Oct 26, 2011

வானில் பறந்து செல்ல ‘சூரியக் கப்பல்’

Share Subscribe

 நீங்கள் மேலே காண்பது சூரியக் கப்பல் எனப்படும் அபூர்வமான விமானம் ஆகும்.  எந்த எரிபொருளும் இல்லாமல் பறந்து செல்லக்கூடியது. ஆனாலும் இது வழக்கமான விமானம் அல்ல. ஏனெனில் இதற்கு இறக்கைகள் கிடையாது. இறக்கைகள் இல்லாமல் எந்த விமானமும் பறக்க இயலாது. இது ஹெலிகாப்டரும் அல்ல - ஹெலிகாப்டருக்கு தலைக்கு மேலே சுழல் விசிறிகள் உண்டு.

விமானம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்பு ஆகாயக் கப்பல் என்ற வான் வாகனம் இருந்தது. அது காற்றை விட லேசான வாயு நிரப்பப்பட்டது. சூரியக் கப்பலும் அந்த மாதிரியில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்டதாகும். இந்த காரணத்தால் தான் சூரியக் கப்பலின் பெயரில் ’கப்பல்’என்ற சொல் ஒட்டிக்கொண்டுள்ளது. ஹீலியம் வாயு அடங்கியது என்பதால் அது வடிவில் பெரியதாக இருக்கிறது.
 சூரியக் கப்பலின் மேற்புறம்
   
சூரியக் கப்பலின் மேற்புறத்தில் நிறைய சூரிய சக்திப் பலகைகள் (Solar panels) பொருத்தப்பட்டுள்ளன .இவை மின்சாரத்தை அளிக்கும். சூரியக் கப்பல் வானில் முன்னோக்கிச் செல்வதற்கு உதவும் மோட்டார்கள் இயங்க இந்த மின்சாரம் உதவும். சூரியக் கப்பலில் பிரிட்ஜ் இருக்கும். விசேஷ வகை மருந்துகளை இதில் எடுத்துச் செல்லலாம்.

 சூரியக் கப்பல் தரையிலிருந்து கிளம்பவோ தரை இறங்கவோ நீண்ட ஓடுபாதை தேவையில்லை. பள்ளிக்கூட சிறிய மைதானம் அளவுக்குத் திறந்த வெளி இருந்தால் போதும்.சிறியது, நடுத்தரம், பெரியது என மூன்று மாடல்களில் இவை தயாரிக்கப்படும். சிறிய மாடல் ஒரு டன் சரக்கு ஏற்றிக்கொண்டு, அதிகபட்சம் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியது. பெரிய மாடலில் 30 டன் அளவுக்கு சரக்கு ஏற்றிச் செல்லலாம்.


பூகம்பத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்ல சூரியக் கப்பல் ஏற்றதாக விளங்கும். தவிர, தகுந்த சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு - விமானமோ, ஹெலிகாப்டரோ போய் இறங்க முடியாத பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பவும் நிபுணர்கள் செல்லவும் இந்த வாகனம் உதவியாக இருக்கும்.

கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சூரியக் கப்பலை உருவாக்கியுள்ளது. இதன் நிறுவனரான ஜே காட்சால் ஆப்பிரிக்காவில் மருந்து சப்ளை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இப்படியான ஒரு வாகனத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குது தோன்றியது. பல முயற்சிகளுக்குப் பிறகு அவரது கனவு நனவாகியது.

சூரியக் கப்பல் சோதனை ஓட்டமாகப் பல தடவைகள் பறந்துள்ளது. சிறிய மாடல் இந்த ஆண்டுக் கடைசிக்குள்ளாகக் களத்தில் சோதிக்கப்படும்.

2 comments:

ஜோசப் இஸ்ரேல் said...

நல்ல புதிய தகவல் .. பகிர்வுக்கு நன்றி

Siraju said...

புதிய தகவல் தெரிந்துகொண்டோம். நன்றி

Post a Comment