Oct 18, 2011

என்ன பெயர் வைக்கலாம்?

Share Subscribe


 மேலே நீங்கள் படத்தில் காண்பது அமெரிக்காவில் நியு மெக்சிகோ (New Mexico) மாகாணத்தில் உள்ள ரேடியோ டெலஸ்கோப் (Radio telescope).  இப்போது இதை  முற்றிலுமாகப் புதிப்பித்திருக்கிறார்கள். புதிப்பித்ததும், புதிய பெயர் வைத்தால் என்ன என்று நிர்வாகிகளுக்குத் தோன்றியது. யார் வேண்டுமானாலும் ஒரு நல்ல பெயரை எங்களுக்குக் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் கூட ஒரு பெயரைக் கூறலாம்.

சாதாரண டெலஸ்கோப் 
மேற்கூறிய ரேடியோ டெலஸ்கோப் சாதாரண டெலஸ்கோப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. சாதாரண டெலஸ்கோப் என்றால் அதைப் பய்ன்படுத்தி கிரகங்களை அல்லது நட்சத்திர மண்டலங்களை நேரடியாகக் கண்ணால் பார்க்கலாம். இந்த வகை டெலஸ்கோப்புகளில் நீண்ட குழாய் இருக்கும். டெலஸ்கோப், கூடாரம் போன்ற கட்டுமானத்துக்குள் இருக்கும். வானை ஆராய இக்கட்டுமானத்தின் மேற்புறத்தில் திறப்பு இருக்கும்.   மிக நீண்டகாலம் வான் ஆராய்ச்சியாளர்கள் இவ்விதமாக சாதாரண டெலஸ்கோப் மூலம் தான் வானை ஆராய்ந்தனர்.

வானவியல் விஞ்ஞானிகள் சாதாரண டெல்ஸ்கோப்பைப் பயன்படுத்தும் போது வானில் உள்ள நட்சத்திரங்களின் ஒளியைத் தான் காண்கிறார்கள். கிரகம் என்றால் பிரதிபலிக்கப்பட்ட ஒளி.

ஆனால் வானில் உள்ள நட்சத்திரங்களிலிருந்தும் மற்றும் கோடானு கோடி நட்சத்திரங்களை உள்ளடக்கிய அண்டங்களிலிருந்தும் ஒளி மட்டுமன்றி காமா கதிர், எக்ஸ் கதிர், புற ஊதாக் கதிர், ரேடியோ அலைகள் என பல்வேறு அலைகள் வெளிப்படுவதாக சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் தெரிய வந்தது.

M 51  அண்டம் 
இவற்றில் காமா கதிர், எக்ஸ் கதிர் ஆகியவை பூமிக்கு வந்து சேராதபடி காற்று ம்ண்டலம் தடுத்து விடுகிறது. ஆனால் ரேடியோ அலைகள் தடுக்கப்படுவதில்லை. ஆகவே ரேடியோ அலைகள் மூலம் வானை ஆராய விஞ்ஞானிகள் முற்பட்டனர். இவ்விதமாக ரேடியோ டெலஸ்கோப் உருவாகியது.

அமெரிக்காவில் 1937 ல் முதலாவது ரேடியோ டெலஸ்கோப் நிறுவப்பட்டது. இதன் மூலம் ரேடியோ வானவியல் ( Radio Astronomy )  என வானவியலில் புதிய பிரிவு தோன்றியது. இப்போது இந்தியா உட்பட பல நாடுகளில் விதவிதமான ரேடியோ டெலஸ்கோப்புகள் உள்ளன்.

புனே அருகே உள்ள ரேடியோ டெலஸ்கோப் 
ரேடியோ டெலஸ்கோப் என்பது ரேடியோ அலைவரிசையிலான சிக்னலகளைத் திரட்டுவதாகும்  வீட்டு மாடிகளில் DTH  டிஷ் ஆண்டெனாக்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.  இதே மாதிரியில் ரேடியோ டெலஸ்கோப்புகளில்  பெரிய கிண்ண வடிவ ஆண்டெனாக்கள் உண்டு. இவ்வித ஆண்டெனாக்களுக்குப் பதில் கம்பி வலை வடிவிலான ஆண்டெனாக்களையும் பயன்படுத்துவது உண்டு.

அமெரிக்காவுக்குத் தெற்கே உள்ள போர்ட்டோ ரிக்கோ(Puerto Rico) தீவில் உள்ள ரேடியோ டெலஸ்கோப் உலகிலேயே மிகப் பெரியது. அத்தீவில் இயற்கையாக மிக அகன்ற குழிவு இருந்த்து. அதையே ரேடியோ டெலஸ்கோப்பின் கிண்ணம் போல மாற்றி ரேடியோ டெலஸ்கோப்பை நிறுவினர். ரேடியோ டெலஸ்கோப்புகளில் பல வகைகள் உள்ளன்.

ஊட்டியில் உள்ள ரேடியோ டெலஸ்கோப் 
புனே அருகே உள்ள ரேடியோ டெலஸ்கோப் ஒரு வகையில் உலகிலேயே பெரியது. தமிழகத்தில் ஊட்டியிலும் ஒரு வகையான ரேடியோ டெலஸ்கோப் உள்ளது.

அடுத்தடுத்து நிறைய ஆண்டென்னாக்களைப் பெற்றுள்ள டெலஸ்கோப்புகளும் உண்டு. இவற்றைத் தொகுப்பு ரேடியோ டெலஸ்கோப் என்று வருணிக்கின்றனர்.

அமெரிக்காவில் நியூ மெக்சிகோ ரேடியோ டெலஸ்கோப்புக்கு மீண்டும் வருவோம். இங்கு மொத்தம் 27 டிஷ் ஆண்டென்னாக்கள் உள்ளன். ஒவ்வொன்றும் 25 மீட்டர் குறுக்களவு கொண்டது. இந்த டிஷ அண்டென்னாக்கள் தண்டவாளங்கள் மீது அமைந்துள்ளன. வேண்டுமானால் இவற்றை நகர்த்தலாம்.

 இவ்ற்றைக் குறிப்பிட்ட வரிசையில் நிறுத்தினால் இவை அனைத்தும் சேர்ந்து 36 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட ஒரு பெரிய ஆண்டென்னாவுக்குச் சமமாக இருக்கும். இவ்விதமான ரேடியோ டெலஸ்கோப்புகள் அண்டவெளியில் கோடானு கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அண்டங்களை ஆராயவும் படம் எடுக்கவும் உதவுகின்றன்.

 நியூ மெக்சிகோவில் 1980 ல் செயல்பட ஆரம்பித்த ரேடியோ டெலஸ்கோப் இப்போது VLA (Very Large Array)  டெலஸ்கோப் என்ற உப்புசப்பற்ற பெயரைப் பெற்றதாக உள்ளது. மனதில் நிற்கத்தக்க எடுப்பான பெயர் வேண்டும் என்று இதன் நிர்வாகிகள் விரும்புகின்ற்னர். ஆகவே தான் நல்லதொரு பெயரைக் கூறும்படி கோருகின்றனர். நீங்கள் விரும்பினால் இந்த இணையதளத்துக்குச் சென்று ஒரு பெயரைக் கூறலாம்namethearray.org

1 comment:

chandrasekaran said...

பெயர் பரிந்துரை செய்பவர், அதற்கான விளக்கத்தையும் தெரிவிக்க அந்த இணையதளத்தில் ஒரு வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.

Post a Comment