Oct 17, 2011

வெள்ளை தான் எமக்குப் பிடிச்ச கலரு...

Share Subscribe
வீட்டுக்கு வெள்ளையடிப்பது என்பது தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வருவதாகும். வெளிப்புறச் சுவர்களுக்கும் உட்புறச் சுவர்களுகும் சுண்ணாம்பு அடிப்பார்கள். சுண்ணாம்பு வெண்மை நிறம் என்பதால் சுவர்களுக்குப் பூச்சு அடிப்பதை வெள்ளையடிப்பது என்றே குறிப்பிட ஆரம்பித்தார்கள். அண்மைக் காலமாக கலர் கலரான வித விதமான பூச்சுப் பொருட்கள் வந்துள்ளன. எனினும் சுண்ணாம்பு அடிப்பது மறைந்து விடவில்லை.

 அந்த நாட்களில் தெரிந்தோ தெரியாமலோ, அல்லது வேறு மாற்று இல்லை என்ற காரணத்தாலோ சுண்ணாம்பைத் தேர்ந்தெடுத்தனர். அது சிறந்ததோர் ஏற்பாடாகத் தோன்றுகிறது. சுண்ணாம்பின் காரத்தன்மையாலும் நெடியாலும் சுவர்களின் இடுக்குகளில் உள்ள நுண்ணிய பூச்சிகள் மடிந்து விடும்.அதை விட முக்கியமாக சுண்ணாம்பின் வெண்மை நிறத்துக்கு ஒரு விசேஷத்தன்மையும் உண்டு.

அதாவது நிறத்துக்கும் வெப்பத்தை ஈர்க்கும் தன்மைக்கும் தொடர்பு உண்டு. உதாரணமாக வெள்ளை நிறமானது வெப்பத்தை அனேகமாக ஈர்ப்பதே இல்லை. வெண்மையான பரப்பின் மீது வெயில் பட்டால் அது தன் மீது படுகின்ற வெப்பத்தை ( கிட்டத்தட்ட முற்றிலுமாக ) திருப்பிப் பிரதிபலித்து விடும். அந்த அளவில் வீட்டுக்குள் சூடு தாக்காது.   வெப்பத்தை ஈர்க்கும் தன்மை நிறத்துக்கு நிறம் மாறுபடும்.

 கருப்பு நிறமானது வெப்பத்தை நன்கு ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. வீடுகளில் வெந்நீர்த் தவலை என்பது உண்டு. இதன் அடிப்புறம் கரி ஏறிக் கிடக்கும். கரித்தூள் அடை அடையாக ஒட்டிக் கொண்டிருக்கும்  இத் தவலையை சுத்தம் செய்யும் போது அடிப்புறத்தில் உள்ள கரியை அகற்ற மாட்டார்கள்.  .

 அடுப்புப் பற்ற வைத்தவுடன் தவலை சட்டென்று வெப்பத்தை ஈர்த்துக் கொள்ள ஆரம்பித்து தண்ணீர் விரைவில் சுடேறும்.  தவிர,  கரி ஏறிய இத் தவலை வெப்பத்தை எளிதில் வெளி விடாது. ஆகவே நீண்ட நேரம் சுடு தண்ணீர் ஆறாமல் இருக்கும். தோசைக் கல்லின் அடிப்புறமும் இதே போலக் கரியேறிக் கிடப்பதைக் கவனிக்கவும்.

கண்ணாடி ஒரு விஷய்த்தில் தனித்தன்மை கொண்டது. கண்ணாடி வழியே ஒளி எளிதில் ஊடுருவிச் செல்லும். ஆனால கண்ணாடி வழியே வெப்பம் அவ்வளவாக ஊடுருவிச் செல்லாது. கண்ணாடியின் இத் தன்மை கட்டடக் கட்டுமானங்களில் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

மேலை நாடுகளில் 50 மாடி 60 மாடிக் கட்டடங்களை வெளியிலிருந்து பார்த்தால் சுவர்களே இல்லை என்று தோன்றும்.  கட்டடம் முழுவதும் கீழிருந்து உச்சி வரை கண்ணாடிப் பலகைகளால் போர்த்தப்பட்டதாகக் காட்சி அளிக்கும். இவ்விதக் கட்டடங்கள் முற்றிலும் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டவை.  வெளி வெப்பம் சிறிதளவு உள்ளே வந்தாலும் அந்த அளவுக்கு ஏர் கண்டிஷன் இயக்கச் செலவு அதிகரிக்கும்.

கட்டடங்களின் வெளிப்புறக் கண்ணாடிப் பலகைகளைத் தயாரிப்பதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்விதக் கண்ணாடிப் பலகை ஒன்றன் மீது ஒன்றாகப் பதிக்கப்பட்ட கண்ணாடிப் பலகைகளானது. இவற்றின் நடுவே உள்ள இடைவெளிகளில் கார்பன் டையாக்சைட், அல்லது வேறு வகை வாயுக்கள் நிரப்பப்பட்டிருக்கும். இது வெப்பம் உள்ளே வராதபடி தடுக்க உதவும். தவிர, இவ்விதக் கண்ணாடிகளின் உட்புறத்தில் மெல்லிய அலுமினியச் பூச்சு அளிப்பதும் உண்டு. சூரிய ஒளியைத் திருப்பி விடுவதற்கு இது உதவும்.

வெப்பம் ஈர்க்கப்படாமல் தடுக்கப் பூச்சு அளிப்பதற்கு மிகவும் ஏற்றது தங்கப் பூச்சாகும். கட்டடங்களின் வெளிப்புற கண்ணாடிகளுக்கு தங்கப் பூச்சு அளிப்பது கட்டுபடியாகாத ஒன்று. ஆனால் விண்வெளியில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களில் முக்கிய உறுப்புகளின் வெளிப்புறத்தில் தங்கப் பூச்சு அளிக்கப்படுகிறது.

இன்னொரு விஷயம். புதிதாகக் கட்டடங்களில் அறைகளின் உட்புறச் சுவர்களுக்கு இப்போதெல்லாம் சுண்ணாம்பு அடிப்பதில்லை. பல வித கலர் பூச்சுகளை அளிக்கின்றனர். எஞ்சினியரைக் கேட்டால் வெளிர் நிறங்களே உகந்தது என்பார்.   அறைகளின் உட்புறச் சுவர்களுக்கு சிலர் தங்கள் இஷடத்துக்கு கலரைத் தேர்ந்தெடுப்பது உண்டு.

ஒளியை பிரதிபலிப்பதிலும் நிறத்துக்கு நிறம் வித்தியாசம் உண்டு. உட்புறச் சுவரில் ஐவரி, வெள்ளை, வெளிர் மஞ்சள் போன்ற நிறத்தில் பூச்சு அளித்தால் அறை பெரிதாக இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். மாறாக அழுத்தமான கலர்கள் ஒளியை சாப்பிட்டு விடும். அவ்விதப் பூச்சு கொண்ட அறையில் நீங்கள் இர்ண்டு 60 வாட்ஸ் பல்பு மாட்டினாலும் இரவில் அந்த அறையின் உட்புறம் மங்கலாகக் காணப்படும்.

ஆனால் சுவர்ப் பூச்சு தொடர்பான டிவி விளம்பரங்களை நீங்கள் கவனித்தால்  அறையின் உட்புறத்தில் அழுத்தமான கலர்ப் பூச்சுகளை அடிப்பது போன்று காட்டுவார்கள். டிவி திரையில் கலர் எடுப்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் இப்படிச் செய்கிறார்கள்.

No comments:

Post a Comment