங்கள் உண்டு. சிறிய நட்சத்திரங்கள் உண்டு. சில நட்சத்திரங்கள் ஒப்பு நோக்குகையில் நமக்கு அருகில் உள்ளன. பல நட்சத்திரங்கள் மிக மிகத் தொலைவில் உள்ளன. சிரியஸ் மிகப் பெரிய நட்சத்திரம் அல்ல என்றாலும் அது ஒப்பு நோக்குகையில் நமக்கு அருகில் உள்ளதால் நம் பார்வையில் அது மற்ற நட்சத்திரங்களை விட மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.

இதை சற்று விளக்கியாக வேண்டும். இருட்டான இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். திடீரென ஒருவர் உங்கள் முகத்தருகே டார்ச் லைட் அடிக்கிறார். டார்ச் லைட் பிரகாசத்தில் உங்கள் கண்கள் கூசுகின்றன. அதே சமயம் சற்று தூரத்தில் ஒரு டீக் கடை வாசலில் பெட்ரோமாக்ஸ் லைட் தொங்குகிறது. டார்ச் லைட் வெளிச்சத்தை விட பெட்ரோமாக்ஸ் லைட் அதிக வெளிச்சத்தை அளிப்பதாகும். ஆனால் அது நம் கண்களைக் கூச வைப்பது இல்லை.

டார்ச் லைட்டை விட பெட்ரோமாக்ஸ் லைட் அதிகப் பிரகாசமானது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் அது தொலைவில் இருக்கிறது. டார்ச் லைட் கண் அருகே இருப்பதால் அது அதிக பிரகாசம் கொண்டதாக கண்ணைக் கூச வைக்கிறது.

வானத்து நட்சத்திரங்களின் கதையும் அப்படித்தான். வான வெளியில் சிரியஸ் நட்சத்திரத்தை விட மேலும் பிரகாசமான, மேலும் பெரியதான நட்சத்திரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை மிகவும் தொலைவில் உள்ளன. ஆகவே ஒப்பு நோக்குகையில் நமக்கு அருகே உள்ள சிரியஸ் நட்சத்திரம் மிகப் பிரகாசமாக உள்ளது.

வானவியல் நிபுணர்கள் நட்சத்திரங்களின் பிரகாசத்தை அளவிட்டு அந்த அடிப்படையில் அவற்றுக்கு எண்களை அளித்துள்ளனர். அந்த அளவீட்டின்படி சிரியஸ் நட்சத்திரத்தின் பிரகாச எண் மைனஸ் 1.44. அதென்ன மைனஸ் என்று கேட்கலாம். சில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு நட்சத்திரத்துக்கு எண் ஒன்று என நிர்ணயித்து விட்டனர். அதை விடப் பிரகாசம் குறைந்த நட்சத்திரங்களுக்கு இரண்டு, மூன்று, நான்கு ஐந்து என வரிசையாக எண்களை அளித்து விட்டனர்.

அந்த வரிசையில் எண் ஆறு என்றால் அது மிக மிக மங்கலான நட்சத்திரம். இவ்விதமான நிலையில் சிரியஸ் நட்சத்திரத்துக்கு மைனஸ் குறி அளிக்க வேண்டியதாயிற்று. ஏழு, எட்டு என்ற எண்களைக் கொண்ட நட்சத்திரங்களை நம்மால் வெறும் கண்ணால் பார்க்க முடியாது

இந்த முறையின்படி ஒரு நட்சத்திரத்துக்கு அளிக்கப்படுகிற எண்ணுக்குத் தோற்றப் பிரகாச எண் என்று பெயர். நம் பார்வையில் காணப்படுகிற பிரகாசத்தை வைத்து அளிக்கப்படுகின்ற எண் என்று அர்த்தம். ஆங்கிலத்தில் இதை apparent magnitude  என்று கூறுவர்
.
சிரியஸ் நட்சத்திரம் ஒப்பு நோக்குகையில் நமக்கு அருகில் இருப்பதால் அது மிகப் பிரகாசமாகத் தெரிகிறது என்று கூறினோம். அதாவது சிரியஸை விடப் பிரகாசமான நட்சத்திரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை அதிகத் தொலைவில் உள்ளதால் சிரியஸை விடப் பிரகாசம் குறைந்தவையாகக் காட்சி அளிக்கின்றன. ஆனால் அந்த நட்சத்திரங்களை ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

