Oct 24, 2011

அது ஒரு பூகம்ப நாடு

Share Subscribe
இது துருக்கி நாட்டின் மேப்.  இப்ப்டத்தில் சிவப்பு நிறத்தில் உள்ள பகுதிகள் அனைத்தும் கடும் பூகம்ப ஆபத்து கொணடவை. 
துருக்கி நாட்டின் கிழக்குப் பகுதியில் அக்டோபர் 23 ஆம் தேதி ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பூகம்பத்தின் ரிக்டர் அளவு 7.2. இக்கடும் பூகம்பத்துக்குப் பிறகு அந்த வட்டாரத்தில் அடுத்தடுத்து லேசான நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

உலகில் கடும் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ள நாடுகளில் துருக்கியும் ஒன்று. அதிலும் துருக்கியின் மலைப்பாங்கான கிழக்குத் துருக்கியில் கடந்த காலத்தில் எவ்வளோ பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன.

  அனடோலிய்ன் பிளேட் எனப்படும் சில்லு மீது துருக்கி அமைந்துள்ளது
துருக்கி நாடானது அனடோலியன் சில்லு மீது அமைந்துள்ளது. அனடோலியன் சில்லுக்கு வடக்கே யுரேசியன் சில்லும், தெற்கே அராபியன் சில்லும் உள்ளன. தெற்கே உள்ள அராபியன் சில்லு வடக்கு  நோக்கி நெருக்குவதால் அனடோலியன் சில்லு மேற்கு நோக்கி பிதுக்கப்படுகிறது.

அனடோலியன் சில்லுக்கு மேலேயும் கீழேயும் அடி நிலப் பாறைகளில் மிக நீண்ட விரிசல்கள்(Faults) உள்ளன. இவை கிழக்குக் கோடியில் கூடுகின்றன. இந்த இடத்தில் அடிக்கடி பூகம்பங்கள் நிகழ்கின்றன் - 1903 முதல் 1998 வரையிலான ஆண்டுகளில் மட்டும் துருக்கியில் 65 பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன.

பூகம்பம் மனிதனைக் கொல்வதில்லை என்று சொல்வதுண்டு. இடிந்து விழும் கட்டடங்கள் தான் உயிர்ப்பலி வாங்குகின்றன என்பதை இவ்விதம் கூறுகிறார்கள். கடும் பூகம்பத்தையும் தாங்கி நிற்கும் வகையில் கட்டடங்களைக் கட்டுவதில் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. துருக்கியில் பழங்காலப் பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்னும் நிறையவே உள்ளன.

 இப்படத்தில் புள்ளிகளாகக் காண்பவை கடந்த காலத்தில்
பூகம்பன் நிகழ்ந்த இடங்களாகும்

பூகம்ப ஆபத்தைக் கருதி துருக்கி அரசில் இதற்கென்றே தனி இலாகா உள்ளது. அண்மைக் காலமாக கட்டுமான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் இவையெல்லாம் நகராட்சிப் பிராந்தியங்களில் மட்டுமே அமலாகின்றன. கிராமப்புறங்களில் அப்படி இல்லை.வெயிலில் காய வைத்த செங்கல்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் பலவும் உண்டு.

துருக்கியில் நிகழும் பூகம்பங்களில் பல சமயம் கடும் குளிர் பிரச்சினையும் சேர்ந்து மக்களை வாட்டும். வீடிழந்தவர்கள் திறந்த வெளியில், கடும் குளிரில் தவிக்க நேரிடும். இப்போது கிழக்குத் துருக்கியின் வான்(Van) மாகாணத்தில் கடும் பூகம்பம் நிகழ்ந்த எர்சிஸ் நகர் பகுதியில் குளிர் 4 அல்லது 5 டிகிரி செண்டிகிரேட் அளவில் உள்ளது.

துருக்கியின் மேற்குப் பகுதியிலும் கடந்த காலத்தில் கடும் பூகம்பங்கள் நிறையவே நிகழ்ந்துள்ளன. 1999 ஆம் ஆண்டில் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் சுமார் 18,000 பேர் உயிரிழந்தனர்.

சில்லுப் பெயர்ச்சி பற்றி மேலும் படிக்க: சிக்கிமில் பூகம்பம் ஏற்பட்டது ஏன்

2 comments:

Siraju said...

உண்மை. பழைய கட்டிடங்களும் ஒரு காரணம்

மதுரை சரவணன் said...

arumaiyaana pathivu..vaalththukkal

Post a Comment