Oct 27, 2011

தியாகராஜாவில் விசித்திரப் பள்ளங்கள்

Share Subscribe
புதன் கிரகத்தில் ஓரிடத்தின் பெயர் தியாகராஜா.அங்கும் சரி, பிற இடங்களிலும் சரி, விசித்திரப் பள்ளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வரும் மெசஞ்சர் விண்கலம் இப்பள்ளங்களைக் கண்டுபிடித்தது. இவை எப்படித் தோன்றின என்பது விஞ்ஞானிகளுக்குப் புதிராக உள்ளது.

புதன் காய்ந்து வற்றலாகிப் போய்விட்ட கிரகம். பூமியுடன் ஒப்பிட்டால் அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதல்லாமல் புதன் கிரகத்தில் தொடர்ந்து 88 நாட்கள் பகல். ஆகவே பகலாக உள்ள இடத்தில் வெப்பம் அதிகபட்சம் 450 டிகிரி செண்டிகிரேட். இரவாக உள்ள இடத்தில் குளிர் மைனஸ் 170 டிகிரி செண்டிகிரேட்.
புதன் கிரகத்தை ஆராயும் மெசஞ்சர்.
ஓவியர் வரைந்த படம்

 புதன் காய்ந்து பொசுங்கிப் போன பொட்டல். ஏதோ ஒரு காலத்தில் எண்ணற்ற விண்கற்கள் வந்து தாக்கியதால் ஆங்காங்கு வட்ட வடிவில் பெரும் பள்ளங்கள் உள்ளன். கோடானு கோடி ஆண்டுகளாக புதன் கிரகம் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே இருந்து வருகிறது.

மாற்றம் எதுவுமே இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட புதன் கிரகத்தின் பாறைகளில் இப்போது பள்ளங்கள் காணப்படுகின்றன என்பது தான் புது விஷயமாகும். இவை விண்கற்கள் தாக்கிய காலகட்டத்தில் ஏற்பட்டவை அல்ல. நிச்சயம் பின்னர் ஏற்பட்டவையே என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். புதன் கிரகத்தில் காற்று கிடையாது. மேகம் கிடையாது. மழை என்பதே இல்லை. ஆகவே நிச்சயம் நீர் அல்லது காற்றினால் இப்பள்ளங்கள் தோன்றியிருக்க முடியாது.

தியாகராஜாவில் உள்ள பள்ளங்கள் 
பொதுவில் இப்பள்ளங்கள் 18 மீட்டர் முதல் 1600 மீட்டர் குறுக்களவு கொண்டவையாக உள்ளன. ஆழம் சுமார் 20 மீட்டர் முதல் 36 மீட்டர் வரை உள்ளன. பாறைகளில் இப்படியான பள்ளங்கள் எப்படி ஏற்பட்டன என்பது தான் கேள்வி.விண்கற்கள் தாக்குவதால் ஏற்படும் வட்ட வடிவப் பள்ளங்களின் நட்ட நடுவே பொதுவில் குன்றுகள் காணப்படும் (சந்திரனில் இப்படி உண்டு).

 இக்குன்றுகள் விண்கல் தாக்கும் போது புதன் கிரகத்தின் உட்புறத்திலிருந்து வெளியே தள்ளப்பட்ட பொருட்களால் ஆனவை. இவை மிக கெட்டியாக இருப்பதில்லை. அத்துடன் கந்தகம் போன்று எளிதில் ஆவியாகக் கூடிய பொருட்களால் ஆனவை.

புதனில் வீசும் கடும் வெப்பம், அத்துடன் சூரியலிருந்து வெளிப்படும் சூரியக் காற்றின் தாக்குதல் ஆகியவை காரணமாக அங்குள்ள பாறைகளிலிருந்து ஆவியாகும் பொருட்கள் வெளியேறி இருக்க வேண்டும். இதனால் புரையோடிப் போய் திடமிழந்த பாறைகள் தளர்ந்து உள்ளே இறங்கியிருக்க வேண்டும். இவ்விதமாகத் தான் பாறைகளில் பள்ளங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

புதன் கிரகத்தை ஆராயும் மெசஞ்சர் விண்கலம் இப்பள்ளங்களைப் படம் எடுத்து அனுப்பியுள்ளது.

  விசித்திரப் பள்ளங்களைக் காட்டும் இன்னொரு
படம். மெசஞர் எடுத்தது.
மெசஞ்சர் கடந்த மார்ச் மாதம் முதல் புதன் கிரகத்துக்கு மேலாக அமைந்தபடி சுற்றிச் சுற்றி வருகிறது. செவ்வாய் கிரகத்தை ஆராய எண்ணற்ற விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ள அதே நேரத்தில் புதன் கிரகத்தை ஆராய ஒரு விண்கல்ம அனுப்பப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.

புதன் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள எல்லா இடங்களுக்கும் நிபுணர்கள் பெயர் வைத்துள்ளனர்.அங்குள்ள வட்ட வடிவப் பள்ளங்கள் சிலவற்றுக்கு ஆண்டாள், தியாகராஜா, காளிதாசா, அசுவகோஷா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

1 comment:

Anonymous said...

ஆகா .. நன்றி.. புதன் கிரகத்தின் சில இடங்களுக்கு தமிழ் பெயர்கள் ..
இந்த தகவல் எல்லாம் எங்க இருந்து புடிகிறேங்க ..

Post a Comment