Oct 15, 2011

சூரியன் மூலம் 24 மணி நேர மின் உற்பத்தி

Share Subscribe

மாலையில் சூரியன் அஸ்தமித்து விடுகிறது. அதன் பிறகு இரவு முழுவதும் எப்படி சூரியனைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய இயலும்? அதற்கு கொதிக்கும் நிலையில் உள்ள உப்புகள் உதவுகின்றன. மேலே உள்ள படத்தைக் கவனிக்கவும். படத்தில் நட்ட நடுவே பெரிய டவர் உள்ளது. அதன் உச்சியில் ஒரு கொள்கலத்தில் தான் உப்புகள் உள்ளன. டவரைச் சுற்றிலும் தரையில் சுமார் 2500 கண்ணாடிப் பலகைகள் உள்ளன. இவை முக்ம் பார்க்கும் கண்ணாடி போன்றவை.

     பகல் நேரத்தில் நீங்க்ள திறந்த வெளியில் நின்றபடி முகம் பார்க்கும் கண்ணாடியைக் கையில் வைத்துக் கொண்டு பக்கவாட்டில் அதைத் திருப்பினால் அக் கண்ணாடியில் விழும் சூரிய ஒளியானது குறிப்பிட்ட திசையில் ஏதாவது ஓரிடத்தில் போய் விழும். பிரதிபலிக்கப்பட்ட ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும். அது மாதிரியில் மேலே படத்தில் டவரைச் சுற்றியுள்ள கண்ணாடிகள் அனைத்தும் சூரிய ஒளியை டவரின் உச்சியை நோக்கித் திருப்பும்.

வானில் சூரியன் நகருவதற்கு ஏற்ப இக் கண்ணாடிகள் அனைத்தும் தொடர்ந்து மிக ஒழுங்காகத் தாமாக மெல்ல நகர்ந்து எப்போதும் டவரை நோக்கி ஒளியைப் திருப்பிக் கொண்டிருக்கும். இந்த வேலையைக் கம்ப்யூட்டர் கவனித்துக் கொள்கிறது.  எல்லாப் புறங்களிலிருந்து இவ்விதம் டவரின் உச்சியை நோக்கி சூரிய ஒளி தாக்கும் போது உச்சியில் இருக்கும் கொள்கலத்தில் உப்புகள் மிகுந்த அளவுக்குச் சூடேறிக் கொதிக்க ஆரம்பிக்கும். அவை அங்கிருந்து குழாய்கள் மூலம் கீழே தொட்ர்ந்து சென்று கொண்டிருக்கும்.

கொதிக்கும் உப்புக் குழம்பு, கீழே தண்ணீரை ப்ல நூறு டிகிரி செண்டிகிரேட் அளவுக்கு சூடேற்றும். இதன் விளைவாகத் தோன்றும் நீராவியானது ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சுருங்கச் சொன்னால் நீராவி உற்பத்திக்கு சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

டவருக்கு அருகே தரையில் கொதிக்கும் உப்புக் குழம்பைச் சேமித்து வைப்பதற்குத் தனி டாங்கி உள்ளது. சூரியன் அஸ்தமித்த பிறகு டாங்கியில் உள்ள கொதிக்கும் உப்புக் குழம்பானது நீராவியை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பலனாக இரவிலும் தொடர்ந்து மின் உற்பத்தி சாத்தியமாகிறது. டாங்கியில் உள்ள  கொதிக்கும் உப்புக் குழம்பைக் கொண்டு மட்டும் 15 மணி நேரம் தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய இயலும்.

ஸ்பெயின் நாட்டில் நிறுவப்பட்டுள்ள இந்த சூரிய வெப்ப மின் உற்பத்தி நிலையம் இம் மாதம் 4 ந் தேதி முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இது சுமார் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரத்தை வழங்கி வரும்.

சூரிய ஒளியை இவ்விதம் பயன்படுத்தும் திட்டத்தில் உள்ள் பிரச்சினை இது மிக நிறைய இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதாகும். ஸ்பெயினில் உள்ள இந்த நிலையம் 185 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

தவிர, இது 17 மெகாவாட் மின்சாரத்தைத் தான் உற்பத்தி செய்கிறது.. ஜன அடர்த்தி குறைவாக உள்ள, நிறையக் காலி நிலம் இருக்கின்ற சிறிய நாடுகளுக்கு மட்டுமே இது உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தவிர, ஆண்டில் பெரும்பாலான நாட்கள் வெயில் அடிக்கின்ற இடத்தில் தான் இதை நிறுவ முடியும்.

2 comments:

journal said...

how it is possible for 24hrs

என்.ராமதுரை / N.Ramadurai said...

journal
நீங்கள் தலைப்பை மட்டும் படித்துள்ளதாகத் தோன்றுகிறது. இரவில் எப்படி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்குத் தேவை நீராவி. கொதிக்கும் உப்புக் குழம்பானது இரவு வேளையில் வெப்பத்தைத் தொடர்ந்து அளிக்கிறது. இதன் மூலம் நீராவி உண்டாக்கப்பட்டு இரவிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Post a Comment