Oct 12, 2011

மிலான் நகரில் கார்களை ஓட்டிச் செல்லத் தடை

Share Subscribe
ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை யாரும் கார்களை ஓட்டிச் செல்லக்கூடாது என்று இத்தாலி நாட்டின் வட பகுதியில் உள்ள மிலான்(Milan) நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஓட்டிச் சென்றவர்களுக்குத் தலா ரூ 8000 அபராதம் விதிக்கப்பட்டது. பனி மூட்டமும் வாகனங்களின் புகையும் சேர்ந்து நகரைக் கவ்வி காற்றில் அசுத்தக் கலப்பு அளவு மீறிப் போனதால் இத்தடை.

கிட்டத்தட்ட வீட்டுக்கு ஒரு கார் என்ற நிலைமை உள்ள பல மேலை நாடுகளின் இச் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சூரியனைக் கண்ட பனி போல‘ என்று சொல்வார்கள்.  இது தமிழகம் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளுக்குப் பொருந்தும். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலைமை வேறு. சில சந்தர்ப்பங்களில் சூரிய உதயத்துக்குப் பிறகும் பனி மூட்டம் அப்படியே இருக்கும்.   பெரிய கண்ணாடிப் பலகையைப் போட்டு வான் பகுதியை மூடிவிட்டது போன்ற நிலைமை ஏற்படும். இதை smog என்று கூறுவார்கள்.

ஆலைகளிலிருந்தும் வாகனங்களிலிருந்தும் வெளியேறும் புகையானது மேலே சென்று விடாமல் கிட்டத்தட்ட தரை மட்டத்தில் அப்படியே நிற்க, நம்மூரில் ஹோமப் புகை சூழ்ந்த அறைக்குள் சிக்கியது போன்ற நிலைமை ஏற்படும். அல்லது போகிப் பண்டிகையன்று காலை 8 மணிக்கு வெளியே சென்றால் காணக்கூடிய நிலைமையை விட மோசமாக இருக்கும்.

சுமார் 13 லட்சம் மக்கள் தொகையைக்  கொண்ட மிலான் நகரின் வான் பகுதியானது ஐரோப்பாவிலேயே மிக அதிகமான அளவுக்கு அசுத்தம் கொண்டது என செயறகைகோள்கள் மூலம் எடுத்த படங்கள் காட்டுகின்றன.

அருகே உள்ள படத்தை உற்றுக் கவனித்தால் இத்தாலி தெரியும். அதன் வட புறத்தில் கரும் சிவப்பாகத் தெரியும் பகுதியில் தான் மிலான் நகரம் உள்ளது. காற்றில் மாசு அதிகம் இருப்பதன் காரணமாக்வே படத்தில் அப்பகுதி கரும் சிவப்பாகத் தெரிகிறது.

காற்றில் அசுத்தக் கலப்பு அதிகரித்தால் ஆஸ்த்மா உட்பட பல வகையான நுரையீரல் கோளாறுகள் ஏற்படலாம்.

மிலானில் காற்றின் அசுத்த நிலைமையை சமாளிக்க அதிகம் புகை விடும் வாகனங்கள் முதலில் தடை செய்யப்பட்டன. நிலைமை சீரடையவில்லை. ஆகவே தான் அக்டோபர் 9 (2011), ஞாயிற்றுக்கிழமையன்று கார்கள் மீது அடியோடு தடை விதிக்கப்பட்டது. சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கார்கள் தடையினால் பாதிக்கப்பட்டன.

சுவாசிக்கும் போது மூச்சுடன் உள்ளே செல்லக்கூடிய நுண் துகள்கள் ஒரு கன மீட்டர் காற்றில் எந்த அளவுக்கு (RSPM) உள்ளது என்பதை வைத்து காற்றின் தூய்மைக்கேடு அளவிடப்படுகிறது. மிலான் நகரில் இது தொடர்ந்து 12 நாட்களுக்கு 50 மைக்கோ கிராமுக்கு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இத்துடன் ஒப்பிட்டால் RSPM சென்னை தியாகராய நகரில் 121 மைக்ரோ கிராம் அளவுக்கும் கீழ்ப்பாக்கம் பகுதியில் 91 மைக்ரோ கிராம் அளவுக்கும் இருந்ததாக கடந்த மாதம் வெளியாகிய ஒரு தகவல் கூறுகிறது.  காற்றில் அசுத்தக் கலப்பு அளவு இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதைப் போலவே நேரத்துக்கு நேரம் மாறுபடும். காற்று எந்த அளவுக்கு வீசுகிறது என்பதைப் பொருத்தும் மாறுபடும்.

இந்தியாவிலும் சீனாவிலும் கார்ப் பெருக்கம் அதிகரித்து வருவதால் காற்றில் அசுத்தக் கலப்பு அளவு உயர்ந்து வருகிற்து என்று கடந்த ஆண்டில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது அறிக்கையில் கூறியது. சீனாவில் நிலைமை மோசமே. இந்தியாவில் காற்று மாசுக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த விஷயத்தில் அக்கறை காட்டி வந்தாலும் வேறு எவ்வளவோ பிரச்சினைகள் இருப்பதால் போதிய முனைப்பு இல்லை; போதுமான நிதி ஒதுக்கீடும் இல்லை.உதாரணமாக, காற்று அசுத்தக் கலப்பை கண்காணிப்பதற்கு சென்னை நகரில் ஐந்து இடங்களில் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இரு இடங்களில் இவற்றை நிறுவ போதிய நிதி இல்லை.

No comments:

Post a Comment