Oct 31, 2011

நாம் இப்போது 700 கோடி

Share Subscribe
பலப் பல ஆண்டுகளுக்கு முன்னர் அனேகமாக ஒவ்வோர் ஊரிலும் ஒரு சத்திரம் இருக்கும். வெளியூர் வாசிகள் இதில் இலவசமாகத் தங்கலாம். உணவும் இலவசமாக வழங்கப்படும்.இப்படியான ஒரு சத்திரம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சத்திரத்தில் முந்தைய நாள் வந்த 30 பேர் இருக்கிறார்கள். விடிந்ததும் அவர்களில் 20 பேர் சென்றுவிடுகிறார்கள். புதிதாக 20 பேர் வருகிறார்கள். இப்படியாக இருக்குமானால் பிரச்சினை இல்லை. சத்திரத்தில் இருப்போர் எண்ணிக்கை நிலையாக 30 ஆக இருந்து வரும்.



 அக்டோபர் 31 ஆம் தேதியன்று உலகின் மக்கள் தொகை 700 கோடியை எட்டும்

மாறாக சத்திரத்துக்கு வருவோர் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கிற்து. சத்திரத்திலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை குறைகிறது. அது மட்டுமல்லாமல் சத்திரத்துக்கு வருவோர் மேலும் மேலும் அதிக நாட்கள் தங்குகிறார்கள். இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் சத்திரத்தை மூட வேண்டிய நிலைமை தான் ஏற்படும்.

பூமியில் இப்போது இந்த நிலைமை தான் ஏற்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பூமியிலிருந்து ‘மேலே’செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பூமியில் இருப்பவர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதால் பூமியில் தங்கியிருப்போரின் அதாவது மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது.

மனித குலம் தோன்றிய நாளிலிருந்து உலகின் மக்கள் தொகை 1804 ஆம் ஆண்டில் தான் முதல் தடவையாக 100 கோடியை எட்டியது. கடந்த சுமார் 117 ஆண்டுகளில் இது 700 கோடியை எட்டி விட்டது. இதற்கு எவ்வளவோ காரணங்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலைமை வேறு. அடிக்கடி நடக்கின்ற போர்களில் எண்ணற்றவர்கள் மடிவர். அதல்லாமல் பிளேக், காலரா, பெரியம்மை, மலேரியா,  ஃபுளு போன்ற ஜுரம் முதலியவற்றால் மரண விகிதம் மிக அதிகமாக இருந்தது. பிரசவத்தின் போது தாய்மார்கள் உயிர் பிழைக்க கடவுளை வேண்டுவோர். பிறக்கின்ற குழந்தைகளில் பலவும் அல்பாயுசாக மரிக்கும். உலகில் ஆங்காங்கு பஞ்சம் ஏற்பட்டு பட்டினிச் சாவுகள் பல லட்சம் பேரின் உயிரைக் குடிக்கும்.

ஐரோப்பாவில் 1348 ஆம் ஆண்டு வாக்கில் தோன்றிய பிளேக் நோயினால் மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகிதம் பேர் மரித்ததாக ஒரு தகவல் கூறுகிறது. மேற்காசிய நாடுகளிலும் இந்த நோய் எண்ணற்றவர்களின் உயிரைக் குடித்தது பிளேக் தாக்குதலால் அப்போது உலகின் மக்கள் தொகை 10 கோடி அளவுக்குக் குறைந்ததாகவும் ஒரு கணக்கு உண்டு.

பஞ்சத்தை எடுத்துக் கொண்டால் 1770 வாக்கில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வங்கத்தில் (அப்போதைய வங்கம் பரப்பளவில் பெரியது)  ஒரு கோடிப் பேர் உயிரிழந்தனர்.1943 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தில் 40 லட்சம் பேர் மடிந்தனர்.முதல் உலகப் போரில் 3 கோடிப் பேர் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரில் 6 கோடிப் பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஒரு கால கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை தொட்ர்ந்து குறைந்து வந்தது. 1900 ஆம் ஆண்டில் 27 கோடியே 13 லட்சமாக இருந்த மக்கள் தொகை1907 ஆம் ஆண்டு வாக்கில் 26 கோடியே 35 லட்சமாகக் குறைந்தது. 1923 ஆம் ஆண்டில் இது 25 கோடியே 76 ல்ட்சமாக மேலும் குறைந்தது.
 வளரும் நாடுகளில் தான் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகம்

இப்போது பிளேக், பெரியம்மை, மஞ்சள் ஜூரம் போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டு விட்ட்ன. இந்தியா உட்பட உலகெங்கிலும் பொதுவில் மருத்துவ வசதிகள் அதிகரித்து வருகின்றன.ஓரிடத்தில் உணவுப் பற்றாக்குறை என்றால் பிறவிடங்களிலிருந்து உணவு விரைகிறது.பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பது பெரிதும் குறைந்து விட்டது. குழந்தைகளைத் தாக்கும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டன். வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது.

