Nov 6, 2011

மாஸ்கோவில் உட்கார்ந்து கொண்டு செவ்வாய்க்கு ‘சென்றவர்கள்’

Share Subscribe

ஆறு விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்துக்குச் ’சென்று விட்டு’ நவம்பர் 4 ஆம் தேதி பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

உண்மையில் அவர்கள் மாஸ்கோ அருகே மேலே படத்தில் காணப்படுவது போன்ற பெரிய குழாய்களுக்குள் 520 நாட்கள் தங்கி விட்டு இப்போது வெளியே வந்துள்ளனர். அவ்வளவு தான். அதாவது இது ஒரு பரிசோதனை.

செவவாய் கிரகத்துக்குச் சென்று விட்டுத் திரும்புவதானால் குறைந்தது 520 நாட்கள் ஆகும். ஒரு விண்கலத்துக்குள் அடைபட்டபடி இப்படி நீண்ட நாட்கள் பயணம் செய்கின்ற விண்வெளி வீரர்களின் மனோ நிலை எப்படி இருக்கும்? அவர்களால் ஒன்றுபட்டு செயல் பட இயலுமா? போன்ற கேள்விகளுக்கு விடை அறிய விஞ்ஞானிகள் விரும்பினர்.

 ஆகவே ஆறு பேரை 520 நாட்கள் ஓரிடத்தில் அடைத்துப் போட்டு ஆராய்வது என்று முடிவாகியது.

வளர்ந்த நிலையில் வெங்காயம் 
மாஸ்கோ அருகே இப்பரிசோதனைக்கென தனி ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டது. இது பார்வைக்கு பெரிய குழாய்கள் போல இருந்தாலும் இதனுள் எல்லா வசதிகளும் இருந்தன். ஆனால் இதில் ஜன்னல்களோ வேறு திறப்புக்ளோ கிடையாது. மூன்று ரஷியர்கள், ஒரு இத்தாலியர், ஒரு பிரெஞ்சுக்காரர், ஒரு சீனர் என 6 பேர் இப்பரிசோதனைக்கூடத்தில் கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி நுழைந்ததும் வெளிப்புறம் கதவு அடைக்கப்பட்டது. இவர்கள் அடுத்த சுமார் 17 மாதங்களை இப்பரிசோதனைக்கூடத்தில் தான் கழித்தனர்.

இவர்கள் ஏற்கெனவே உள்ளே வைக்கப்பட்ட ரெடிமேட் உணவுகளை சூடுபடுத்தி உண்டனர். சோதனைக்கூடத்தினுள் அவர்கள் கண்ணாடி அறைகளில் தக்காளி, வெங்காயம்,முள்ளங்கி முதலியவற்றைப் பயிரிட்டு    உணவுடன் சேர்த்துக் கொண்டனர். நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.அவர்களது ம்ன நிலை சரியாக உள்ளதா என்று கண்டறிய அவர்களது தலையில் உணர் கருவிகள் வைக்கப்பட்டு மூளை இயக்கம் பதிவு செய்யப்பட்டது.
 தலையில் உணர் கருவிகள்

உண்மையில் செவ்வாய்க் கிரக விண்கலத்தில் இருந்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வேலைகளைச் செய்ய வேண்டியிருக்குமோ அப்படியான வேலைகளை அவர்கள் செய்தனர்.. உள்ளே இருந்த சமயத்தில் அவர்கள் 100 பரிசோதனைகளையும் நடத்தினர். இத்துடன் நில்லாமல் இந்த ஆறு பேரில் இருவர் விண்வெளி வீரர்களுக்குரிய பாதுகாப்பு உடையை அணிந்து செவ்வாயில் த்ரை இறங்குவதை பாவனையாகச் செய்தனர்.

