Oct 7, 2011

நான்கு வானவில்

Share Subscribe

நான்கு வானவில்
மேலே உள்ள படத்தை உற்றுக் கவனியுங்கள். நான்கு வானவில் தெரியும். வானில் நான்கு வானவில் தெரிவது என்பது மிக அபூர்வமான காட்சியாகும். உலகில் நான்கு வானவில படமாக்கப்படுவது இதுவே முதல் தடவை. இது ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் தாய்ஸ்னர் எடுத்ததாகும். இப் படம் பயன்வ்ழி ஒளியியல் தொடர்பான அறிவியல் இதழில் வெளிவந்த பின்னர் உலகப் பிரசித்தி பெற்றதாகியது.

ஒரே சமயத்தில் வானில் மூன்று வானவில் தெரிவது என்பதே அபூர்வமானது. கடந்த 250 ஆண்டுகளில் ஐந்து தடவை மட்டுமே மூன்று வானவில் காணப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்கக் கடற்படை அகாடமியில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றும் ரேமாண்ட் லீ மூன்று வானவில் எத்தகைய சூழ்நிலைகளில் தெரியும், அதை எப்படிப் படமாக்க வேண்டும் என்பதற்கான உத்தியை அண்மையில் வெளியிட்டிருந்தார். தாய்ஸ்னர் அதைப் பின்பற்றி கடந்த ஜூனில் இப் படத்தை எடுத்தார்.

இடி, மின்னல், காற்றுடன் மழை மேகங்கள் திரண்டு தூறல் ஆரம்பித்தது. மறுபுறம் வெயில் இருந்தது. இதைக் கண்டதும் தாய்ஸ்னர் காமிராவுடன் கிளம்பினார். அவருக்கு லீ கூறிய விதிமுறைகள் நினைவுக்கு வந்தன. சூரியன் இருக்கும் திசை நோக்கி கிளிக் செய்தார். தமது படத்தில் மூன்று வானவில் இருக்கலாம் என்று அவர் கருதினார். பின்னர் படத்தைப் பார்த்த போது நான்கு இருப்பது தெரிந்தது. நிபுணர்களைக் கலந்தாலோசித்தார். படத்தை மேலும் செம்மையாக்கிய போது இரு வானவில்லுடன் மேலும் இரு வானவில் மங்கலாக இருப்பது தெரிந்தது.

பொதுவில் வானவில் குறிப்பிட்ட சூழ் நிலைகளில் தான் காட்சி அளிக்கும். சூரியன் அடிவானத்துக்கு சற்று மேலே இருக்க வேண்டும். அதாவது வெயில் இருக்க வேண்டும். சூரியன் இருக்கின்ற திசைக்கு நேர் எதிர் திசையில் லேசான மழை இருக்க வேண்டும். அவ்வித நிலையில் சூரியன் இருக்கின்ற திசைக்கு எதிர் திசையில் வானவில் தெரியும்.

இரட்டை வானவில்
பல சமயங்களிலும் இந்த வானவில் வானை ஆக்கிரமித்துக் கொண்டு முழுமையாகத் தெரியும். சில சமயங்களில் இரட்டை வானவில் தெரியும்.  இரண்டாவது வானவில்லின் நிறங்கள் அவ்வளவு அழுத்தமாக இராது. பொதுவில் வானவில்லில் சிவப்பு நிறம் வெளிப்புறம் இருக்கும், இரண்டு வானவில் தெரியும் போது இரண்டாவது வானவில்லில் சிவப்பு நிறம் உட்புறம் இருக்கும்.

உகந்த சூழ்நிலைகளில் சூரியன் இருக்கின்ற திசையை நோக்கி கிளிக் செய்தால் தான் மூன்று அல்லது நான்கு வானவில்லைப் படமாக்க முடியும் என்பது லீ கூறிய விதிகளில் முக்கியமானது.

No comments:

Post a Comment