Nov 18, 2011

நியூட்ரினோவுக்கு மீண்டும் வெற்றி; ஐன்ஸ்டைன் தோற்று விட்டாரா?

Share Subscribe
ஜெனிவாவில் உள்ள் ஆராய்ச்சிக்கூடப் பிரிவு
 நியூட்ரினோ (Neutrino) எனப்படும் மிக மிக நுண்ணிய துகள் உண்மையிலேயே ஒளியைக் காட்டிலும் வேகமாகச் செல்கிறதா என்று கண்டறிய ஜெனீவா விஞ்ஞானிகள் மீண்டும் நடத்திய பரிசோதனைகளில் முந்தைய அதே முடிவுகள் தான் தெரிய வந்துள்ளன.(காண்க நியூட்ரினோவின் ஓட்டப் பந்தயம்). அதாவது அத்துகள் ஒளியை விட வேகமாகச் செல்கின்றது என்பதாகவே புதிய பரிசோதனைகள் காட்டுகின்றன. இதை விஞ்ஞானிகள் நவம்பர் 18 ஆம் தேதி அறிவித்தனர். அப்படியானால் ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நியூட்ரினோ துகள் ஒளியைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்வதாகக் கடந்த செப்டம்பரில் ஜெனீவாவில் விஞ்ஞானிகள் அறிவித்த போது உலகில் பலரும் அதை நம்ப மறுத்தனர். ஏனெனில் ஒளியின் வேகத்தை எதனாலும் மிஞ்ச முடியாது என்று 1905 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைன் அடித்துக் கூறியிருந்தார். அவரது கொள்கை பின்னர் பரிசோதனைகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டது. ஐன்ஸ்டைன் கூறியது தவறு என்று நிரூபிக்கப்படுமானால் அது இயற்பியலின் அடிப்படையை உலுக்குவதாக ஆகிவிடும்.
ஐன்ஸ்டைன்

ஆகவே தான் ஜெனீவா விஞ்ஞானிகள் செப்டம்பரில் செய்த அறிவிப்பை அப்போது யாரும் ஏற்க மறுத்தனர். ஒருவேளை பரிசோதனையில் பிசகு இருக்கலாம் என்று கருதி ஜெனீவா விஞ்ஞானிகள் தங்களது பரிசோதனை முறையில் சற்றே மாற்றம் செய்து அக்டோபர் கடைசியிலிருந்து நவம்பர் 6 ஆம் தேதி வரை திரும்பத் திரும்ப சோதனை நடத்திப் பார்த்தனர். இப்போதைய பரிசோதனைகளிலும் நியூட்ரினோ ஒளியின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்வதாகவே தெரிய வந்துள்ளது.

ஜெனீவா விஞ்ஞானிகள் நடத்திய சோதனைகளின் போது CERN எனப்படும் (The European Organisation for Nuclear Research) ஜெனீவாவில் உள்ள பாதாள ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து நியூட்ரினோக்கள் நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே 732 கிலோ மீட்டர் தொலைவில் இத்தாலியில் Gran Sasso என்னுமிடத்தில் உள்ள பாதாள ஆராய்ச்சிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டன.

பாதாளம் வழியே பாயும் நியூட்ரினோ
உலகில் இவ்விதமான வேறு ஆராய்ச்சிக்கூடங்களில் இதே மாதிரி பரிசோதனைகளை நடத்திப் பார்த்த பிறகே நியூட்ரினோ துகள் ஒளி வேகத்தை மிஞ்சுகிறதா என்று சொல்ல முடியும் என்று ஜெனீவா விஞ்ஞானிகள் இப்போதைய பரிசோதனைகளுக்குப் பிறகு கூறினர். உலகில் இரண்டே இடங்களில் தான் இவ்விதமான பரிசோதனைகளை நடத்த முடியும். அவற்றில் ஒன்று ஜப்பானில் உள்ளது.

ஜப்பானின் கிழக்குக் கரையில் உள்ள டோகாய் (Tokai) பாதாள ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து மேற்குக் கரையில் உள்ள காமியோகாண்டே (Kamiokande) நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடத்துக்கு (தொலைவு 295 கிலோ மீட்டர்) நியூட்ரினோக்களை அனுப்பி சோதனை நடத்த இயலும்.

கடந்த மார்ச் மாதத்தில் புகுஷிமா (Fukushima) அணுமின் நிலைய விபத்துக்குக் காரணமான கடலடி பூகம்பத்தின் போது மேறபடி நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே அங்கு நியூட்ரினோ தொடர்பாக நடந்துவந்த வேறு வித சோதனைகள் நிறுத்தப்பட்டன. அந்த ஆராய்ச்சிக்கூடம் மறுபடி இந்த ஆண்டுக் கடைசியில் தான் செயல்படத் தொடங்கும். இன்னொரு ஆராய்ச்சிக்கூடம் அமெரிக்காவில் உள்ளது.

அமெரிக்காவில் மின்னிசோட்டா (Minnesota) நகருக்கு அருகே ஒரு சுரங்கத்தின் அடியில் உள்ள பாதாள ஆராய்ச்சிக்கூடத்திலும் நியூட்ரினோவின் வேகம் பற்றி சோதனை நடத்த இயலும். இங்கு அடுத்த ஆண்டில் தான் சோதனை நடத்த முடியும். அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து நிலத்தடிப் பாறை வழியே 724 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்னிசோட்டா ஆராய்ச்சிக்கூடத்துக்கு நியூட்ரினோக்களை அனுப்ப முடியும்.

 இந்த இரு இடங்களிலும் நடத்தப்பட இருக்கும் சோதனைகளுக்குப் பிறகுதான் நியூட்ரினோ உண்மையில் ஒளியை விட வேகமாகச் செல்கின்றதா என்று கூற முடியும். ஐன்ஸ்டைன் கூறியது சரியா, தவறா என்பது அப்போது தான் தெரிய வரும். அதுவரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

3 comments:

நீச்சல்காரன் said...

பீட்டா கதிர்கள் ஏற்கனவே ஒளியை விட வேகமாக செல்லும் என நம்பப்படுகிறதே. ஐன்ஸ்டைன் விதிகள் ஏற்கனவே மீறப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

நீச்சல்காரன்
பீட்டா கதிர்களின் வேகம் ஒளி வேகத்தை விடவும் குறைவு.

தமிழ்கிழம் said...

இன்று தான் இந்த அருமையான வலைப்பூ காணக்கிடைத்தது...
பயனுள்ள பதிவுகள் பல உள்ளன...
நன்றி தோழா....

Post a Comment