உள்ளே ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த காமிராக்கள் அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தன. ஆறு பேரும்  தங்கள் குடும்பத்தினருடன் டெலிபோனில் பேச அனுமதிக்க்ப்ப்ட்டனர். செவ்வாயிலிருந்து பூமிக்கு சிக்னல்கள் வந்து சேர (கிட்டத்தட்ட ஒளிவேகத்தில் வந்தாலும் ) சுமார் 21 நிமிஷம் ஆகும். ஆகவே உள்ளே இருந்தவர்கள் உறவினர்களிடம் பேசுவதிலும் சில சமயம் இவ்வித காலதாமதம் ஆகும்படி செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்பு உடை அணிந்து...
பரிசோதனைக்கூடத்தில் அடைபட்டிருந்த ஆறு பேரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளிவந்தனர்.  அவர்கள் மூன்று நாள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு தான் வீடு திரும்ப முடியும்.இந்த ஆறு பேரையும் வைத்து நடத்தப்பட்ட பரிசோதனை உண்மையான செவ்வாய் கிரகப் பயணத்துக்கு ஓரளவில் தான் உதவும். ஏனெனில் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் விண்கலத்தில் எடையற்ற நிலை இருக்கும். அதன் விளைவாக உடலில் பாதிப்புகள் இருக்கும். மாஸ்கோ பரிசோதனையில் இவர்கள் எடையற்ற நிலைக்கு உட்படவில்லை.


தவிர, செவ்வாய்க்குச் செல்லும் விண்கலமானது சூரியனிலிருந்தும் நட்சத்திரங்களிலிருந்தும் வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சுக்கு உட்பட்டதாக இருக்கும். மாஸ்கோ பரிசோதனையில் இந்த அம்சம் கிடையாது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆறு பேருக்கும் தாங்கள் மாஸ்கோ அருகே இருக்கிறோம் என்ற உணர்வு நிச்சய்ம் உண்டு. அந்த அள்வில் அவர்களிடம் ஒரு மன நிம்மதி இருக்கவே செய்யும். உண்மையில் செவ்வாய் கிரகத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களிடம் இவ்வித நிம்மதி இருக்கும் என்று சொல்ல முடியாது.

கடந்த பல ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலங்கள் பலவும் அனுப்பப்பட்டுள்ளன. மனிதன் இனிமேல் தான் செல்ல வேண்டும். மனிதன் செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் ஆகலாம் என்று ரஷிய விண்வெளி அமைப்பின் துணைத் தலைவர் விட்டாலி டேவிடோவ் கூறினார். காரணம் - இன்னும் எவ்வளவோ பிரச்சினைகளத் தீர்க்க வேண்டியுள்ளது.

ஸ்டார் டிரெக் (Star Trek) போன்ற சினிமா பார்த்தவர்கள், அது போன்ற நாவல்களைப் படித்தவர்கள் ஆகியோரில் சிலர் அவ்விதப் பயணம் சாத்தியம் என்று நினைக்கக்கூடும். மனிதன் சந்திரனுக்குச் சென்று விட்டு வரவில்லையா என்றும் அவர்கள் கேட்கக்கூடும். வெறும் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரன் பூமியின் அவுட் ஹவுஸ் மாதிரி. ஒரு பெரிய பங்களாவில் இருப்பவர் அந்த பங்களாவின் காம்பவுண்டுக்குள் இருக்கின்ற அவுட் ஹவுசுக்குச் சென்று வருகின்ற மாதிரியில் மனிதன் சந்திரனுக்குச் சென்று விட்டு வந்திருக்கிறான். அவ்வளவு தான்.

 சூரிய மண்டலத்து கிரகங்கள் பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவை. நட்சத்திர மண்டலங்களில் உள்ள கிரகங்கள் கோடானு கோடி கிலோ மீட்டரில் உள்ளவை. ஆகவே செவ்வாய் கிரகத்துக்குச் செல்வது இன்னும் கைகூடவில்லை என்பதில் வியப்பில்லை.

5 comments:

நான் மதன் said...

nice

வவ்வால் said...

ராம்துரை,

நல்ல தகவல், ஆனால் இதனை நம்பலாமா? ஏன் எனில் இன்னும் மனிதன் நிலவுக்கு சென்று வந்ததில் உள்ள சர்ச்சையே தீர்க்கப்படவில்லை. ஏன் அமெரிக்காவிற்கு அடுத்து யாரும் நிலவுக்கு மனிதனை அனுப்பவில்லை? அப்படி இருக்கும் போது செவ்வாய் எந்த அளவு சாத்தியம்.

