Oct 11, 2011

திமிங்கிலப் போர்

Share Subscribe
இது திமிங்கிலங்களைப் பிடிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று கூறுகின்ற ஜப்பானுக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கத்தினருக்கும் இடையிலான போர்.

உலகின் கடல்களில் பல வகைத் திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனாலும் பல நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இந்த ஆண்டும் திமிங்கிலங்களைப் பிடிக்க கப்பல்களை அனுப்பப் போவதாக ஜப்பான் சில நாட்களுக்கு முன் அறிவித்தது..  திமிங்கில வேட்டையாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க பல கப்பல்கள் உடன் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

ஜப்பானின் இத் திமிங்கில வேட்டையை முறியடிக்க எங்கள் கப்பல்கள் த்யார் என்று கடல் மேய்ப்பர் என்னும் இயக்கத்தினர் பதிலுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆக, வருகிற டிசம்பரில் அண்டார்டிக் கண்டத்தை ஒட்டிய கடலகளில் இரு தரப்பினருக்கும் மோதல் நிச்சயம்.  இந்த மோதல் புதியதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருவதாகும்.

அண்டார்டிக்கை யொட்டியுள்ள கடல்களில் இயற்கையில் நிறைய இரை கிடைப்பதால் அப் பகுதியானது திமிங்கிலங்களின் தாயகம் போல உள்ளது. இங்கு யாரும் திமிங்கில வேட்டையில் ஈடுபடாலாது என்று சர்வதேச திமிங்கில கமிஷன் தடை விதித்துள்ளது. ஆனாலும் இத் தடை அமல்படுத்தப்படாத நிலையில் உள்ளது. இதல்லாமல் வர்த்தக ரீதியில் உலக அளவில் எந்த நாடும் திமிங்கில வேட்டையில் ஈடுபடலாகாது என்ற தடை 14 ஆண்டுக்காலமாக இருந்து வருகிறது.

ஆனால் ஆராய்ச்சி நோக்கில் திமிங்கிலங்களைப் பிடிக்கலாம் என 1951 ஆம் ஆண்டு ஒப்ப்ந்தத்தில் ஒருஷரத்து உள்ளது. இந்த ஓட்டையை ஜப்பான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திமிங்கிலங்களைப் பிடிக்க ஆண்டுதோறும் அண்டார்டிக் கடல் பகுதிக்குக் கப்பல்களை அனுப்பி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ‘ ஆராய்ச்சி ‘ என்ற பெயரில் ஜப்பான் 1000 திமிங்கிலங்களைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

ஜப்பானின் திமிங்கில வேட்டையை அக் கடல் பகுதிக்கே சென்று எதிர்த்துப் போராட இருக்கின்ற கடல் மேய்ப்பர் இயக்கத்தினர் நியாயத்தை நிலை நாட்ட வன்முறையில் ஈடுபடுவது தவறல்ல என்று வாதிப்பவர்கள். கடந்த ஆண்டுகளில் அவர்கள் கையாண்ட முறைகள் இதையே காட்டுகின்றன.

திமிங்கில வேட்டைக் கப்பல்கள் மீது தங்களது கப்பல்களை மோதி சேதத்தை உண்டாக்குவது.. அக் கப்பல்களில் ஏறி மீன் பிடி வலைகளை நாசப்படுத்துவது. துறைமுகங்களில் நிறுத்தப்படுகிற திமிங்கில வேட்டைக் கப்பல்களைத் தாக்குவது.  நடுக்கடலில் கப்பல்களின் ஊழியர்களை நோக்கி லேசர் ஒளிக் கற்றையைச் செலுத்தி அவர்களின் கண்களைக் கூச வைப்பது, துப்பாக்கியால் சுடுவது போன்றவை கடல் மேய்ப்பர் கையாளும் முறைகளில் அடங்கும்.
திமிங்கில வேட்டைக் கப்பல்

கடல் மேய்ப்பர் இயக்கத்தின் தலைவரான ‘கேப்டன்’ பால் வாட்சன் பிரபல கிரீன்பீஸ் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்றாலும் அவர் பின்பற்றிய முறைகள் காரணமாக 1977 ல் வெளியேற்றப்பட்டார். வாட்சனின் இயக்கத்தினர் ஜப்பானியக் கப்பல்களை மட்டுமன்றி பிற நாடுகளின் கப்பல்களையும் தாக்கியது உண்டு.

திமிங்கிலங்களைத் தாங்கள் வேட்டையாடுவதற்கு ஜப்பான் காரணம் கூறுகிறது. தங்களது உணவில் எப்போதுமே 50 சதவிகித அளவுக்கு திமிங்கில இறைச்சி இடம் பெற்று வருவதாக அது கூறுகிறது. ஜப்பானில் பள்ளிகளின் மதிய உணவிலும் திமிங்கில இறைச்சி இடம் பெற்றுள்ளது. இன ரீதியில் தங்களுக்கு எதிராக இந்த இயக்கம் நடத்தப்படுவதாகவும் அது குற்றம் சாட்டுகிறது.

ஜப்பான் தங்கள் நாட்டுக்கு அருகில் தங்களது ஆதிபத்தியத்துக்கு உட்பட்ட கடலில் திமிங்கில வேட்டை நடத்தினால் பெரிய எதிர்ப்பு இருக்கப் போவதில்லை. ஆனால் அவர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் திமிங்கிலங்களின் தாயகமாக உள்ள பகுதிக்குப் போய் வேட்டை நடத்துவதால் தான் பிர்ச்சினை. இக் கடல் பகுதிக்கு ஜப்பான் வந்து திமிங்கில வேட்டை நடத்துவது அண்டார்டிகா அருகே உள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால் அவை ஜப்பானுடன் நேரடியாக மோத விரும்பவில்லை.

’ ஆராய்ச்சி’ என்ற போர்வையில் திமிங்கில வேட்டை கூடாது என்று இந்தியா உட்பட 89 நாடுகள் அங்கம் வகிக்கும் சர்வதேச திமிங்கில கமிஷன் கூட்டத்தில் தீர்மானம் போட்டால் ஜப்பானை வழிக்குக் கொண்டு வர முடியும்.  ஜப்பான் போலவே அடம் பிடிக்கும் நார்வே நாட்டையும் அது கட்டுப்படுத்துவதாக இருக்கும். ஆனால் பல உறுப்பு நாடுகளுக்கு ஜப்பான் பணம் கொடுத்து அவற்றின் ஓட்டுகளை விலைக்கு வாங்கி வருவதாக ஒரு புகார் உண்டு. எது எப்படியோ உலகில் திமிங்கில வேட்டை நீடித்து வருகிறது.

No comments:

Post a Comment