Oct 23, 2011

பூமியை நோக்கி வரும் அஸ்டிராய்ட்

Share Subscribe
அஸ்டிராய்ட் ஒன்று பூமி இருக்கின்ற திசையை நோக்கி இப்போது வேகமாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது பூமியின் மீது மோத வாய்ப்பே இல்லை என்று நிபுணர்கள் தெளிவுபடக் கூறியிருக்கிறார்க்ள.வருகிற நவம்பர் 9ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு அது பூமியை மிக அருகாமையில் கடந்து செல்லவிருக்கிறது.

  இபபடத்தின் மீது கிளிக் செய்தால் அஸ்டிராய்ட் YU55
எவ்விதமாகக் கடந்து செல்லும் என்கிற அனிமேஷன்
 படத்தைக் காணலாம். .படம்: நன்றி JPL/NASA

அக்கட்டத்தில் அந்த அஸ்டிராய்ட் பூமியிலிருந்து 3,25,000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். இது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தைக் காட்டிலும் குறைவு. அஸ்டிராய்ட் ஒன்று பூமிக்கு மிக அருகில் வருவது என்பது அபூர்வமே.

சூரிய மண்டலத்தில்அஸ்டிராய்டுகள்
சுற்றும் பாதை
அந்த அஸ்டிராய்டின் பெயர் 2005 YU55. அஸ்டிராய்டுகளுக்கு இப்போதெல்லாம் எண்களையும் எழுத்துக்களையும் பெயர்களாக வைக்கின்ற வழக்கப்படி அதற்கு YU55 என்று பெயர் வைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் அதையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதன் குறுக்களவு வெறும் 400 மீட்டர். ஆகவே அளவை வைத்து இந்த அஸ்டிராய்டை ’பறக்கும் குன்று‘ என்று வர்ணிக்கலாம்.

சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் நடுவே லட்சோப லட்சம் அஸ்டிராய்டுகள் கிரிவலம் வரும் பக்தர்களைப் போல கும்பல் கும்பலாக சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றைக் குட்டி கிரகங்கள் (Minor Planets)  என்றும் வர்ணிப்பதுண்டு. இந்த அஸ்டிராய்ட் கும்பலிலிருந்து வழி மாறி எண்ணற்ற அஸ்டிராய்டுகள் தனிப் பாதை அமைத்துக் கொண்டு சூரியனை சுற்றுகின்றன. அப்படி வழி மாறிய அஸ்டிராய்டுகளில் 2005 YU55 அஸ்டிராய்டும் ஒன்று.

அஸ்டிராய்ட் 2005 YU55
வழி மாறிய அஸ்டிராய்டுகள் செவ்வாய், பூமி, வெள்ளி, புதன் ஆகிய கிரகங்களின் சுற்றுப்பாதைகளைக் குறுக்காக கடந்து சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன. இவ்விதம் பூமியின் சுற்றுப்பாதையைக் கடக்கும் போது தான் அவை பூமிக்கு அருகாமையில் வருகின்றன.இப்படிக் கடக்கும் போது இவற்றில் ஏதேனும் ஒன்று ஒரு வேளை பூமியில் மோத வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே தான் அமெரிக்காவின் நாஸா அமைப்பு இதே வேலையாக பூமிக்கு ஒரு வேளை ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அஸ்டிராய்டுகளைத் தேடிக் கண்டுபிடித்து சுற்றுப்பாதை உட்பட அவை பற்றிய விவரங்களை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளது. சமீபத்திய கணக்குப்படி 1256 அஸ்டிராய்டுகள் இவ்விதம் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை 100 மீட்ட்ருக்கும் மேலான குறுக்களவைக் கொண்டவை.

   
 நீல நிறத்தில் உள்ளது YU55 அஸ்டிராய்டின்
சுற்றுப்பாதை
அமெரிக்காவுக்கும் அப்போதைய சோவியத் யூனியனுக்கும் (ரஷியா) இடையே 1990 வரை கடும் விரோதப் போக்கு நீடித்து வந்தது.

வானில் சோவியத் யூனியன் செலுத்தும் ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக அப்போது அமெரிக்கா நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை உருவாக்கியது.

அமெரிக்கா-ரஷியா இடையிலான விரோதம் நீங்கிய பின்னர் அஸ்டிராய்டுகளைக் கண்காணிக்க இவை உதவலாயின. அமெரிக்கா இத்துறையில் மேலும் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி வருகிறது.

1 comment:

Anonymous said...

அய்யா இது என் மனதில் தோன்றிய கேள்வி

நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களும், வால் நட்ச்சத்திரங்களும் மற்றும் அஷ்டிராய்டுகளும் சூரியனை சுற்றி வருகின்றன.


ஒரு வெளை நம் விஞ்ஞானம் முன்னேற்ற்ம் அடைந்து நாம் புளூட்டோவையும் தாண்டி விண்கலம் அனுப்பினால் அவை சூரிய குடும்பத்தை தாண்ட முடியாமல் சூரியன் கட்டுபாட்டில் வட்டம் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருமா?
அருள்

Post a Comment