#விண்கலம் எப்படி நிலவில் அல்லது செவ்வாயில் லேண்ட் ஆகும், ஷட்டில் ஒடி வந்து இறங்குறது, செலுத்தும் போது அதற்கான ஏவு தளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. அப்படி எனில் கரடு முரடான நிலவு/செவ்வாயில் ஓடி இறங்குமா? அல்லது கிளம்பும் போது நின்றவாக்கில் எப்படி கிளம்ப்பும்? ராக்கெட் ப்ரொபல்சன் எரியும் போது என்ன நடக்கும் என்பது தெரியும் தானே.

#ஈர்ப்பு விசை அற்ற , ஒளி விரவல் அல்லது பரவல் அற்ற இடத்தில் தாவாரங்கள் எப்படி வளரும், போட்டொ ட்ரபிசம், ஜியோடிராபிசம் கேள்விப்பாட்டு இருப்பீர்கள்.

#மேலும் சைலம்,ப்லோயம் வழியாக உணவு,நீர் செல்ல ஈர்ப்பு விசை, சூரிய ஒளி எல்லாம் தேவை.டிரான்ஸ்பைரேஷன் எப்படி நடக்கும்.

சில நாடுகள் தங்களை வல்லரசாக காட்டிக்கொள்ள இப்படி எல்லாம் அவ்வப்போது ஸ்டண்ட் அடிப்பதாக பல பத்திரிக்கைகளில் கட்டுரைகள் வந்துள்ளது.

என்.ராமதுரை / N.Ramadurai said...

வவ்வால்
செவ்வாயில் போய் இறங்குவதில் பிரச்சினை கிடையாது. ஏற்கெனவே பல ஆளில்லா விண்கலங்கள் பாரசூட் மூலம்--ரஷிய விண்வெளி வீரர்கள் இப்போது சோயுஸ் விண்கலம் மூலம் கஜாகஸ்தானில் வந்து இறங்குவது -- இறங்கியுள்ளன. அவற்றில் சில செவ்வாய் தரையில் ஊர்ந்து சென்றுள்ளன.
செவ்வாயில் ஓரளவு காற்று மண்டலம் உள்ளது. சில இடங்களில் ஐஸ்கட்டி வடிவில் தண்ணீரும் உள்ளதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..தண்ணீரை ஆக்சிஜனாகவும் ஹைட்ர்ஜனாகவும் பிரித்து திரவமாக்கி எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். செவ்வாயில் மனிதன் இறங்கிய பின் தேவையான் பொருட்களை தளவாடங்களை பூமியிலிருந்து ஆளற்ற விண்கலங்கள் மூலம் அனுப்ப இயலும்.
பூமியை விடச் சிறியது என்றாலும் செவ்வாயில் ஈர்ப்பு சக்தி உண்டு.உறைக்காத வெயிலும் உண்டு Greenhouse மூலம் பயிர் சாகுபடியும் சாத்தியமே.
பெரிய பிரச்சினை பணம்.செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப ஏராளமான பணம் தேவை. பல நாடுகள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டால் செவ்வாய்ப் பயணம் சாத்தியமாகலாம்.
ஆகவே மாஸ்கோ பரிசோதனை வெறும் ஸ்டண்ட அல்ல. ஐரோப்பிய விண்வெளி அமைப்பு இப்ப்டியான ஸ்டண்டுகளில் ஈடுபடக்கூடிய ஒன்று அல்ல.விண்வெளித் துறையில் பல சாதனைகளைப் புரிந்துள்ள ரஷியாவும் வீண் ஸ்டண்டில் ஈடுபடக்கூடிய நாடு அல்ல.மாஸ்கோ பரிசோதனை குறிப்பிட்ட சில விஷயங்களைப் பொருத்தவரையில் சீரியஸான முய்ற்சியே.

writerpara said...

நல்ல கட்டுரை. இந்த செவ்வாய் தோஷம் என்கிறார்களே, ஒருவேளை அங்கு போனால் அவர்களுக்கு அது இருக்காது போகுமா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

செவ்வாய் தோஷம் என்பது ஜோசியம் சம்பந்தப்பட்ட சமாச்சாரம்.அது நம்பிக்கையைப் பொருத்த விஷயம். அதற்கும் வானவியலுக்கும் தொட்ர்பு கிடையாது.

Post a Comment