வானவியல் நிபுணர்கள் எல்லாம் முறையாக இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள். எனவே அவர்கள் இன்னொரு அளவீட்டு முறையையும் உருவாக்கினர். வானத்து நட்சத்திரங்கள் அனைத்தையும் பூமியிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தி வைக்க முடிவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்போது எது உண்மையில் பிரகாசமானது என்பது தெரிந்து விடும். அப்படிப்பட்ட நிலையில் நட்சத்திரங்களின் பிரகாசத்தை வைத்து அளவீட்டு எண்களை அளிக்கலாம். இது அசல் பிரகாச எண் என்று குறிப்பிடப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் absolute magnitude என்று கூறுவார்கள்

அசல் பிரகாச எண்  பட்டியலில் சிரியஸ் முதலிடம் பெறவில்லை. ஏனெனில் அப்போது அகஸ்திய (Canopus), திருவாதிரை (Betelguese), கேட்டை(Antares) சித்திரை(Spica), ரைஜெல்(Rigel) ஆகிய நட்சத்திரங்கள் சிரியஸ் நட்சத்திரத்தை விடப் பிரகாசமானவையாக விளங்கும்.

இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைக் கூறலாம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு வீட்டின் வாசலில் 60 வாட் பல்பு எரிகிறது. அது நல்ல வெளிச்சத்தை அளிக்கிறது. அந்த வெளிச்சத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கலாம். அங்கிருந்து சற்று தொலைவில் ஒரு பலகாரக் கடை வாசலில் 100 வாட் பல்பு தொங்குகிறது. அதன் வெளிச்சம் அந்த வீட்டு வாசல் வரை வராது. மேலும் தொலைவில் ஒரு பாக்டரி வாசலில் 200 வாட் பல்பு எரிகிறது. ஆனால் தொலைவில் உள்ளதால் அது வெறும் ஒளிப்புள்ளியாகத் தெரிகிறது

. இந்த மூன்றையும் ஐந்து மீட்டர் தொலைவில் அருகருகே வைத்தால் 200 வாட் பல்புதான் பிரகாசமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அந்த அளவில் தான் அகஸ்திய, திருவாதிரை, கேட்டை முதலான நட்சத்திரங்கள் சிரியஸ் நட்சத்திரத்தை விடப் பிரகாசமானவை.

  மேற்கத்திய வானவியலின்படி சிரியஸ் நட்சத்திரமானது பெரு நாய் எனப்படும் நட்சத்திர மண்டலத்தில் உள்ளது. ஆகவே சிரியஸ் நட்சத்திரத்துக்கு Dog Star என்ற பெயர் உண்டு. ஏதோ காரணத்தால் சிரியஸ் நட்சத்திரம் கோடைக் காலத்துடன் சம்பந்தப்பட்டதாக கருதப்படுகிறது. எனவே கடும் கோடைக்காலம் dog days  என்று வருணிக்கப்படுகிறது.

இந்தியப் புராணங்களில் சிரியஸ் நட்சத்திரமானது வானுலக வேட்டை நாய் என்பதாகவும் கூறப்பட்டுள்ளது.. நட்சத்திரங்களுக்கெல்லாம் நட்சத்திரம் என்றும் வருணிக்கப்பட்டுள்ளது. கிரேக்க புராணம் உட்பட பிற புராணங்களிலும் என்ன காரணத்தாலோ சிரியஸ் நட்சத்திரமானது நாயாக வருணிக்கப்பட்டுள்ளது.