உலகின் மொத்த மக்கள் தொகை அதிகரித்து வந்த போதிலும் உலகில் சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருகிற்து.பெலாரஸ்,பல்கேரியா, கிரீஸ்,ஹங்கேரி, ஜப்பான், ரஷியா, உக்ரேயின் முதலான நாடுகள் இதில் அடங்கும்.

மக்கள் தொகை சமாச்சாரத்தில் வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. ஒரு நாட்டின் மக்கள் தொகையில் குழந்தைகள், முதியோர் ஆகியோரின் சதவிகிதம் அதிகமாகவும் உழைக்கும் வயதினரின்(20 முதல் 60 வயது ) சதவிகிதம் குறைவாகவும் இருந்தால் பிர்ச்சினையே. நல்ல வேளையாக இந்தியாவில் அப்படி இல்லை.  இன்னொரு பிரச்சினை மக்கள் அடர்த்தி.  ஒரு நாட்டில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கு உண்டு. அது தான மக்கள் அடர்த்தி.

இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 368 பேர் வீதம் வாழ்கிறார்கள். சீனாவில் இது 140. வங்க தேச்த்தில் இது 988. வங்கதேச்த்தின் வறுமை நிலைக்கு   இது தான் காரணம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சிங்கப்பூரில் இது 7148.ஆனால் சிங்கப்பூர் செல்வம் கொழிக்கும் நாடாக உள்ளது.

ஒரு நாடு என்றால் அந்த நாட்டின் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் தேவை. அவையல்லாமல் சுகாதார வசதி, போக்குவரத்து வசதி,தகவல் தொடர்பு வசதி, கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் தேவை

 நாம் இருவர் நமக்கு இருவர் 
. வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் வேலை கிடைக்கின்ற நிலைமை இருக்க வேண்டும்.மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகுமானால் எந்த அரசினாலும் அனைத்து வசதிகளையும் செய்து தர இயலாது.
இந்தியாவில் சுமார் 60 ஆண்டுகளாக  குடும்பக் கட்டுப்பாடு இயக்கம் ந்டந்து வருகிறது. கருத்தடை செய்து கொள்ள அரசே பல வசதிகளை செய்துள்ளது.க்ருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. நல்லவேளையாக இவற்றுக்கெல்லாம் எதிர்ப்பு இயக்கம் எதுவும் இல்லை. இந்த நாட்டு மக்கள் மிகவும் முற்போக்கானவர்கள்.
நல்ல விஷயங்களுக்கு மூடத்தனமான எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மக்களும் அரசுடன் ஒத்துழைப்பதால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் (மக்கள் தொகை அல்ல) குறைந்துள்ளது. ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பலன்கள் தமிழகம், கேரளம் ஆகிய தென் மாநிலங்களில் சிறப்பாக உள்ளது.

வட மானிலங்கள் பலவற்றில் அப்படி இல்லை. ஆகவே தான் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   ஏதோ ஒரு நாட்டிலிருந்து ஆண்டு தோறும் ஒரு கோடியே 70 பேர் இந்தியாவில் வந்து இறங்கினால் எப்படி இருக்கும்? அந்த அளவுக்கு நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதற்குத் தீர்வு என்ன?

’நாம் இருவர் நமக்கு இருவர்’ கோஷம் தான். நிபுணர்கள் இதை Total Fertility Rate (TFR) என்பார்கள். இந்தியாவில் தேசிய அளவில் தற்போது இது 2.6 ஆக உள்ளது. இதை 2.1 ஆகக் குறைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். தமிழகத்திலும் கேரளத்திலும் இது 1.7 ஆக இருக்கிற்து. ஆந்திரத்தில் 1.8 ஆனால் உத்தரப்பிரதேச்ம் (3..8) பிகார் (3.9) மத்தியப் பிரதேசம் (3.3) ஆகியவற்றில் மிக அதிகமாக உள்ளது.
 ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை மாறுமா?

