Oct 21, 2011

சிட்டுகுருவி, சிட்டுக்குருவி...

Share Subscribe
”சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா...” என்று பழைய சினிமாப் பாட்டு உண்டு. ஆனால் இப்போது சிட்டுக்குருவியே ஒரு சேதி (செய்தி ) ஆகிவிட்டது. அது மட்டுமல்ல, சிட்டுக்குருவி நம்மை விட்டு பிரிந்தே போய் விடுமோ என்றும் தோன்றுகிறது.

சென்னை, கோவை போன்ற தமிழக நகர்களில் சிட்டுக்குருவிகள் மிக அரிதாகி விட்டன. நாட்டின் இதர நகரங்களிலும் இதே நிலை தான்.  ஐரோப்பிய நாடுகளிலும் சிட்டுக்குருவிகள் மாயமாய் மறைந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இங்கிலாந்தில் 1970 களில் சிட்டுக்குருவி பேரெண்ணிக்கையில் காணப்பட்டது. இப்போது அவற்றில் 68 சதவிகிதம் மறைந்து விட்டது. லண்டன் நகரைப் பொருத்த வரை மத்திய பகுதியில் சிட்டுக்குருவிகள் மிக அபூர்வமாகவே தென்படுகின்றன எனறு கூறப்படுகிறது.


சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட வேண்டிய பறவை இனம் என அறிவிக்க வேண்டியிருக்கும் என்ற அளவுக்கு நெதர்லாந்து நாட்டில் மறைந்து வருகின்றது. வட அமெரிக்காவிலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

போதிய இரை கிடைக்காதது, கூடு கட்ட இடமின்மை போன்ற காரணங்களால் சிட்டுக்குருவிகள் மறைந்து வரலாம் என ஆரம்பத்தில் பொதுப்படையாகக் கூறப்பட்டு வந்தது. எனினும் இது குறித்து  கடந்த சில ஆண்டுகளில் கனடா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா என பல நாடுகளில் ஆய்வுகள் நடந்துள்ளன. ஸ்பெயின் நாட்டில் விரிவாக ஆய்வு நடத்திய இரு நிபுணர்கள் சிட்டுக்குருவிகள் மறைந்து வருவதற்கும் செல் போன் டவர்களிலிருந்து வெளிப்படுகின்ற சிக்னல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

செல் போன் டவர்களிலிருந்து வெளிப்படும் சிக்னல்கள் சிட்டுக்குருவிகளை மலடாக்கி விடுவதாகக் கூறப்படுகிறது. தவிர, கூடுகளில் சிட்டுக்குருவிகள் இடும் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்படுவதில்லை. முட்டைகள் அப்ப்டியே அழுகிப் போய் விடுவதாகவும் சொல்லப்படுகிறது.

செல் போன் டவர்களிலிருந்து வெளிப்படும் சிக்னல்களால் ஏற்படும் விளைவுகளை ஆராய இந்தியாவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. இக் குழுவினர் இந்தியாவில் மட்டுமன்றி வெளி நாடுகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த சிக்னல்களால் பறவைகள் பாதிக்கப்படுவதாக இக்குழுவினர் அண்மையில் வெளிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சிட்டுக்குருவிகள் மறைந்து வரும் நிலையில் அவற்றைக் காக்கும் பொருட்டு உலக அளவில் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதியை சிட்டுக்குருவி தினமாகப் பின்பற்றி வருகின்றனர். சிட்டுக்குருவிகள் அழிவது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் மார்ச் 20 ஆம் தேதியை சிட்டுக்குருவிகளின் நினைவு தினமாக அனுஷ்டிக்க வேண்டி வரலாம்.

1 comment:

Siraju said...

உண்மை.சிட்டுகுருவியுடன், சேர்த்து வண்ணதுப்பூச்சிக்கும் இதே நிலைதான். அவசியமான கட்டுரை

Post a Comment