வருகிற நாட்களில் நீங்கள் மேற்கு வானில் சிரியஸ் நட்சத்திரத்தைக் கண்ணுற்றால் அதற்கு சற்று கீழே இட்து புறத்தில் மற்றொரு பிரகாசமான நட்சத்திரத்தைக் காணலாம். அதுவே அகஸ்திய நட்சத்திரமாகும். ஆங்கிலத்தில் அதற்கு கனோபஸ் என்று பெயர். இரவு வானில் சிரியஸ் நட்சத்திரத்துக்கு அடுத்தபடியாக அதுவே மிகப் பிரகாசமான நட்சத்திரமாகும். சிரியஸ் நட்சத்திரத்தை விடப் பிரகாசம் குறைந்த ஆனால் அதே நேரத்தில் வானில் எடுப்பாகக் காட்சி அளிக்கின்ற நட்சத்திரங்களின் பட்டியலில் சுவாதி, சித்திரை, ரோகிணி, மகம் முதலான நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன..

சிரியஸ் நட்சத்திரமானது பூமியிலிருந்து சுமார் 8.6 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அதாவது சிரியஸ் நட்சத்திரத்திலிருந்து சுமார் எட்டரை ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பிய ஒளியைத் தான் நீங்கள் இப்போது காண்கிறீர்கள்ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பதாகும்.  ஒளியானது ஓராண்டில் பயணம் செய்கின்ற தூரமே ஒளியாண்டு ஆகும். அதாவது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர். அகஸ்திய நட்சத்திரமோ சிரியஸ் நட்சத்திரத்தைப் போல 40 மடங்கு தொலைவில் இருப்பதாகும். திருவாதிரை நட்சத்திரமோ 80 மடங்கு தொலைவில் உள்ளதாகும். அந்த நட்சத்திரத்தை அருகே சிரியஸ் நட்சத்திரத்தைக்கொண்டு வந்து வைத்தால் திருவாதிரை பூதாகாரமாகத் தெரியும்.

சிரியஸ் நட்சத்திரம் என்பது ஏதோ ஒரு நட்சத்திரம் என்பது போல இதுவரை பேசி வந்தோம். உண்மையில் சிரியஸ் இரட்டை நட்சத்திரமாகும். அதாவது சிரியஸ் நட்சத்திரத்தின் அருகே இன்னொரு நட்சத்திரம் உள்ளது. இந்த இரண்டும் ஒரு பொது மையத்தைச் சுற்றி வருகின்றன. இந்த இரண்டில் ஒன்று பெரியது. மற்றொன்று சிரியது. பெரிய நட்சத்திரத்தை சிரியஸ் என்றும் சிறிய நட்சத்திரத்தை சிரியஸ் பி என்றும் வருணிக்கின்றனர். சிரியஸ் நட்சத்திரத்தை செல்லமாக dog star  என்று குறிப்பிடுவதால் சிரியஸ் பி நட்சத்திரத்தை Puppy star என்று அழைக்கின்றனர்
சிரியஸ் A இடது புறம், சிரியஸ் B வலது புறம். படம் Celestira
.  எனினும் நாம் இரவு வானில் வெறும் கண்ணால் பார்க்கும் போது சிரியஸ் நட்சத்திரத்தைத் தான் காண்கிறோம். சிரியஸ் பி நட்சத்திரம் மிகவும் மங்கலானது என்பதால் வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது.    .
 சிரியஸ் நட்சத்திரங்கள் இப்போது சூரிய மண்டலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு இது நீடிக்கும். இதன் விளைவாக அதன் பிரகாசம் சற்றே அதிகரிக்கும். பின்னர் அவை சூரிய மண்டலத்திலிருந்து விலகிச் செல்ல ஆரம்பிக்கும். எனினும் இன்னும் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு சிரியஸ் தான் வானில் மிகப் பிரகாசமான நட்சத்திரமாக இருந்து வரும்.

இது 2016 ஏப்ரல் 6 ஆம் தேதியன்று இரவு சென்னை ஏ வானொலியில் நான் நிகழ்த்திய உரையின் சுருக்கமாகும். நன்றி AIR.