இவ்வித நிலையில் இந்தியாவின் மக்கள் தொகை 2055-60 வாக்கில் 165 கோடியாக உயர்ந்து அதன் பிறகு ஸ்திர நிலைக்கு வரும் என்று கருதப்படுகிறது. ஸ்திர நிலை என்றால் மக்கள் தொகை மேலும் அதிகரிக்காமல் அதே நிலையில் இருந்து வரும் என்று பொருள்.

 உலகின் மக்கள் தொகை அக்டோபர் 31 ஆம் தேதி 700 கோடியை எட்டும் என்று ஐ. நா.சபையின்  மக்கள் தொகைப் பிரிவு கூறியுள்ளது.அன்றைய தினம் உலகில் ஏதோ ஒரு நாட்டில் 700 கோடியாவது குழந்தை பிறக்கும்.ஒரு வேளை அக்குழந்தை இந்தியாவில் பிறக்கலாம்.

உலகின் மக்கள் தொகை 2050 வாக்கில் 930 கோடியாக உய்ர்ந்து விடும் என்றும் சொல்லப்படுகிற்து. உலகின் மக்கள் தொகை எப்போது ஸ்திர நிலையை எட்டும்? அது ஆப்பிரிக்க நாடுகளின் கையில் உள்ளது. ஏனெனில் சுமார் 20 ஆப்பிரிக்க நாடுகளில் TFR  ஐந்துக்கும் அதிகமாக உள்ளது.எதிர்காலத்தில் இந்த நாடுகளிலும் இந்த விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

2 comments:

வவ்வால் said...

ராமதுரை,

அழகாக மக்கள் தொகைப்பெருக்கத்தை சொல்லி இருக்கிங்க.

//கருத்தடை செய்து கொள்ள அரசே பல வசதிகளை செய்துள்ளது.க்ருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. நல்லவேளையாக இவற்றுக்கெல்லாம் எதிர்ப்பு இயக்கம் எதுவும் இல்லை.//

ஹி..ஹி நீங்க இந்திய செய்தித்தாள்கலைப்படிக்கிறதில்லைப்போலும்,இந்த கு.க திட்டத்துக்கும் பால் தாக்கரே, ராமகோபாலன் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவிச்சுட்டாங்க.அதாவது இந்துக்கள் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் மத்தவங்களை விட கம்மியாக இருக்காம்,அதனால வீட்டுக்கு 4 பெத்துக்கோங்க,கு.க பண்ணாதிங்கனு பிரச்சாரம் பண்ணாங்க ஆனால் எடுபடலை.

//’நாம் இருவர் நமக்கு இருவர்’ கோஷம் தான். நிபுணர்கள் இதை Total Fertility Rate (TFR) என்பார்கள். //

இப்போ "நாம் இருவர் நமக்கு ஒருவர்" அப்படினு கோஷத்தை மாத்திடாங்களே ஆட்டோ,லாரி பின்னாடிலாம் இப்படித்தான் எழுதி இருக்கு.

//உத்தரப்பிரதேச்ம் (3..8) பிகார் (3.9) மத்தியப் பிரதேசம் (3.3) ஆகியவற்றி;ல் மிக அதிகமாக உள்ளது.//

அங்கேலாம் குறையாம இருக்க காரணம் அந்த மக்கள் ஆண் வாரிசு பிறக்கும் வரைக்கும் உழைச்சுக்கிடே இருக்காங்களாம், ஒரு ஆண் வாரிசு பிறந்தா தான் புரடக்‌ஷன் நிக்குமாம்.பெண் குழந்தைகளை சென்சஸ் கணக்கில கூட சொல்லாம, ஆண் வாரிசை மட்டுமே சொல்வார்களாம்.

அந்த காலத்திலேயே மால்தூஸ் பாப்புலேஷன் எக்ஸ்புலோஷன் பத்தி சொல்லி இருக்கார். அது படி ஒரு குறிப்பிட்டக்காலத்தில மக்கள் தொகை இரட்டிப்பாகும் அப்போ பஞ்சம் பட்டினி வந்து தானா சரியும்னு. அது நடந்திடும் போல!

Siraju said...

மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்கும் வழி, அதை பற்றிய தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்துவதே.

Post a Comment